Ad

சனி, 19 ஜூன், 2021

கும்பமேளா: எல்.ஐ.சி ஏஜென்ட்க்கு வந்த மெசேஜ்! - ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் சிக்கியது எப்படி?!

உத்ரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கும்பமேளா திருவிழா நடைபெற்றது. `நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் ஓரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்கும்' எனப் பல தரப்பிலிருந்து வந்த எச்சரிக்கைகளையும் மீறி, கும்பமேளா நடத்தப்பட்டது. பின்னர் பிரதமரின் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் இன்றி கடைசி சில நாள்கள் விழா நடைபெற்றது. இதனிடையே`கும்பமேளா காரணமாகத்தான் இரண்டாவது அலையின் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கிறது' என்கிற குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பலருக்கும் போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒரே மெசேஜில் சிக்கிய ஒரு லட்சம் போலி பரிசோதனைகள்!

ஏப்ரல் 22-ம் தேதியன்று, பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் எல்.ஐ.சி ஏஜென்ட் விபன் படேலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் `உங்களுக்கு கொரோனா நெகட்டிவ்' என்கிற தகவல் இடம்பெற்றிருந்தது. கொரோனா பரிசோதனைக்கே செல்லாத விபன் படேலுக்கு, இந்த மெசேஜ் அதிர்ச்சியளித்தது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கொரோனா பரிசோதனை ஹரித்வாரில் நடைபெற்றிருப்பதாக மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்ததால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் விபன் படேல். இது குறித்து உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறார் விபன். ஆனால், அவர் அளித்த புகார்மீது பல நாள்களாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு இந்த விஷயத்தை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

corona testing

Also Read: கும்ப மேளா: `யார் செத்தால் என்ன, ஜோதிடமே முக்கியம்!' - பா.ஜ.க அரசுகள் மக்களை பணயமாக்கியது எப்படி?

இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென உத்ரகாண்ட் சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். இது தொடர்பாக உத்ரகாண்ட் சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில் இரண்டு தனியார் கொரோனா பரிசோதனை மையங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஓரே முகவரி, ஒரே தொலைப்பேசி எண் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பரிசோதனை முடிவு அறிக்கைகள் சிக்கியிருக்கின்றன. இது குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், குற்றம் கண்டறியப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டுமென்றும் ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்திரேட் உத்தரவிட்டிருக்கிறார்.

அதிர்ச்சி தரும் பொது நல வழக்கு!

உத்தரகாண்டில் மொத்தம் 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில், கும்பமேளா நடந்த காலகட்டத்தில் ஹரித்வார் மாவட்டத்தில் 6,00,291 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 17,335 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே காலகட்டத்தில் மற்ற 12 மாவட்டங்களில் 4,42,432 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், 62,775 பேருக்குத் தொற்று உறுதியாகியிருக்கிறது.

கும்பமேளா

Also Read: மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்?; அதிரவைக்கும் மோசடி! - நடந்தது என்ன?

ஒட்டுமொத்தமாக 12 மாவட்டங்களையும்விட ஹரித்வார் மாவட்டத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், மற்ற மாவட்டங்களில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கைகளைவிட 80 சதவிகிதம் குறைவாகவே ஹரித்வார் மாவட்டத்தில் ஏற்பட்டிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியது. இந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில் 70 லட்சம் பேர் கலந்து கொண்டதாகக் கும்பமேளா நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்படியிருக்கையில் மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா தொற்று எண்ணிக்கை காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் சச்சிதானந்த் என்பவர் நைனிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் மனுவில், தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரிந்த இளைஞர்கள் சிலர் மாவட்ட அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில்,

``கும்பமேளாவுக்கு வருபவர்களை எந்தவித தடையுமின்றி ஹரித்வாருக்குள் நுழையவிட வேண்டும் என்பதற்காகவே போலி கொரோனா சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன'' என்கிற குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது. போலி கொரோனா பரிசோதனைகள் கண்டறியப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், வரும் ஜூன் 23-ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது சச்சிதானந்த் பதிவு செய்த பொது நல வழக்கு.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலி கொரோனா பரிசோதனைகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஹரித்வார் மாவட்டம் முழுவதும் உள்ள 22 தனியார் பரிசோதனை மையங்கள் வழங்கிய முடிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டுமெனக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kumbh-mela-one-lakh-fake-covid-test-results-found-out-by-a-single-message-received-by-an-lic-agent

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக