கறுப்பு பூஞ்சை நோய், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் தாக்கும் வாய்ப்பு உள்ளதா?
- செந்தாமரை கண்ணன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் விஜயகிருஷ்ணன்.
``தடுப்பூசியின் வேலை என்பது கோவிட் 19 தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு கொடுப்பதுதான். கோவிட் 19 தொற்று ஏற்படாமலிருக்கும்படி நமக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும். ஆனால், அது மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு எதிராக நேரடியாகவெல்லாம் செயல்பட்டுப் பாதுகாப்பு தராது. கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தொற்றின் தீவிரத்தைக் குறைத்து நம்மைப் பாதுகாப்பவை. அப்படிப் பார்த்தால் கோவிட் தொற்றின் தீவிர நிலையான மியூகோர்மைகோசிஸ் பாதிப்பையும் அவை குறைக்கும்".
நான் நாள்பட்ட சிறுநீரக நோயாளி. ஆனால், நான் டயாலிசிஸ் நோயாளி அல்ல. நான் எந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?
- ராமமூர்த்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் சஃபி.
``இப்போது செலுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளுமே சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கேற்றபடி தயாரிக்கப்பட்டவைதான். இந்த இரண்டு தடுப்பூசிகளின் டிரையல்களிலும் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்களையும் சேர்த்தே கண்காணித்திருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டில் எந்தத் தடுப்பூசியை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இரண்டில் இதுதான் சிறந்தது என்று சொல்ல முடியாது. டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்போரும் தங்கள் சிறுநீரகவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தகுந்த இடைவெளியில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/news/healthy/will-taking-covid-19-vaccines-stop-one-from-getting-black-fungus-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக