Ad

சனி, 19 ஜூன், 2021

கன்னியாகுமரி மலையாள எழுத்தாளர் ரமேஷன் நாயர் கொரோனாவால் மரணம்... அவரின் வாழ்வும் இலக்கியப் பணியும்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரபுரத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் எஸ்.ரமேஷன் நாயர். எழுத்தாளர் மட்டுமல்லாமல் கவிஞராகவும் இருந்தார். 650-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்தி பாடல்களை எழுதியுள்ளார்.

ஷடானனன் தம்பி, பார்வதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மே 3-ம் தேதி பிறந்தார் ரமேஷன் நாயர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவருக்கு ரெமா என்ற மனைவியும், மனு ரமேஷன் என்ற மகனும் உள்ளனர். ரெமா-வும் எழுத்தாளர், மகன் மனு, இசை அமைப்பாளர். ரமேஷன் நாயர் ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்று தீவிரமாக இலக்கிய பணியில் இறங்கினார். மலையாள இலக்கியத்திற்கு ஏறத்தாழ 50 புத்தகங்களை படைத்துத் தந்துள்ளார். 1985-ல் 'பத்தாமுதயம்' படத்தின் பாடல்களை எழுதியதன் மூலம் மலையாளிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.

கருணாநிதி

தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் பாடல்களை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அதை பாராட்டும் விதமாக தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கன்னியாகுமரியில் 1.1.2000 அன்று 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் ரமேஷன் நாயரை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். கருணாநிதி வேண்டுகோளுக்கு இணங்க அவர் எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்தார் ரமேஷன் நாயர்.

Also Read: மில்கா சிங்: இந்தியாவுக்காக ரோம் ஒலிம்பிக்கில் கனவுகளோடு ஓடிய கால்கள்... ஓட்டத்தை முடித்தது!

ரமேஷன் நாயர் எழுதிய குரு பெளர்ணிமா என்ற மலையாள கவிதை நூலுக்கு 2018-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த நூலில் ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை வரலாற்றை கூறியிருந்தார். 2010-ம் ஆண்டு கேரள சாகித்ய அகாடமி விருது மற்றும் ஆசான் விருது ஆகியவை ரமேஷன் நாயருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது சிறந்த திரைப்படப் பாடலுக்காக விருது என பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும் பெற்றவர் ரமேஷன் நாயர். விவேகானந்தர் குறித்த காவியம் மற்றும் கம்பராமாயணம் மலையாள மொழி பெயர்ப்பு பணியையும் தொடங்கியிருந்தார். அது நிறைவடைவதற்கு முன்னரே மரணம் அடைந்துவிட்டார்.

ரமேஷன் நாயர்

பல ஆண்டுகளாக அவர் கொச்சியில் வசித்துவந்தார். இந்த நிலையில் கொரோனா பாதித்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு கேன்சர் பாதிப்பு இருந்தது. இரண்டு நாளுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் நேற்று அவர் மரணமடைந்தார். அவருக்கு 73 வயது.

அவரது இறுதிச்சடங்கு, இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புகளை வழங்கிவந்த ரமேஷன் நாயரின் மரணம் மலையாள இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பாகும்.

ரமேஷன் நாயர் சாகித்ய அகடமி விருது பெற்ற சமயத்தில், "கன்னியாகுமரி மாவட்டத்தின் இதய துடிப்பான மலையாளமாக்கும் எனது மலையாளம். அந்த மலையாளம் அங்கீகரிக்கப்பட்டது என்பதுதான் எனக்கு கூடுதல் பெருமை" என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/literature/famous-malayalam-writer-ramesan-nair-passed-away-due-to-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக