Ad

வியாழன், 3 ஜூன், 2021

`இந்தியாவின் மோசமான மொழி கன்னடமா..?' - இணைய தேடல் சர்ச்சைக்கு மன்னிப்பு கோரிய கூகுள் இந்தியா

இணையவாசிகள் கூகுளை வைத்து சர்ச்சைகளைக் கிளப்புவது வாடிக்கையான ஒன்று. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?, நகரம் எது?, எந்த மொழி உயர்ந்தது?, தமிழ்நாட்டில் தல'யா..தளபதியா? என வகை வகையாகக் கூகுளில் பதிவிட்டு அதன் தேடல் முடிவுகளை வைத்துப் பல தரப்பினராக பிரிந்து சமூகவலைத்தளங்களில் கருத்து மோதல்களை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பது சில குரூப்களின் முழு நேர வேலையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தென் இந்தியாவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் 'கன்னட' மொழியினை இந்தியாவின் மோசமான மொழி என்று இணையதளம் ஒன்றில் வெளியான சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடித்து, தற்போது கூகுள் நிறுவனத்தினையே கன்னட மொழியில் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறது.

பொதுவாக, quora போன்ற வலைத்தள பக்கங்களில் தான் இது போன்ற கேள்விகள் பயனர்களால் பதியப்படும். அதற்கு இணையவாசிகள் ஒவ்வொருவரும் ஒரு பதிலை முன்னிறுத்தி கருத்துக்களைத் தெரிவிப்பார்கள்...அந்த கேள்விகளுக்கான முடிவுகளும் மிகப் பெரியளவில் இணையத்தில் வைரலாகும்.

சர்ச்சையான கூகுள் தேடல் முடிவு

ஆனால், இந்த விவகாரத்தில் ' debtconsolidationsquad.com' என்ற இணையதளத்தின் கேள்வி பதில் தான் கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் 'worlds ugliest language - kannada' என்று கூகுள் தேடல் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கொதித்துப் போன கன்னட மொழி பேசும் மக்கள் உடனடியாக சந்தேகத்துடன் கூகுள் செய்து பார்க்க, கன்னட மொழியே மோசமான மொழி என்று தேடல் முடிவுகள் காட்டியிருக்கிறது.

வெறுப்பின் உச்சத்தைத் தொட்ட கன்னட மக்கள் கூகுளின் தேடல் முடிவினை சுட்டிக்காட்டி கன்னட மொழியினை கூகுள் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளதாக இணையவெளியில் கருத்துக்களைப் பதிவிட்டு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இந்த கூகுள் தேடல் விவகாரம் கர்நாடகாவின் முக்கிய அரசியல்வாதிகளின் காதுகளுக்கும் சென்றிருக்கிறது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன், ஆம் ஆத்மி தலைவர் முகுந்த் கவுடா உள்ளிட்ட பலரும் , சர்ச்சையான தேடல் முடிவினை வெளியிட்டு கன்னட மொழியை அவதூறு செய்ததற்காகக் கூகுள் இந்தியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் உடனடியாக தேடல் முடிவை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதே போல், கன்னட மொழி வளர்ச்சி மந்திரி அரவிந்த் லிம்பவலியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கன்னட மக்களின் கண்டனங்களுக்கு விளக்கமளித்துள்ள கூகுள் இந்தியா நிறுவனம் , தேடல் முடிவுகள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் சொந்த கருத்துக்கள் இல்லையென்றும், தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாகக் கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "இணையத் தேடல்கள் எப்போதுமே துல்லியமாக அமைந்துவிடுவதில்லை. இணையத்தில் தேடல் முடிவுகள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆச்சரியமான பதில்களைத் தரும். ஆனால், தற்போது நிகழ்ந்திருப்பது சரியானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். இது போன்ற விஷயங்கள் குறித்து எங்களுக்குத் தெரியவரும் போது அவற்றை விரைவாகத் தீர்க்க நடவடிக்கைகள் எடுப்போம். ஆனால், பொதுவாகவே இந்த தேடல்கள் கூகுளின் கருத்துக்கள் அல்ல. தவறான புரிதலுக்காகவும், மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதற்காகவும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூகுள் குறிப்பிட்டிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தொடர்ந்து கன்னட மொழியிலும் கூகுள் நிறுவனம் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், கூகுள் நிறுவனம் இணையத்தில் கன்னட மொழி குறித்த சர்ச்சையான தேடல் முடிவினையும் நீக்கி உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/politics/google-india-apologies-for-the-search-result-which-insults-the-language-kannada

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக