Ad

வியாழன், 3 ஜூன், 2021

தடுப்பூசி விவகாரம்:`மாநிலம் VS ஒன்றிய அரசு என்றாகிவிட்டது' -கேரள முதல்வருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் வேளையில், பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையின் படி மத்திய அரசு கடந்த மாதம் முதல் 18 வயது மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், பல மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையின் படி மத்திய அரசு 50 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும் என்றும், மீதமுள்ள 50 சதவிகிதத்தில் மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்ய மருந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரினாலும் நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்க முன்வருவதில்லை என்ற குற்றசாட்டு சமீபமாக அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறிப்பிட்டு, 'தடுப்பூசி விநியோகம் சீராக இருக்க முதலமைச்சர்களாகிய நாம் ஒருமித்த குரல் கொடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, "கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கிப் போராடிக் கொண்டிருக்கும் இந்தியா தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனாலும், நாம் தற்போது மேற்கொண்டு வரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் மாநிலத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உறுதி செய்துள்ளதன் மூலம் முன்னோக்கிய பயணத்திற்குத் தயாராகி வருகிறீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா நோய்த்தொற்றிற்கு எதிரான இந்த போராட்டத்தில் 'தடுப்பூசி' ஒன்று மட்டுமே நம்முடைய மிகப்பெரிய ஆயுதம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் போதிலும், இன்னும் வேகமாக நாம் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தினை மருத்துவ நிபுணர்கள் பலரும் முன்வைக்கின்றனர்.

நான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்குப் பின்னால் ஒரு யதார்த்தம் இருக்கிறது. மாநில அரசுகளாகிய நாம் உலகளாவிய ஒப்பந்தத்தின் படி தடுப்பூசிகளைப் பெற்று மக்களுக்கு விலையில்லாமல் செலுத்த முயல்கிறோம். ஆனால், நாங்கள் தனியாகத் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் கோரினால் எந்த நிறுவனமும் இது வரையிலும் முன்வரவில்லை. மத்திய அரசும் வழங்க வேண்டிய தடுப்பூசிகளை முறையாக வழங்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் விவகாரம் மாநிலங்கள் VS ஒன்றிய அரசு என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது.

தடுப்பூசி கொள்முதல் விஷயத்திலும் நிலைமை நம் கட்டுக்குள் இல்லை. ஆனால், நாம் இந்த விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்தியாக வேண்டும். இதைத் தவிர்த்து, தடுப்பூசி செலுத்தும் பணியிலும் சில ஒருங்கிணைப்பு பிரச்னைகள் இருக்கின்றன. சில மாநிலங்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெறும் தடுப்பூசி போதியளவில் இல்லை என்று நினைக்கின்றன. உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தத்திலும் நல்ல பதில்கள் கிடைப்பதில்லை. மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு நாம் அதிக விலை கொடுக்க நேரிடும்.

முதலமைச்சர்களாகிய நாம் உறுதியாக நின்று ஒருமித்த குரலில் மத்திய அரசைத் தடுப்பூசி விவகாரத்தில் முழு பொறுப்பேற்றுக் கொள்ளும்படி வலியுறுத்த வேண்டும். முன்கள பணியாளர்களுக்குத் தகுந்த நேரத்தில் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியதால் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக உள்ள நேரத்திலும் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தடுப்பூசி இருப்பை உறுதி செய்வதே நேரத்தின் தேவையாக இருக்கிறது. மாநிலங்கள் தடுப்பூசி விவகாரத்தில் முழு ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அதன் முடிவுகள் அற்புதமாக இருக்கும். மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர்களாகிய நாம் இதில் இணக்கமாக ஒருமித்த குரல் கொடுப்போம். இந்தியா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருவதை உறுதி செய்வோம்" என்று பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/jagan-mohan-reddy-writes-a-letter-to-kerala-cm-demanding-full-support-on-the-vaccination-drive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக