Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

Exclusive : சிவகார்த்திகேயனுடன் செம டீல் போட்ட சன் டிவி… 2 ஆண்டுகளில் 5 படங்கள்… சம்பளம் எவ்வளவு?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்கள் மனங்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயன் அந்த புகழ் வெளிச்சத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி சினிமாவுக்குள் நுழைந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், இதுவரை 14 படங்களில் நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர் நீச்சல்’, ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘ரஜினி முருகன்’,’நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. தற்போது இவர் நடிப்பில் ‘டாக்டர்' படம் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்குத் தயாராகயிருக்கிறது. இதுதவிர ‘அயலான்’ மற்றும், சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் ‘டான்' படமும் ஷூட்டிங்கில் இருக்கின்றன.

மெரீனா - சிவகார்த்திகேயன் - ஓவியா


இதற்கிடையே சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சில திட்டமிடப்பட்டதையும் தாண்டி அதிகம் செலவு செய்யப்பட அந்தக் கடன் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியது. தயாரிப்பாளர் கொடுக்கவேண்டிய கடனை, தன் கடனாக ஏற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக்கொடுக்கும் பொறுப்பை சிவகார்த்திகேயனே ஏற்றுக்கொண்டார். இதனால் அடுத்தடுத்து படங்கள் செய்து கடனை விரைந்து அடைக்கவேண்டிய சூழல் சிவகார்த்திகேயனை சூழ்ந்திருந்தது.

இந்தநிலையில்தான் ‘டாக்டர்' படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கும் பிரச்னை வந்தது. இந்தப்படம் கடந்த மார்ச் மாதம் தியேட்டர் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதனால், இதன் சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவிக்கு விற்றுவிட்டார்கள். ஆனால், கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்க ரிலீஸை தள்ளிவைத்தது ‘டாக்டர்' படக்குழு.

இரண்டாம் அலை எல்லோரது கணிப்பையும் தாண்டி மிகக்கொடூரமாகப் பரவியதால் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து தியேட்டர்கள் பழையபடி திறக்க இந்த ஆண்டு அக்டோபர் மாதம் போல ஆகிவிடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படித்திறந்தாலும் பழையபடி கூட்டம் தியேட்டர்களுக்கு வருமா என்பது சந்தேகமே என்பதால் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படங்கள் எல்லாம் நேரடி ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகின.

சிவகார்த்திகேயன்

‘டாக்டர்' படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும்தொகைக்கு வாங்க முன்வந்தது. ஆனால், சேட்டிலைட் உரிமையையும் சேர்த்துக்கேட்டது. சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே வாங்கிவிட்ட சன் டிவி படத்தை திரும்பத் தர மறுத்தது. இப்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் சன் டிவியோடு மெகா ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சன் டிவி தயாரிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஐந்து படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 75 கோடி ரூபாய் சம்பளம். தற்போதைய கடன் சூழலில் இருந்துவெளிவர இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் இதற்கு உடனடியாக ஒப்புதம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தீவிரம் குறைந்ததும் இந்தப்படங்களின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சன் டிவி தயாரிக்கப்போகும் சிவகார்த்திகேயனின் 5 படங்களின் இயக்குநர் யார், யார் என்கிற தேடல் தொடங்கிவிட்டது. எப்படியும் இதில் ஒரு படத்தை பட்ஜெட் இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் என்கிற பேச்சுகளும் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், சிவகார்த்திகேயனின் அடுத்த 5 படங்களுக்குமான இயக்குநர்களாக யார் யாரெல்லாம் சரியாக இருப்பார்கள்… உங்கள் சாய்ஸ் என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/siva-karthikeyan-strikes-a-mega-deal-with-sun-pictures

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக