அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமயப் படிப்புகள் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் அர்ச்சனா வெங்கடேசன் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர். கல்லூரி வரை தமிழ் வாசிக்கத் தெரியாமல் இருந்த அர்ச்சனா, இன்றைக்குத் தமிழ் இடைக்கால இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் புகழ்பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர். The Secret Garland: Āṇṭāḷ’s Tiruppāvai and Nācciyār Tirumoḻi, A Hundred Measures of Time, Andal’s Garden: Art, Ornament and Devotion in Srivilliputtur என இவருடைய மொழிபெயர்ப்புகள் சர்வதேச இலக்கிய & கல்விப் புலத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன; பத்தாண்டுகால உழைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட நம்மாழ்வாரின் திருவாய்மொழி, Endless Song: Tiruvāymoli என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. “அர்ச்சனா வெங்கடேசனின் மொழிபெயர்ப்பு நம்மாழ்வாரின் எழுத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வழிசெய்கிறது” என்று New York Review of Books மதிப்பிடுகிறது.
"உங்களுடைய பிறப்பு, கல்வி, பணி ஆகியவை பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?"
"நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். சிஷ்யா மற்றும் பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பிறகு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். ஆனால், கல்லூரியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு வந்துவிட்டேன். கலிஃபோர்னியாவில் உள்ள யூ.சி. பெர்கெலியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்தேன்; தொடர்ந்து முதுகலையும், தெற்காசியப் படிப்புகளில் முனைவர் பட்டமும் அதே பல்கலைக்கழகத்தில் பெற்றேன். மிகச் சிறந்த தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ட் ஹாட்ர்டிடம் என்னுடைய பட்ட மேற்படிப்புகளைக் கற்றேன்."
"சமய இலக்கியம் & ஒப்பியல் இலக்கியத் துறை பேராசிரியர் நீங்கள். இத்துறை மீது உங்களுக்கு ஈடுபாடு ஏற்படக் காரணம் என்ன?"
"இலக்கியத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான தொடர்பின் மீது நான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். இந்த இரண்டின் கூட்டிணைவுக்கும் தமிழ் பக்தி இலக்கியக் கவிதைகள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. தமிழ் பக்தி இலக்கியக் கவிதைகள் முக்கியமான இரண்டு எடுத்துக்காட்டுகளை நமக்கு வழங்குகின்றன — கோதை, காரைக்காலம்மையார். மேலும், சங்க இலக்கியத்தைத் தழுவி, பக்தி இலக்கியத்தின் ஆண் கவிஞர்கள் சிலர் பெண்களின் குரலை வெளிப்படுத்துகின்றனர். இறுதியாக, கவிதை என்பது மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்றாகத் தொடர்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினேன்; இந்த உலகு குறித்த அவர்களின் புரிதலை கவிதை எப்படி வடிவமைக்கிறது, இந்த உலகில் அவற்றின் இடம் என்பனவற்றை அறிய விரும்பினேன். தமிழ் பக்தி இலக்கியம் என்பது எனக்கு ஒரு பெருங்கடல், அதன் எண்ணற்ற அம்சங்களையும் பொக்கிஷங்களையும் கண்டறிய ஒரு ஆயுள் போதாது!"
"அதன் தொடர்ச்சியாகத்தான் மொழிபெயர்ப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதா; சமகாலப் படைப்புகளை அல்லாமல், பக்தி இலக்கியங்களை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணமா?"
"முன்பே குறிப்பிட்டதைப் போல், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டின் மாணவியாக நான் இருந்தேன். வாழும் மொழிபெயர்ப்பாளர்களில் தமிழிலக்கியத்தின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் அவரும் ஒருவர். மொழிபெயர்ப்பு என்பது நெருக்கத்தின் செயல்பாடு என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். வெறுமென தமிழை ஆங்கிலத்துக்குக் கொண்டுவருவது மொழிபெயர்ப்பு இல்லை; எழுத்தை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறை அது. அதனால் தான் நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். நான் அநேகமாக தினமும் மொழிபெயர்ப்பேன், ஒரே ஒரு பாடலாக இருந்தாலும்கூட. அது ஒருவகையான ஒழுங்குமுறை. மேலும், மிக மெதுவாகவே மொழிபெயர்ப்பேன். தமிழ்ப் பிரதிக்கு எப்படி ஆங்கிலத்தில் வடிவமும் ஒலியும் கொடுப்பது என்பதைப் புரிந்துகொள்வதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.
கோதையின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவற்றிலிருந்து என்னுடைய மொழிபெயர்ப்பைத் தொடங்கினேன். அதன் பிறகு, திருவிருத்தம் மீது ஆர்வம் ஏற்பட்டது; பெண்களின் குரல்களை நம்மாழ்வார் இதில் பயன்படுத்தியிருந்த விதம் என்னைக் கவர்ந்தது. இப்போது, மிகச் சமீபத்தில் திருவாய்மொழி. எந்தவொரு தீர்மானமும் இன்றி, திவ்ய பிரபந்தத்தை மொழிபெயர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றேன்."
"நான் தமிழின் மற்ற பிரதிகளையும் மொழிபெயர்க்க விரும்புகிறேன். குறிப்பாக, பரிபாடலை மொழிபெயர்ப்ப வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறேன். பரிபாடலை ஆங்கிலத்தில் கொண்டுவருவது மிகக் கடினம். ஆனால், கண்டிப்பாக ஒருநாள் அதில் ஈடுபடுவேன். சமகாலக் கவிதையை, குறிப்பாக பெண் எழுத்தாளர்கள், அதிகம் மொழிபெயர்க்க முயற்சிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை சமகால தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதில் உள்ள சாகசம் என்பது, ஒரு கவிஞருடன் இணைந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடும் வாய்ப்புதான்."
"பத்தாண்டு கால உழைப்பில் Endless Song: Tiruvāymoli-ஐ மொழிபெயர்த்து முடித்துள்ளீர்கள்; இதைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? இந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?"
"திருவாய்மொழியை மொழிபெயர்க்க வேண்டும் என்று என்னிடம் எந்தத் திட்டமும் முதலில் இல்லை; அது தற்செயலாக நடந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஃப்ராங் க்ளூனியுடன் இணைந்து பணியாற்றும் திட்டமாக அது இருந்தது. மொத்த கவிதையின் வரைவு மொழிபெயர்ப்பை க்ளூனி ஏற்கெனவே முடித்துவிட்டார். நாங்கள் இணைந்து 60 பாடல்களை மொழிபெயர்த்தோம். எங்கள் பணிச்சூழல், பணிநேரம் காரணமாக இருவரும் இணைந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கு நேரம் அமையவில்லை. எனவே, நான் என்னுடைய மொழிபெயர்ப்பைத் தனியாக வெளியிட்டேன். பேராசிரியர் க்ளூனியும் அவருடைய திருவாய்மொழி மொழிபெயர்ப்பை விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
திருவாய்மொழியை மொழிபெயர்த்த அனுபவத்தைக் கூறுவது மிகக் கடினமானது. பெரும்பாலும் ஒரு நாளுக்கு ஒன்று என்ற அளவில்தான் மொழிபெயர்த்தேன். தமிழ் ஒலிகளின் உணர்வைப் பெறுவதற்கும், சொற்களுடன் மூச்சு எப்படிப் பயணிக்கிறது என்பதை அறிவதற்கும் வரிகளை வாய்விட்டுப் படிப்பேன், பாடுவேன். இந்த அம்சத்தை ஆங்கிலத்தில் கொண்டுவருவது எனக்கு முக்கியமாகப்பட்டது. விவரிக்க முடியாத அழகுள்ள கவிதை ஒன்றை நான் வாசிக்க வாசிக்க, அதன் மீது அதிகமாகக் காதல் கொண்டேன். மொழிபெயர்ப்பின் இறுதிக்கட்டத்தில், கவிதை பற்றிய கனவிலேயே எல்லா நேரமும் இருந்தேன்."
"பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட இலக்கியத்தை இன்று அதே தமிழில் புரிந்துகொள்ள விளக்கவுரை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மொழிபெயர்க்கப்படும் படைப்பின் காலத்தில் வழக்கில் இல்லாத ஒரு வேற்று மொழியில் தற்போது மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள் என்ன?"
"நம்முடைய பெரும் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பலதரப்பட்ட வாசகர்களைச் சென்றடைகிறது. இந்தியாவிலுள்ள இளம் வயதினரையும் இந்தப் படைப்புகளை வாசிக்கச் செய்வதன் மூலம் தமிழ் கற்க அவர்களை ஊக்கப்படுத்த முடியும். என்னுடைய மொழிபெயர்ப்புகள், குறைந்தபட்சம் ஒருவரையாவது இந்த வளமிக்க, பிரமிக்கச் செய்யும் இலக்கிய உலகுக்குக் கொண்டுவந்தால், அது மிகப் பெரிய சாதனை என்றே கருதுகிறேன்."
"இவற்றுக்கான வரவேற்பு மேற்கில், ஆங்கில இலக்கிய உலகில் எப்படி இருக்கிறது; உங்கள் மொழிபெயர்ப்பு குறித்த வந்த எதிர்வினைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?"
"துரதிருஷ்டவசமாக, தமிழ் இலக்கியம் - குறிப்பாக பழைய தமிழ் இலக்கியம், தெற்காசிய படிப்புகள் என்ற சிறு வட்டத்துக்கு வெளியே பரவலாக அறியப்படவில்லை; ஓரளவு சங்க இலக்கியம் அல்லது சிலப்பதிகாரம் பரவலாகியிருக்கிறது. தற்காலத் தமிழிலக்கியம் மேம்பட்ட, பெரிய வீச்சைக் கொண்டிருக்கிறது.
நான் பாடமெடுக்கும் இளங்கலை வகுப்புகளில் தமிழிலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் கற்பிக்கிறேன்; என்னுடைய மாணவர்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள், பாராட்டுகிறார்கள். ராமாயணம் பற்றிய பாடம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன், அதில் கம்பனுடைய ஆரண்ய காண்டத்திலிருந்து சில பகுதிகளை மாணவர்களிடம் படிக்கச் சொன்னேன். அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது, மேலும் படிக்க விரும்புகிறார்கள். உண்மையில், ஒரு முழு பாடமும் கம்பனைப் பற்றியதாக இருக்கலாமே என்றுகூட சிலர் என்னிடம் கேட்டார்கள்!"
"இந்தப் படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?"
"நான் என்ன கற்றுக் கொண்டேன், கற்றுக் கொள்ளப் போகிறேன் என்பதை அளவிடுவது கடினம். இந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பதன் மூலம் கவிதைக்கும் விளக்கவுரைக்கும் உள்ள உறவை நான் கண்டறிந்தேன். அதுமட்டுமல்லாமல், மார்கழி மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் அத்தியயனோற்சவம் எனப்படும் ஆண்டுப் பாராயணம் பற்றிய திட்டம் ஒன்றைத் தொடங்கினேன். இந்தக் கவிதைகளில் இருந்தும், மொழிபெயர்ப்பு நிகழ்விலிருந்தும் கற்றுக் கொள்வதற்கு இறுதிப் புள்ளி என ஒன்றும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு என்பது சுயத்தின் உருமாற்றம்தான். தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு தமிழ்ப் பெண், ஆங்கிலம் படித்த அமெரிக்காவில் வாழும் பெண் என்ற என்னுடைய இரண்டு பகுதிகளின் இணைப்பாகவும் ஒருவகையில் இது எனக்கு இருக்கிறது."
"அடுத்து?"
"மூர்த்தி கிளாசிகல் லைப்ரரி ஆஃப் இந்தியாவுக்காக கம்பன் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுந்தர காண்டத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆய்வாளர்கள் ஏழு பேர் அடங்கிய ஒரு குழுவாக, கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் கொண்டுவர அர்பணித்துள்ளோம். உ.வே.சா. நூலகம் வெளியிட்டிருக்கும் அற்புதமான கம்பராமாயண பதிப்பை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறோம். நான் இந்தத் திட்டத்தின் இயக்குநராகவும், பேராசிரியர் டேவிட் ஷூல்மனுடன் இணைந்து இந்த மொழிபெயர்ப்பு வரிசையின் துணை ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
திருவாய்மொழியை 2019-ல் பதிப்பாளரிடம் சமர்ப்பித்த பிறகு, சுந்தர காண்டம் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன். இந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 300 பாடல்களை மொழிபெயர்த்துள்ளேன்; இது இந்தக் காண்டத்தின் மொத்தப் பாடல்களில் கால் பங்கு தான். நான் எந்தளவுக்கு மெதுவாக மொழிபெயர்க்கிறேன் என்பது குறித்த ஒரு பார்வையை இது உங்களுக்கு வழங்கும். கம்பனை மொழிபெயர்க்கும் அனுபவத்தில் மகிழ்கிறேன். கவிப் பாடல் ஒன்றை நான் மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை என்பதால் அதுசார்ந்த சவால்கள் இருக்கவே செய்கின்றன. கவிதையின் இந்த அம்சத்தை எதிர்கொள்வதற்காக, கம்பன் பற்றிய தமிழ்ச் சொற்பொழிவுகளை அதிகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். யூ-ட்யூபில் அவை கிடைக்கின்றன. கம்பனின் மொழி நிச்சயம் ஒப்பில்லாதது, படிமங்களிலும் ஒலிப்பிலும் அத்தனை வளமிக்கது. அதை ஆங்கிலத்தில் கொண்டுவருவதென்பது மிகக் கடினமான ஒன்று. இதற்காக என்னை எப்படித் தயார்படுத்திக் கொள்கிறேன் என்றால், ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ், டைலன் தாமஸ் போன்ற ஆங்கில மொழியின் கவி மேதைகளின் படைப்புகளை வாசிக்கிறேன். மொழியின் முறையான அம்சங்களில் இவர்கள் மாஸ்டர்கள். இந்தப் பயிற்சி, வழிமுறையின் மூலம் கம்பனின் குரலை ஆங்கிலத்தில் கேட்க முயற்சி செய்கிறேன்."
source https://www.vikatan.com/spiritual/literature/interview-with-california-university-professor-archana-venkatesan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக