கோவிட் சிகிச்சையில் கொடுக்கப்படும் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து எப்படிச் செயலாற்றுகிறது? அது யாருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது?
- பிரபு (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் விஜய் சக்ரவர்த்தி.
``அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து `ஆன்டிபாடி காக்டெயில்' என்ற வார்த்தை மக்களிடம் பிரபலமாக ஆரம்பித்தது.
Casirivimab மற்றும் Imdevimab ஆகிய இரண்டு மருந்துகளின் கலவையான , மோனோகுளோனல் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து, சார்ஸ் கோவிட் 2-ன் ( SARS-CoV-2) ஸ்பைக் புரதத்திற்கு எதிராக இயக்கப்படுகிறது. கோவிட் வைரஸ் உடலில் நுழைந்ததும், முதல் வாரத்தில் பல்கிப் பெருகுகிறது, அப்போது பலருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் பிற அறிகுறிகள் வருகின்றன. இரண்டாவது வாரத்தில் இது நுரையீரலில் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது ஹைப்பாக்ஸியா மற்றும் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்தானது வைரஸ் இணைப்பைத் தடுத்து, அதன் பெருக்கத்தையும் தடுக்கிறது, உடலில் வைரஸ் சுமை குறைய உதவுகிறது, இதன் மூலம் நோயின் தீவிரம் தடுக்கப்படுகிறது.
கோவிட் நோயின் தீவிர பாதிப்பில் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேலானவர்கள், இதய நோயாளிகள், பருமனானவர்கள், நீரிழிவு, புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய்த் தடுப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள் போன்றோருக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படலாம்.
எல்லா நோயாளிகளுக்கும் இந்த மருந்து தேவையில்லை. எளிதில் கிடைக்கும் இந்த ஊசியை அவசர சிகிச்சை அறையில் ஒரு மணி நேரக் கண்காணிப்புடன் வெளிநோயாளியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
Also Read: Covid Questions: இரண்டு தடுப்பூசிகள் கலந்து போடும் `வாக்சின் காக்டெயில்' ஆராய்ச்சிகள் எதற்காக?
சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து முதல் 7 நாள்களை மக்கள் கவனிக்கத் தவறவிடுகின்றனர். சிலர் அதற்குள் ஆக்ஸிஜன் குறையும் ஹைப்பாக்ஸியா நிலையை அடைந்துவிடுகின்றனர். எனவே இந்த மருந்தின் முழுப் பலனை பெற அறிகுறிகளைத் தவறவிடாமலும், ஆரம்பத்திலேயே சிகிச்சையைத் தொடங்குவதும் மிக முக்கியம். நோய் தீவிரமடையும்போதோ, ஏற்கெனவே ஆக்ஸிஜன் சிகிச்சையில் இருக்கும் நிலையிலோ இந்த மருந்து பலன் தராது.
சிலருக்கு காய்ச்சல் அல்லது தடிப்புகள் மற்றும் மிக அரிதான அலர்ஜியான அனாபிலாக்ஸிஸ் போன்ற சில அறிகுறிகளை இந்த மருந்து ஏற்படுத்தலாம். மற்றபடி இதுவரை இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பெரும்பாலான நோயாளிகளும் கடுமையான, பாதகமான விளைவுகளை எதிர்கொண்டதாகத் தகவல்கள் இல்லை. இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.59,750."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/who-is-more-preferable-to-take-antibody-cocktail-in-covid-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக