Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

`கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும்..' - சசிகலா மீதான சீற்றமும்.. சர்ச்சைக்கு வித்திட்ட கணக்கும்!

“சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது" என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலாவிற்கு எதிராக சீற்றம் கொள்ள, சசிகலா தரப்பு எடுத்துவரும் ரகசிய நடவடிக்கையே காரணம் என்று தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

சி.வி.சண்முகம்

அ.தி.மு.கவுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஐடியாவில் சசிகலா சமீபகாலமாக செயல்பட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தி.மு.க ஆட்சியை பிடித்த பிறகு, அ.ம.மு.க தொண்டர்களுக்கும், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசிவருகிறார். இது அ.தி.மு.க-விற்குள் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க வின் மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா விவகாரம் வெடித்தப்பிறகு பன்னீர் செல்வத்தை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அ.தி.மு.க.விற்குள் கொண்டுவர வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

இதற்கு பன்னீர் தரப்பு, `நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆனால், கட்சியின் எதிர்காலத்திற்கு தகுந்தது போன்ற முடிவினை எடுங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராயுங்கள்’ என்று சொல்லியிருக்கிறது. இதன்பிறகு தனக்கு நெருக்கமனாவர்களிடம் பேசிய எடப்பாடி, `அவர் சசிகலாவை வைத்து நமக்கு செக் வைக்க பார்க்கிறார். நாம் சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அதை வைத்து கவுண்டர்கள் நமக்கு எதிராக களமாடுகிறார்கள் என்று முக்குலத்தோர் சமூகத்திடம் நம்மை தவறாக சித்தரித்துவிடுவார். இதற்கு வேறு வழியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

இதன்பிறகு சி.வி.சண்முகத்திடமும், `சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவரும் எண்ணம் பன்னீரிடம் இருக்கிறது’ என்று எடப்பாடி தரப்பு எடுத்துச் சொன்னது. உங்கள் பாணியில் நீங்களும் இதற்கு எதிர்ப்பினைப் பதிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்.

இதன்பிறகு சி.வி.சண்முகம், ``அ.தி.மு.கவுக்கும் சசிகலாவும் சம்பந்தம் இல்லை” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். அதே போல் சசிகலா தொண்டர் ஒருவருடன் பேசும் முதல் ஆடியோ வெளியான மறுதினம் அ.தி.மு.கவின் துணைப்பொதுச்செயலாளர் முனுசாமி, “சசிகலாவை எந்த அ.தி.மு.க தொண்டனும் ஆதரிக்க மாட்டான். அவர் அ.ம.மு.க வினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்” என்று பேசியிருந்தார். முனுசாமியும், சி.வி.சண்முகம் என சசிகலாவை வரிசையாக எதிர்க்கும் அனைவருமே வன்னியர். இதன் மூலம் சசிகலாவின் வருகையை கட்சியில் உள்ள வன்னியர்களே எதிர்க்கிறார்கள் என்கிற தோற்றத்தை எடப்பாடி கட்டமைக்கப்பார்க்கிறார் என்கிறார்கள்.

அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி

இதனால், “ வன்னியர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்திற்கும் இடையேயான ஒரு மனக்கசப்பு மட்டுமே உருவாகும். தன் பக்கம் இந்த சிக்கல் வராது” என்கிற கணக்கு எடப்பாடியிடம் உள்ளது. அதே போல் தினகரன் குறித்தும் எடப்பாடி தரப்பு விசாரித்துள்ளது. தினகரன் தொடர்ந்து தனித்து இயங்கவே விரும்புகிறார் என்று சொல்லியுள்ளார்கள். இதன்பிறகே சசிகலாவிற்கு எதிரான தனது அரசியல் காய்களை வேகமாக நகர்த்த ஆரம்பித்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள். எடப்பாடியின் இந்தக் காய் நகர்த்தல்களை அறிந்து பன்னீரும் பவ்யமாக சில மூவ்களை செய்ய ஆரம்பித்துள்ளார். விரைவில் பன்னீர் எடுக்கவிருக்கும் காய் நகர்த்தல்களைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/background-story-on-cv-shanmugam-comment-over-sasikala-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக