திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்களை தூளாக்கி, ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை தொழிற்சாலையில் அதிகபட்ச வெப்பநிலையில் கொதிகலன் கொதித்துக் கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் வழக்கம்போல் கொதிகலன் மூடியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கொதிகலன் பயங்கர சத்தத்துடன் கண் இமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது.
அதில் கொதிகலன் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 வடமாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாகத் தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா(35) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குந்தன் (21) என்றும், படுகாயமடைந்தவர்கள் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (21), விதூர் (18) மற்றும் சாயல் (18) என்றும் தெரியவந்துள்ளது. போலீஸார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளரிடமும், விபத்தின் போது பணியிலிருந்த ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொதிகலன் வெடித்து 2 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/two-labours-died-in-a-boiler-blast-in-gummidipoondi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக