கடந்த ஒரு வருடமாகவே பாலிவுட்டில் பல பிரச்னைகள். சுஷாந்த் சிங் தற்கொலை, அதைத் தொடர்ந்து வெளிவந்த டிரக் மாஃபியா குறித்த விசாரணை, அதில் முக்கிய நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது, ரிஷி கபூர், இர்ஃபான் கான் என இரு பெரும் ஆளுமைகளின் மரணம்... இப்படிப் பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடங்கி வைத்த ஒரு விவாதம் பாலிவுட்டில் எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய ஒன்று. நெப்போட்டிஸம்!
கபூர் குடும்ப வாரிசுகளுக்கு முன்னுரிமை, நடிகர், நடிகைகள் தேர்வில் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கம் என ஒரு கட்டுக்கோப்பான கார்ப்பரேட் நிறுவனம் போலவே பாலிவுட் இயங்குவதாக விமர்சனங்கள் குவிந்தன. பாலிவுட்டின் இந்தப் போக்கினால்தான் சுஷாந்த சிங் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறிய கங்கனா ரணாவத், அதற்குக் காரணம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர்தான் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
ஆனால், கங்கனாவின் மதவாத அரசியல் ஆதரவு மனநிலை, மற்ற தரப்பின் மீது தேவையற்ற வெறுப்பை உமிழும் குணம், அறிவியல் ஆதாரமற்ற செய்திகளை ட்விட்டரில் பரப்புவது போன்றவற்றால் ஒரு சாரர் அவருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதை நிறுத்தினர். இருந்தும் நெப்போட்டிஸம் என்பதற்கான எதிர்க்குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. மகேஷ் பட் இயக்கத்தில் அவரின் மகள் அலியா பட் மற்றும் மற்றொரு சினிமா குடும்ப வாரிசான ஆதித்ய ராய் கபூர் ஆகியோர் நடித்த 'சடக் 2', கரண் ஜோஹர் தயாரித்து, ஜான்வி கபூர் நடித்த 'குன்ஜன் சக்ஸேனா' போன்ற படங்கள் பெரிதாக ஈர்க்காத நிலையில், அதில் நடித்த வாரிசு நடிகர்கள் அனைவரும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தனர்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படியான விவாதங்கள் சற்றே குறைந்தன. மகாராஷ்டிரா பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், படங்களின் ஷூட்டிங், தியேட்டர் ரிலீஸ் என எதுவும் நடைபெறாமல் பாலிவுட் தன் கலையை இழந்து நிற்கிறது. ஓடிடி ரிலீஸ்கள் படையெடுத்தாலும் முன்பிருந்த திருவிழா ஃபீல் இப்போதுவரை வரவே இல்லை. குறிப்பாக ஒவ்வொரு ரம்ஜானுக்கும் பிரியாணி ட்ரீட்டாக படங்களை இறக்கும் சல்மான் கானே இந்த முறை தோல்வியையே சந்தித்தார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான அவரின் 'ராதே' படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்த நிலையில்தான் கொரோனா இரண்டாம் அலைபோல நெப்போட்டிஸம் குறித்தும் இரண்டாவது முறையாக விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. காரணம், மீண்டும் அதே கரண் ஜோஹர்! இந்த முறை பாதிக்கப்பட்டிருப்பவர் கார்த்திக் ஆர்யன்.
30 வயது இளம் நடிகரான கார்த்திக் ஆர்யன்தான் தற்போது பாலிவுட்டின் சாக்லெட் பாய். 'பியார் கா பன்ச்நாமா' இரண்டு பாகங்கள் மூலம் இன்றைய இளைஞர்களின் காதல் திண்டாட்டங்களை காமெடியுடன் கலந்து வெளிப்படுத்தியவர், பின்னர், 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' படம் மூலம் உச்சம் தொட்டார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் அவருக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் தர முன்வந்ததாகப் பேட்டிகளில் தெரிவித்திருந்தார் கார்த்திக் ஆர்யன்.
இவரின் 'பதி பத்னி ஆவுர் ஓ', 'லுக்கா சுப்பி' போன்ற படங்கள் ஹிட்டடிக்க, லாக்டௌனுக்கு முன்னர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்த 'லவ் ஆஜ் கல்' மட்டும் ஃப்ளாப்பானது. அதற்கு முன்னரே, கரண் ஜோஹர் தன்னுடைய தர்மா புரொடக்ஷன்ஸுக்காக கார்த்திக் ஆர்யனை 'தோஸ்தானா 2' என்ற படத்துக்கு புக் செய்திருந்தார். இது 2008-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன், ஜான் அபிரஹாம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ப்ளாக்பஸ்டரான 'தோஸ்தானா' படத்தின் சீக்குவல். இந்த 'தோஸ்தானா 2' தான் சிக்கலைக் கிளப்பியது.
காலின் டி குன்ஹா இயக்கும் இந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யனின் ஜோடி, வாரிசு நடிகையான, கரண் ஜோஹரின் ஃபேவரைட் ஆர்ட்டிஸ்டான ஜான்வி கபூர். படத்தின் ஷூட்டிங் 2019-லேயே தொடங்கப்பட்டுப் பாதிக்கும் மேல் முடிந்த நிலையில், கார்த்திக் ஆர்யன் படத்திலிருந்து வெளியேறினார். முதலில் இதற்குக் காரணம் எதுவும் சொல்லாமல் இருதரப்பும் அமைதி காக்க, கார்த்திக் ஆர்யனுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.
கார்த்திக் ஆர்யன், ஜான்வியைப் படத்திலிருந்து நீக்கக் கோரியதாகவும் இல்லையென்றால் தான் விலகுவதாகத் தெரிவித்ததாகவும் வேறு சில தகவல்களும் கசிந்தன. இதற்குத் தயாரிப்பு தரப்பு இசைந்து கொடுக்காததால் கார்த்திக் விலகியதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே நடிகரை மாற்றுவதற்குக் காரணம் கார்த்திக் ஆர்யன் தொழில் ரீதியாக அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதே என்றும் செய்திகள் வெளியாகின. அதேபோல், தர்மா புரொடக்ஷன்ஸ் இனி கார்த்திக் ஆர்யனை எந்தப் படத்திலும் கமிட் செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட மௌனத்துக்குப் பின், தயாரிப்புத் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழில் ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்தப் பிரச்னை குறித்து தாங்கள் அமைதி காப்பதாகவும், 'தோஸ்தானா 2'-க்கு வேறொரு நடிகர் புக் செய்யப்படுவார் என்றும் விளக்கமளித்தது. இதற்கும் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்கள் வர, ட்வீட்டின் கமென்ட் ஆப்ஷனை ஆஃப் செய்தது தயாரிப்பு நிறுவனம்.
இதனிடையே சில நாள்களுக்கு முன்பு, ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத் தயாரிப்பில் கத்ரீனா கைஃப்புடன் ஜோடி சேர்ந்து கார்த்திக் ஆர்யன் நடிப்பதாக இருந்த 'குட் பை ஃப்ரெட்டி' எனும் காதல் படத்திலிருந்தும் அவர் வெளியேறினார். இதற்குக் காரணம் ஸ்க்ரிப்ட் ரீதியாக சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை எனச் சொல்லப்பட்டது. சில மீடியாக்கள், கத்ரீனா தன்னைவிட வயதில் பெரியவர் எனவும் அவர் இந்தக் காதல் கதைக்கு செட்டாகவில்லை எனவும் கார்த்திக் கூறியதாக செய்திகள் வெளியிட்டன. அப்போதும் கார்த்திக் ஆர்யன் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை.
இது நடந்து ஒரு சில நாள்களிலேயே, தற்போது மூன்றாவது முறையாக, 'ராஞ்சனா' (அம்பிகாபதி) இயக்குநர் ஆனந்த எல்.ராய் எடுக்கவிருந்த கேங்ஸ்டர் படத்திலிருந்தும் கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டிருக்கிறார் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கார்த்திக் நடிக்கவிருந்த பாத்திரம் தற்போது மற்றொரு முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குரானாவுக்குச் சென்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம் கரண் ஜோஹர்தான் என ஒரு தரப்பு குற்றப்பத்திரிகை வாசிக்கிறது. கரண் ஜோஹர்தான் கார்த்திக் ஆர்யனை கார்னர் செய்து எந்தப் படத்திலும் நடிக்கவிடாமல் லாபி செய்கிறார் எனக் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், கார்த்திக்கை நீக்கியிருப்பதை மறுத்திருக்கும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தரப்பு, "கார்த்திக்கிடம் நாங்கள் பேசிவரும் ஸ்கிர்ப்ட் வேறு. அது இன்னும் முடிவாகவில்லை. அவருக்கும் இந்த கேங்ஸ்டர் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் ஆயுஷ்மானை நடிக்க வைக்கவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருந்தும் தொடர்ந்து படங்களிலிருந்து கார்த்திக் ஆர்யன் விலகியது/விலக்கப்பட்டது பாலிவுட்டில் மீண்டும் நெப்போட்டிஸம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கார்த்திக் ஆர்யனும், சுஷாந்த் சிங்கைப் போலவே எவ்வித பின்புலனுமின்றி பாலிவுட்டில் நுழைந்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். அவரைத் தொடர்ந்து டார்கெட் செய்து ஒதுக்குவது வாரிசு அரசியலில்லாமல் வேறென்ன என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
Also Read: சூப்பர் ஸ்டாருக்கும் மேல!
இது குறித்து முன்னர் பேசிய கங்கனா ரணாவத், "கார்த்திக் முழுக்க முழுக்க தன் திறமையால் மட்டுமே இத்தனை தூரம் மேலே வந்திருக்கிறார். இனியும் அவர் தன் திறமையை நம்பி மட்டுமே முன்னேறுவார். எனவே அவரை கரண் ஜோஹரும் அவரின் நெப்போட்டிஸ கும்பலும் சீண்டாமல் இருப்பது நல்லது. அவர்கள் சுஷாந்துக்கு இப்படிச் செய்ததால்தான் அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். கார்த்திக்கை இந்தக் கழுகுகள் விட்டுவிடவேண்டும்" என்று காரசாரமாக விமர்சித்திருந்தார்.
ஆனால், இத்தனை நடந்த பின்னரும் கார்த்திக் ஆர்யன் இது குறித்து விளக்கம் கொடுக்க முன்வராமல் இருப்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது. அவர் வெளியே வந்து பேசினால் இதில் எது உண்மை என்பதே தெரியவரும். கார்த்திக் ஆர்யன் தற்போது 'தமாகா' என்ற படத்திலும் 'பூல் புலய்யா' (Bhool Bhulaiyaa 2) இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
source https://cinema.vikatan.com/bollywood/kartik-aaryan-is-getting-targeted-by-karan-johar-criticizes-bollywood
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக