Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

ஆட்டோ ஃபோகஸ் : கார், பைக்குகளை அழகாகப் படம் பிடிப்பது எப்படி... சொல்லித்தருகிறார் சத்யஜித்!

கடந்த வாரம் கிளப் ஹவுஸில் மிக முக்கியமான பேசுபொருளாக இருந்தது ஆட்டோமொபைல் போட்டோகிராபி. கார், பைக்குகளை அழகாககப் படம்பிடிப்பது எப்படி, இதைப்பற்றி யாரிடம் கற்றுக்கொள்ளவது, இந்தத் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் என்ன என்பது குறித்து நிறைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆட்டோமொபைல் போட்டோகிராபி குறித்து ‘மோட்டார் விகடன்' இதழில் ஒரு தொடரே எழுதியிருக்கிறார் இந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் போட்டோகிராபர் சத்யஜித்.

சென்னை லயோலாவில் படித்து, இந்தியாவின் முதன்மைப் புகைப்படக்காரரான இக்பால் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள உலகின் மிகச் சிறந்த ஆட்டோமொபைல் போட்டோகிராபர்களில் ஒருவரான டேவிட் லெபானிடமும் பயிற்சி பெற்றவர் சத்யஜித். மாருதி, ஹூண்டாய், ராயல் என்ஃபீல்டு, யமஹா, ஹோண்டா, பஜாஜ், டொயோட்டா, டிவிஎஸ்,டாஃபே என இந்தியாவின் அத்தனை முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆஸ்தான போட்டோகிராஃபரும் இவர்தான். இவரால் படம்பிடிக்கப்படாத கார், பைக்குகளே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம்.

சத்யஜித் ‘மோட்டார் விகடன்' இதழில் எழுதிய ‘ஆட்டோ ஃபோகஸ்' தொடர் விகடன் வாசகர்களுக்காக இனி ஒவ்வொருவாரமும் புதன்கிழமைகளில் விகடன் இணையதளத்தில் வெளியாகும்.

ஹோண்டா அமேஸ்

ஆட்டோமொபைல் போட்டோகிராபி குறித்து ஒரு தொடர் எழுதும்படி மோட்டார் விகடனில் இருந்து அழைப்பு வந்ததும், எனக்கு சரி என்று சொல்வதா, வேண்டாம் என்று சொல்வதா என்ற தயக்கம்தான் முதலில் வந்தது. காரணம், இதைப் படித்துவிட்டாலே போதும். ஆட்டோமொபைல் போட்டோகிராபர் ஆகிவிடலாம் என்று யாரும் ஈஸியாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலைதான். உங்கள் ஆசைகளையும், கனவுகளையும் மேலும் விரிவுபடுத்தவும், உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் மட்டுமே இங்கே நான் சொல்லப் போகும் என் அனுபவங்களும் கருத்துக்களும் உதவுமே தவிர, இவற்றைத் தெரிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் ஆட்டோமொபைல் போட்டோகிராபர் ஆகிவிட முடியாது.


எம்.பி.பி.எஸ் படித்த பிறகுதான் குழந்தை மருத்துவம், இதய மருத்துவம் போன்றவற்றில் எம்.டி., எம்.எஸ்., என்று மேல்படிப்பு படிக்க முடியும். அதுபோலத்தான் பேஸிக் போட்டோகிராபியை முழுமையாகக் கற்றுக் கொண்டால்தான் ஆட்டோமொபைல் போட்டோகிராபராகத் தகுதி பெற முடியும்.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைப் பயணம், சாலைப் பயணம் இரண்டுமே ஒன்றுதான். வாழ்க்கைப் பயணத்தில் நாம்தான் வாகனம். சாலைப் பயணத்தில் நம்முடைய காரோ, பைக்கோதான் வாகனம். எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. காரில் பயணம் போகும்போது வழியில் டீ அல்லது ஓட்டலில் சாப்பிட நிற்கும்போது, கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று காரைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்தது இந்த கார்தான் என்று நினைத்து, காருக்கு நன்றி சொல்வேன். கார் மட்டும் அல்ல. இந்த காரோடு சேர்ந்து வாழ்க்கையில் நானும் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்பது என் கண் முன் ஓடும்.

ஆட்டோமொபைல் போட்டோகிராபி ஆசை எனக்குள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது இப்படித்தான். கார் மற்றும் பைக்குகள் மீது காதல் இருந்தால்தான் சிறந்த ஆட்டோமொபைல் போட்டோகிராபர் ஆக முடியும்.

ஹூண்டாய் ஐ20

எல்லோருக்குமே அனுபவம் வேண்டும். கார் பயணமாக இருந்தாலும் சரி, வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி, அதற்காகத்தான் பயணிக்கிறோம். காருக்கும், மனிதர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கார் நான்கு பக்கமும் கண்ணாடி மற்றும் மெட்டல் என்பதால் எதிரொலிக்கும். அதேபோல்தான் மனிதர்களும் நேரத்துக்கு ஏற்றபடி, சூழலுக்கு ஏற்றபடி குணாதிசயங்கள் எதிரொலிக்கும். இந்த மனிதனின் குணம் இதுதான் என பார்த்த உடனே எப்படிக் கண்டு பிடிக்க முடியாதோ, அதுபோலத்தான் வாகனங்களின் சிறப்புகளும். இந்த வாகனத்தை எந்தக் கோணத்தில், எந்த நேரத்தில், எப்படி எடுத்தால் படம் சிறப்பாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது... அவ்வளவு சுலபம் இல்லை!

முதலில் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டியது, கையில் கேமரா இருந்தாலே ஒருவர் போட்டோகிராஃபர் இல்லை. கேமரா என்பது வெறும் கருவிதான். சிறந்த போட்டோகிராஃபர் ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் கேமரா, கம்ப்யூட்டர், போட்டோ ஷாப் - இதை எல்லாம் மறந்துவிடுவது நல்லது. உங்களுக்கு என்னுடைய முதல் பயிற்சியே... கண்களால் படம் எடுப்பது எப்படி என்பதுதான்.

உங்கள் வீட்டு அருகில் இருக்கும் கோயிலையோ, சர்ச்சையோ, மசூதியையோ அல்லது எதாவது ஒரு கட்டடத்தையோ போய்ப் பாருங்கள். காலையில் அந்தக் கட்டடம் எப்படி இருக்கிறது; எட்டு மணி சூரிய வெளிச்சத்தில் எப்படி இருக்கிறது; 12 மணிக்கு அதே கட்டடம் எப்படி இருக்கிறது; மாலை நான்கு மணிக்கு எப்படி இருக்கிறது; இரவு விளக்கு வெளிச்சத்தில் எப்படி இருக்கிறது என்பதை ரசனையோடும் காதலோடும் உங்கள் கண்களில் முதலில் பதிவு செய்யுங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ்

கட்டடம் ஒன்றுதான். ஆனால், வெளிச்சத்துக்கு ஏற்ப நம் கண்ணில் பதியும் படம் மாறிக்கொண்டே இருக்கும். எந்த நேரத்தில் அந்தக் கட்டடத்தின் அழகு முழுமையாகத் தெரிந்தது; எந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது அது அசரடித்தது என உங்கள் கண்களால் தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டே இருங்கள்.

நண்பர்களே... போட்டோ எடுங்கள். ஆனால் கையில் கேமரா இல்லாமல்!

வாசகர்கள், தாங்கள் எடுத்த கார், பைக் படங்களை autofocus@vikatan.com- என்கிற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சத்யஜித் தேர்ந்தெடுக்கும் சிறந்த படங்கள் விகடன் இணையதளத்தில் வெளியாகும்.


source https://www.vikatan.com/automobile/motor/an-in-depth-series-on-automobile-photography-written-by-satyajit-cp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக