கோலிக்கும் கோப்பைக்குமான தூரம் இன்னும் அதிகமாக, 2019-ல் உலகக் கோப்பையை தொலைத்த அதே இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது நியூசிலாந்து. இந்த வெற்றிக்கு முழுத்தகுதியான அணி என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து.
இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தாலும், கொஞ்சம் இக்கட்டான நிலைமையில்தான், நாளைத் தொடங்கியது இந்தியா. வெல்வதற்கான வாய்ப்பை கொஞ்சமாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் ரன்னும் ஏற வேண்டும், விக்கெட்டும் விழக் கூடாது எனும் கத்தி மேல் பயணம். புஜாராவுக்கும், கோலிக்கும் இந்த பார்ட்னர்ஷிப்பின் முக்கியம் புரிந்ததோ இல்லையோ, நியூசிலாந்துக்கு மிக நன்றாகவே புரிந்திருந்தது.
சவுதி மற்றும் ஜேமிசனைக் கொண்டே நியூசிலாந்து தனது இறுதிநாள் ஆட்டத்தைத் தொடங்கியது. முக்கியமான ஐசிசி போட்டிகளில் நன்றாக விளையாட மாட்டார் எனும் சாபம், கோலிக்கு இப்போட்டியிலும் தொடர்ந்தது. இப்போட்டியில், இரண்டாவது முறையாக, ஜேமிசனின் பந்தில் ஆட்டமிழந்தார் கோலி. இதுவரை, ஆறு இன்னிங்ஸ்களில், கோலிக்கு பந்து வீசி இருக்கும் ஜேமிசன், அதில் 3 சந்தர்ப்பங்களில், அவரது விக்கெட்டை எடுத்துள்ளார்.
ஷார்ட் ஆஃப் லென்த்தில் வந்து, அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் போன பந்தைக் கோலி தொட அது கேட்சானது. நியூசிலாந்து அமர்க்களமாய் இறுதி நாளைத் தொடங்கியது. ரஹானே உள்ளே வந்தார்.
இருவரும் இணைந்து, அணியைக் காப்பாற்றும், கல்லணையைக் கட்டமைப்பார்கள் என்று பார்த்தால், கல்லடிபட்ட கண்ணாடி மாளிகையாக நொறுங்கி விழுந்தனர். ஜேமிசனின் பந்துகளைச் சந்திக்க புஜாரா, ரொம்பவே திணறிக் கொண்டிருந்தார். கோலியின் விக்கெட் விழுந்த அடுத்த பத்தாவது பந்திலேயே, ஜேமிசனிடமே வீழ்ந்தார் புஜாரா. கடைசியாக விளையாடிய 18 போட்டிகளில், வெறும், 35 ஸ்ட்ரைக் ரேட்டோடும், 28 என்னும் ஆவரேஜுடனுமே ஆடியுள்ளார் புஜாரா. ரன் எடுக்காவிட்டாலும், வழக்கம் போல தடுப்பாட்டத்தை வெற்றிக்காக இல்லாவிடினும், டிராவுக்காகவாவது ஆடியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது.
மறுபுறம், முதல் இன்னிங்சில், மோசமான ஒரு ஷாட்டுக்கு, தனது விக்கெட்டை தாரைவார்த்து வெளியேறிய ரஹானேவின் தொடக்கம் நன்றாகத்தான் இருந்தது. குட் லென்த் பந்துகளை டிஃபெண்ட் செய்தார், ஷார்ட் பால்களை தொடாமல் விட்டார். அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் சென்ற பந்துகளுக்கு, ஆதரவு தராமல் அனுப்பி வைத்தார்.
இந்த சூழலில் பன்ட்டின் ஒரு கேட்ச்சை டிராப் செய்து, சவுதி இரண்டாவது வாய்ப்பு அளிக்க, இந்த இணை, பொறுப்போடு ஆடியது. 30 ரன்களுக்கு மேல், பார்ட்னர்ஷிப் சேர்த்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது. அப்போது, கட் ஷாட்டில் பவுண்டரி அடித்த ரஹானேவை, அதற்கடுத்த பந்திலேயே, ஆட்டமிழக்கச் செய்தார் போல்ட். ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 77 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்து மிக அபாயகரமான நிலையில் இருந்தது, இந்தியா.
டெஸ்ட் ரேங்கிங்கில் ஆல்ரவுண்டர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும், ஜடேஜா இறங்கினார். இன்னொரு விக்கெட் வேண்டுமென, பன்ட்டுக்கு வாக்னர் வீசிய பந்துக்கு, ஒரு ரிவ்யூவை எல்லாம் வீணடித்துப் பார்த்தது, நியூசிலாந்து. மறுபுறம், ஜடேஜா, தொடக்கத்தில் கொஞ்சம் செட்டில் ஆகாமல் ஆடியதுடன், ரன்அவுட் ஆகியே தீருவேன் என்பது போலெல்லாம், அடித்த மாத்திரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். உணவு இடைவேளையின் போது, முதல் செஷனில், 66 ரன்களைச் சேர்த்திருந்த இந்தியா, முக்கிய மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது.
இரண்டாவது செஷனைத் தொடங்கினர் பன்ட்டும், ஜடேஜாவும். வாக்னர், ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்துகளை வீசத்தொடங்க, ஃபீல்டிங் செட்அப்பில் மிரட்டி, அட்டாக் செய்ய ஆரம்பித்தார் வில்லியம்சன். இறுதியாக, வாக்னரின் பந்திலேயே, ஜடேஜா 16 ரன்களில் வெளியேற, 13 ஓவர்கள் நீடித்த பார்னர்ஷிப்பை முறித்தது, நியூசிலாந்து.
மறுமுனையில் உள்ள வீரர்கள் ஒத்துழைத்தால் கூட, பன்ட் கரைசேர்த்துவிடுவார் என்பதால், ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்பதை நியூசிலாந்தும் புரிந்தே வைத்திருந்தது. அதே நம்பிக்கையுடன்தான், போட்டியைத் தொடர்ந்து பார்த்தனர் ரசிகர்களும்.
ஆனால், அந்த நம்பிக்கையை நொறுக்கிப் போட்டது போல்ட்டின் ஒரு ஓவர். போல்ட் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தை, பன்ட் அடிக்க, நிக்கோல்ஸ் பிடித்த அந்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துடிப்பையும் ஒரு கணம் நிறுத்தி விட்டது. அந்த நொடியிலேயே, கோப்பைக் கனவை, மொத்தமாய்க் கலைத்துக் கொண்டது இந்தியா. அடுத்த அடியாக, அதே ஓவரில், அஷ்வினையும் போல்ட் அனுப்பி வைக்க, 156/8 என ஏறக்குறைய எல்லாம் முடிந்துவிட்டது.
டெய்ல் எண்டர்கள் ரன்களைச் சேர்த்து, அணியைக் காப்பாற்ற பேட்டிங் செய்ய இது ஒன்றும் நியூசிலாந்து இல்லையே?
2018-க்குப் பின், இந்தியாவின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் இணைந்து டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ள ரன்களின் ஆவரேஜ், வெறும் 21 என்பதால், லீடிங் என்னவாக இருக்கும் என்பதை ஏறக்குறைய யூகிக்க முடிந்தது. நினைத்ததைப் போலவே, ஷமியின் விக்கெட்டையும், பும்ராவின் விக்கெட்டையும் அடுத்த மூன்று ஓவர்களுக்குள்ளாகவே நியூசிலாந்து எடுத்துவிட, 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.139 ரன்கள் மட்டுமே வேண்டும், கைவசம் 300-க்கும் அதிகமான பந்துகள் இருக்கிறது என்ற நிலையில், கோப்பை அப்போதே கையில் சேர்ந்து விட்டதென்னும் நம்பிக்கையோடு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது நியூசிலாந்து.
எந்தவித அழுத்தமும் இல்லாமல் லாதமும், கான்வேயும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். தேநீர் இடைவேளைக்கு முன்பாக வீசப்பட்ட எட்டு ஓவர்கள் வரை, பார்க்க வேண்டுமா போட்டியை, என்னும் விதத்தில், ஆமை வேகத்தில் நகர்ந்தது போட்டி. ஷமி, இஷாந்த் இருவரை வைத்துத் தாக்கியும், விக்கெட் விழவில்லை. நியூசிலாந்தின் ரன் மீட்டரும், சீராக ஏறிக் கொண்டிருந்தது.
மூன்றாவது செஷனில், ஸ்ட்ராடஜியை மாற்றி, பும்ராவுடன் அஷ்வினை கோலி கொண்டுவர, எதிர்பார்த்த திருப்பத்தை அவர் கொண்டு வந்தார். முதல் இன்னிங்ஸில், லாதமின் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வின், அதனை மறுபடியும் செய்தார். அஷ்வின் வீசிய பந்தை, அடித்தாட லாதம் முயற்சிக்க, அது அவரை ஏமாற்றி, பன்டின் கையில் தஞ்சம் புக, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்ப் சிதற, வெளியேறினார், லாதம். கான்வேயின் விக்கெட்டையும் வீழ்த்தி, இந்திய ரசிகர்களுக்கு இன்னொரு நம்பிக்கையையும் கண்ணில் காட்டினார் அஷ்வின்.
இதனால், இந்தியாவுக்கு ஏதாவது வாய்ப்பிருக்குமா, இதே தருணத்தில், மேலும், இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து விட்டால், பிரஷர் ஏறி, ரன்னெடுக்க நியூசிலாந்து தடுமாறினால், போட்டி டிராவை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறதா என ஆட்டம் பரபரப்பானது.
ஓடாத கடிகார முள் போல, ரன்கள் மாறாமல் ஸ்ட்ரக் ஆகி நின்ற, நியூசிலாந்தின் ஸ்கோர் கார்டை, இரண்டு பவுண்டரிகளை, அஷ்வினின் ஓவரில் அடித்ததன் மூலமாக மாற வைத்தார் ராஸ் டெய்லர். இன்னொரு பவுண்டரியால் போட்டியின் பிடி எங்களிடம்தான் இருக்கிறதென தன் பங்குக்கு வில்லியம்சனும் நிரூபித்தார். இந்த சீனியர் கூட்டணி இலக்கை நெருங்கிக் கொண்டே இருந்தது. ராஸ் டெய்லர் தந்த கேட்ச் வாய்ப்பையும், புஜாரா கோட்டைவிட, கிடைத்த சிறிய வாய்ப்பையும், சிமிண்ட் பூசி அடைத்து விட்டார்.
ஜடேஜாவை மட்டும் விட்டு வைப்பானேன் என அவரையும் கொண்டு வந்தார் கோலி. ஆனால், எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை. நியூசிலாந்தை போல, மிகக் கட்டுக்கோப்பாக இல்லாமல், ஃபுல் லென்த்தில் பந்தை வீசி, கவர் டிரைவ் ஆடி, ஆட்டத்தை முடித்து விடுங்கள் என்னும் ரீதியில் சில பந்துகள் வீசப்பட்டன.
உண்மையில், பும்ராவின் பந்துவீச்சும் சுத்தமாக எடுபடாமல் போனது. அணிக்கு பலவீனமாக, தோல்வியை நோக்கியே ஓடிக் கொண்டிருந்தனர் எல்லா பௌலர்களும். வில்லியம்சனுக்கும், ராஸ் டெய்லருக்கும் அனுபவம் கைகொடுக்க, அழுத்தமா அது எப்படி இருக்கும் என்பது போல் ஆடியது நியூசிலாந்து. முதல் இன்னிங்சில் தவறவிட்ட அரை சதத்தை, இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தார் வில்லியம்சன்.
முடிவாக, வேறு விக்கெட்டுகள் இழப்பின்றி, இலக்கை எட்டி, முதல் டெஸ்ட் சாம்பியன்கள் எனும் மகுடம் சூடியது நியூசிலாந்து. வில்லியம்சன் தலைமையில், அந்த அணி பெற்றுள்ள முதல் ஐசிசி கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிராஜை எடுக்காதது, டெஸ்ட்டுக்கான பேட்டிங் அடிப்படைகளை பின்பற்றாதது, எதிரணி மீதான அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்காதது, பொறுப்பற்ற முறையில், தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தது என அடுக்கடுக்கான தவறுகளுக்கு தண்டனையாக, தோல்வியைப் பெற்றுள்ளது இந்தியா.
தகுதிவாய்ந்த அணியோடுதான் தோற்றிருக்கிறோம் என்று இந்திய ரசிகர்கள் ஆறுதல்படுத்திக் கொண்டாலும், இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன்ஷிப், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அத்தனையிலும், தன்னைத் தானே சுய பரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. டி20-ல் முதல் சாம்பியன் ஆனதைப் போல், இதிலும் வெல்வோம் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி, என்றும் ஆறாத வடுவாக்கி விட்டது கோலி அண்ட் கோ!
source https://sports.vikatan.com/cricket/india-lost-the-wtc-finals-because-of-bad-leadership-and-planning
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக