Ad

செவ்வாய், 1 ஜூன், 2021

`கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்' - `பிரிக்ஸ்’ கூட்டத்தில் சீனா

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது (BRICS) அமைப்பாகும். உலகின் வளரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான இந்த பிரிக்ஸ் அமைப்பு அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை போன்றவற்றை முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. கூட்டமைப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் வருடா வருடம் பிரிக்ஸ் மாநாடு நடத்தப்பட்டு கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்படும்.

அந்த வகையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கூட்டத்தில், சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் ஆல்பர்டோ பிராங்கோ பிராங்கா, ரஷ்யா சார்பில் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிரேஸ் நலேடி மன்டிசா பாண்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிக்ஸ் அமைப்பு

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தை முதல் முறையாகத் தலைமை ஏற்று நேற்று இந்தியா நடத்தியது. கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் 15-வது கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறது என்பதில் பெருமை கொள்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சர்களாகிய நாம் முதல் முறையாக 2006-ல் நியூயார்க்கில் சந்தித்தோம். அதில் தொடங்கிய நம்முடைய பயணம் வெகு தூரப் பயணமாக மாறியிருக்கிறது. ஆனால், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் அமைப்பின் கோட்பாடுகள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது" என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய சங்கரைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, "நான் மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு என்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சீனா மற்றும் அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் இந்தியாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா எந்த நேரத்திலும் வழங்கத் தயாராக இருக்கிறது. இந்தியாவின் இந்த போராட்டத்தில் சீனா உடன் நிற்கும். இந்தியா இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நிச்சயமாக மீண்டெழும் என்று நம்புகிறேன்" என்றார்.

சீன அமைச்சர் வாங் யி

ஒருபுறம் இந்தியாவுடன் எல்லை பிரச்னைகள் நீடித்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவுக்கு உறுதுணையாக நிற்போம் என்று சீன மந்திரி உறுதி அளித்துள்ளதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். எனினும் வார்த்தைகளில் ஒன்றும் செயல்களில் மற்றொன்றுமாக இருப்பது சீனாவின் வாடிக்கை என விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள் சிலர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/china-assured-that-it-will-stand-with-india-during-this-covid-second-wave-crisis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக