பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் வீறுகொண்டு எழுந்த காலத்தில், மதுரை மண்ணில் தொடங்கியது, சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை. இவர், விடுதலைப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், விடுதலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர்; மூன்று ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் ஆளாய் பங்கேற்றவர்; மக்கள் பிரச்னைகளுக்காக நீண்டநெடிய போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமைகளுக்குரிய சங்கரய்யா, 100-வது வயதிலும் ஒரு மூத்த போராளியாய் நம்மிடையே வாழ்கிறார்.
அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கமும் சந்தித்திராத சங்கரய்யாவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பேட்டி கண்டிருந்தது ஆனந்த விகடன். அந்த பேட்டியின் சுருக்கம் இங்கே!
“விடுதலைப் போராட்டம் தொடங்கி, பொது வாழ்க்கையில் நீண்டகால அனுபவம் கொண்டவர் நீங்கள். வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?”
“பல கஷ்டங்களுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தை எதிர்த்துப் போராடினோம். அன்றைக்கு, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருந்தோம் என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தோழர்கள், ஃபார்வர்டு ப்ளாக் எனப் பலருடைய நோக்கமும் சுதந்திரத்தை நோக்கியே இருந்தது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்துக்கு காந்தி தலைமை தாங்கினார். இளைஞர் இயக்கத்துக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் பெரும் உந்துசக்தியாக இருந்தனர். எல்லாருமே போராடினோம். அந்த ஒற்றுமைதான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இங்கிருந்து விரட்டியடித்தது. அதைப் பற்றி பேசவேண்டுமென்றால், பேசிக்கொண்டே இருக்கலாம். கடந்த காலத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்.”
“அப்போது இருந்த ஒற்றுமை....”
(கேள்வியை முடிக்கும்முன்னே பேச ஆரம்பிக்கிறார்) தற்போது அந்த ஒற்றுமை, முக்கியத் தேவையாக இருக்கிறது. அதற்கு அச்சுறுத்தலாக நிறைய விஷயங்கள் வந்துவிட்டன. இந்தியா என்பது, பல மதங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நாடு. எல்லோருமே இங்கு சமத்துவமாக நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்திய அரசியல் சாசனத்தின்படி, அனைத்து மக்களின் மதம் சார்ந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒற்றை மதத்தின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பன்முகக் கலாசாரம் கொண்ட இந்தியாவில், ஒற்றைக் கலாசாரத் திணிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியாவில், எல்லா மொழிகளும் சமமானவை. அதில், பாரபட்சமே இருக்கக் கூடாது. சிறுபான்மை மக்களின் மனதில், இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுபோல, அவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடக்கிறது.”
“மத்திய பி.ஜே.பி அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். ஆனால், அவர்கள் பெரிய சாதனைப் பட்டியலை அடுக்குகிறார்களே?”
“சாதனை என்று அவர்கள் எதைச் சொல்கிறார்கள்? பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி-யையும்தானே? இன்றைய பொருளாதாரத் தேக்கத்துக்கும், வேலையின்மை அதிகரித்திருப்பதற்கும், தொழில்துறை உற்பத்தி குறைந்திருப்பதற்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் காரணம். இது எப்படி சாதனையாக இருக்க முடியும்? கடலைமிட்டாய்க்கு வரிப் போடுகிறார்கள். மக்களுக்குக் குடிநீரை வழங்குவது அரசின் அடிப்படைக் கடமை. ஆனால் இவர்களோ, தண்ணீருக்கே ஜி.எஸ்.டி போடுகிறார்கள். இனிமேல் வழக்கறிஞர்களிடம் சென்றால், அவருக்கான கட்டணத்துடன் சேவை வரியையும் நாம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால், ஒரு சாமானியனுக்கு இனிமேல் எப்படி நீதி கிடைக்கும்? இப்படி, ஏழை எளிய மக்களை வாட்டிவதைப்பதைத்தான், சாதனை என்று பட்டியலிடுகிறார்களா?’’
“சாதிமறுப்புத் திருமணம், ஆணவக்கொலைகள் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவருகிறீர்கள்… ஆனால், இவையெல்லாம் தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?”
“ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடிய மகாகவி பாரதியார் வாழ்ந்த மண் இது. காதல் திருமணங்களில் மேல் சாதி, கீழ் சாதி என்று பார்க்கும் இழிநிலை, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், அயோத்திதாசர், சீனிவாசராவ், ஜீவா போன்ற தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் சாதியக் கொடுமைகளை அனுமதிக்கக்கூடாது. காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கத்தினர் உட்பட பல்வேறு இயக்கத்தினர் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டில், தீண்டாமைக் கொடுமைகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். ‘உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்’ என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு தர வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிராக மாநில அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசை நிர்பந்திக்க வேண்டும்.”
“விடுதலைப் போராட்டம், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என ஏராளமான போராட்டங்களைச் சந்தித்த நீங்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?”
“அது வரவேற்கத்தக்க போராட்டம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் என்று கருதி பெருமளவில் மக்கள் திரண்டனர். அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. அது மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் எப்படி ஒற்றுமையோடும், அக்கறையோடும் போராடினார்களோ, அதைப்போலவே சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும், சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவாகவும் தமிழக மக்கள் அணிதிரள வேண்டும். கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என தமிழகத்தின் மற்ற முக்கியப் பிரச்னைகளிலும் அதே அக்கறையை, ஒற்றுமையை தமிழக மக்கள் காட்ட வேண்டும். ”
“தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“நல்ல மாற்றங்களை வரவேற்கிறேன். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்கள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் உட்பட தரமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆங்கிலப் பாடம் இருக்கலாம். அதே நேரத்தில், முழுமையான தமிழ்வழிக்கல்வி வழங்கப்பட வேண்டும். அரசியல், பொருளாதாரம் என அனைத்து விஷயங்களையும் செந்தமிழில் சரளமாக பேசும் அளவுக்கான சூழலை உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளின் வளர்ச்சியின் மூலம்தான், இந்த நாடு பயனடைய முடியும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார் என்ற செய்தியைப் படித்தேன். அவரை நான் மனமார பாராட்டுகிறேன். தமிழக மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
- ஆ.பழனியப்பன், எஸ்.மீனாட்சி சுந்தரம்
source https://www.vikatan.com/news/policies/tamil-communist-leader-nsankaraiah-interview-to-ananda-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக