சென்னை கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, அடுத்தடுத்து பல பள்ளிகள் மீது புகார்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
பொதுவாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 2004-ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பாக 166 வழக்குகள் பதிவாகின. 2014-ல் 1055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2019-ல் இது 2410 ஆக உயர்ந்தது.
பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் ஆண்டுக்காண்டு உயர்ந்து வருவதை மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. 2006-ல் பள்ளி பாலியல் வழக்குகள் 2 மட்டுமே பதிவாகின. அதுவே 2013-ல் 16 வழக்குகளும் 2018-ல் 25 வழக்குகளும் 2019-ல் 35 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பலவும் கிராம அளவிலோ பள்ளி அளவிலோ காவல் நிலையங்கள் அளவிலோ பேசி முடிக்கப்பட்டு விடுகின்றன. அவை இந்த எண்ணிக்கையில் அடங்குவதில்லை.
குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் என்பது உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, மன ரீதியாக, புறக்கணிப்பு ரீதியாக என நான்கு வகைகளாகத்தான் பார்க்கப்பட்டு வந்தன. இப்போது ஐந்தாவதாக, 'இணையவழி ரீதியாக' என்றொரு வகை சேர்ந்திருக்கிறது. எல்லா வடிவங்களுமே தற்போது அதிகரித்து வருகின்றன என்றாலும் இணையவழி தீங்கிழைத்தல் என்பது மிகப்பெரும் வடிவெடுத்திருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் கற்றலுக்கான வாய்ப்புகள் அற்றுப் போகாமல் இருக்க இணையவழி ஒன்றே தீர்வாக இருக்கிறது. எந்த அளவுக்குப் பயனளிக்கிறதோ அதே அளவுக்கு பாதகமானது இணையவழி. முழுமையாக ஆய்வுசெய்து, முறைப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால், எந்தப்பள்ளியும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவேயில்லை. உலகத்தில் அதிக குற்றங்கள் நடக்கும் இடமாக இணையம் மாறியிருக்கிறது. அதை குழந்தைகள் கையில் முழுமையாக ஒப்படைத்திருக்கிறோம். அதை முறையாகப் பயன்படுத்தும் வழிமுறைகளை பிள்ளைகளுக்கும் கற்றுத்தரவில்லை. அதைக் கையாளும் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தரவில்லை.
ஒரு ஆசிரியர் அத்துமீறியதை பத்தாண்டுகளுக்கு பள்ளியிலோ, பொதுவெளியிலோ, குடும்பத்திலோ வெளிப்படுத்த முடியாத அளவுக்கு இறுக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
"ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கிற சமூகம் நம்முடையது. எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் தம் ஆசிரியரைக் கண்டால் எழுந்து நின்று மரியாதை செய்வது நம் இயல்பில் ஊறிய பண்பு. தம் பிள்ளைகள் மீது காட்டாத கனிவையும் அக்கறையையும் மாணவர்கள் மீது காட்டி வளர்த்தார்கள் ஆசிரியர்கள். இன்று எல்லாம் மாறிவிட்டது. ஆசிரியர்- மாணவர் உறவு சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. புறக்கணிப்பு, தாக்குதல், பாலியல் சீண்டலென ஆசிரியர்கள் மீது புகார்கள் குவிகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடத்திலும் தங்கள் நிலையை வெளிப்படுத்தமுடியவில்லை. குழந்தைகளின் பாதுகாப்புக்கென இயங்கும் அமைப்புகள் முழுமையாக சீர்செய்யப்பட வேண்டும்" என்கிறார் லயோலா கல்லூரியின் சமூகப்பணியியல் துறை பேராசிரியர் அசோக் கிளாஸ்டன் சேவியர்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாள்களில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது மாணவிகள் புகார் செய்தனர். அந்த ஆசிரியரை பள்ளியிலிருந்து நீக்கியது நிர்வாகம். இதேநேரத்தில் பயிற்சிபெற வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தடகள பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். அடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கெவின்ராஜ் என்பவரையும் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறை கைது செய்திருக்கிறது. மாநில குழந்தை உரிமை ஆணையம் சென்னையில் மேலும் மூன்று பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி '9444772222' என்ற தனது மொபைல் எண்ணை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்தார். அவரிடம் பேசினேன்.
"இதுவரை 100 அழைப்புகளுக்குமேல் அந்த எண்ணுக்கு வந்துள்ளன. இன்று வந்த 2 புகார்களையும் சேர்ந்து சுமார் 90 புகார்கள் சென்னையைத் தாண்டி பிற நகரங்களில் இருந்து வந்துள்ளன. சென்னையில் பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி பயிற்றுனர்கள் பற்றி 20 புகார்கள் வந்துள்ளன. இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்து புகாரை இறுதி செய்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். பாதிக்கப்பட்ட பலர் தமிழகத்தின் வேறு வேறு நகரங்களில் இருக்கிறார்கள். நிறைய குழந்தைகள் புகார் அளிக்க நினைக்கிறார்கள். ஆனால் தயக்கமும் பயமும் இருக்கிறது. படித்து முடித்தவர்களும் குடும்பச்சூழல் குறித்து யோசிக்கிறார்கள். உறுதியாக சொல்கிறேன்... புகார் அளிப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. எவரையும் அடையாளப்படுத்த மாட்டோம். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது. ரகசியம் காக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் எந்த தயக்கமும் அச்சமும் இல்லாமல் எனது எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம். அதைப்பார்த்ததும் கண்டிப்பாக நான் அழைத்துப் பேசுவேன்" என்கிறார்.
பெற்றோர் கவனத்துக்கு!
* ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணியுங்கள். ஏதேனும் ஒரு வகுப்பில் நீங்களே அமர்ந்து ஆசிரியர்கள், பிற மாணவர்களின் செயல்பாடுகளைக் கவனியுங்கள்.
* அவ்வப்போது பிள்ளைகளிடமிருந்து மொபைலை வாங்கிப் பாருங்கள். அவர்கள் பயன்படுத்தும் இணையதளங்களை கவனியுங்கள்.
* பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். மனம் திறந்து பேச அனுமதியுங்கள்.
* எவரையேனும் பிள்ளைகள் தவிர்க்க முனைந்தால் அதுகுறித்து கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் நெருங்கிய உறவினராக இருந்தாலும்.
* பிள்ளைகளின் முகம் சோர்வுற்றிருந்தாலோ, அச்சமடைந்தாலோ அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/jayalakshmi-ips-talks-about-the-child-sexual-abuse-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக