`ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி’ (Spinal muscular autrophy) என்ற அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை மித்ராவைக் காப்பாற்ற கடந்த ஒரு மாத காலமாக தமிழகமே பிரார்த்தனை செய்தது உங்களுக்கு நினைவிருக்கும். மித்ராவைக் காப்பாற்ற ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சை செய்ய வேண்டுமெனவும், அதற்கான மருந்தை வெளிநாட்டிலிருந்து வாங்க ரூ.16 கோடி செலவாகும் எனவும் சொல்லப்பட்டது. அதனையடுத்து குழந்தை மித்ராவின் பெற்றோர் சமூகவலைதளங்களில் உதவி கேட்க, ஒரே மாதத்தில் மித்ராவின் மருத்துவச் செலவுக்கான ரூ.16 கோடி நிதி திரட்டப்பட்டது. இது மித்ராவினுடைய சிகிச்சைக்காக உதவி செய்த, சமூக வலைதளங்களில் மித்ராவுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
Also Read: `3 லட்சம் நல் உள்ளங்களால் ₹16 கோடி கிடைச்சிருச்சு; இனி அரசு இதை மட்டும் செய்யணும்!' - மித்ரா தந்தை
`ஜோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்னும் மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் சில சிக்கல்கள் நீடித்தன. மருந்தினுடைய விலையில் 35 சதவிகிதத்தை இறக்குமதி வரியாகக் கட்டினால் மட்டுமே, ஜோல்ஜென்ஸ்மா மருத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டது.
`இறக்குமதி வரியை ரத்து செய்து எங்களுடைய குழந்தைக்கு உதவுங்கள்’ என மித்ராவின் பெற்றோர், பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதிக் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் எனப் பலரும் பிரதமருக்கு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கடிதம் எழுதினர். இந்நிலையில், குழந்தை மித்ராவினுடைய சிகிச்சைக்கான மருந்தை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி வரியை நீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்செய்தி மித்ராவுக்காக பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதனால் விரைவில் வெளிநாட்டிலிருந்து மித்ராவுக்கு மருந்து வரவைக்கப்பட்டு சிகிச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: `1 கோடி தமிழர்கள் ₹10 கொடுத்தாகூட மித்ராவைக் காப்பாத்திடலாம்!' -சிறுமியைக் காக்கப் போராடும் பெற்றோர்
இதுகுறித்து கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்ததோடு, குழந்தை மித்ராவினுடைய பெற்றோரை ஃபோனில் அழைத்து, ``இறக்குமதி வரி நீக்கத்திற்கான கடிதம் தயாராகிவிட்டது. விரைவில் அது உங்களுக்குக் கிடைத்துவிடும். சீக்கிரமாக குழந்தைக்கு சிகிச்சை செய்துவிடலாம்" எனக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், வரிவிலக்கு அளிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மருந்து இறக்குமதி செய்யப்பட்டு விரைவில் மித்ராவிற்கு சிகிச்சை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/finance-ministry-exempts-import-duty-for-baby-mithras-medicine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக