மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதால் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் பிற்பகல் 2 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு காரணம் இல்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப்பும் அவரது காதலி என்று கூறப்படும் திஷா பதானியும் சேர்ந்து பாந்த்ரா கடற்கரை பகுதியில் காரில் சுற்றிக்கொண்டிருந்தனர். அதுவும் பிற்பகல் இரண்டு மணிக்கு பிறகு காரில் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களது காரை மறித்த போலீஸார் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டனர். ஆனால் அவர்களால் சரியான காரணம் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இருவரையும் எச்சரித்த போலீஸார் கொரோனா விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றக்கூடாது என்று தெரிவித்தனர். அதோடு இருவரின் ஆதார் கார்டு விபரங்களை சோதனை செய்துவிட்டு, இருவர் மீதும் கொரோனா விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``கொரோனா விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாந்த்ரா கடற்கரை பகுடியில் பாலிவுட் நட்சத்திரங்கள் இரண்டு பேர் மீது விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வந்து தங்களது ஹீரோயிசத்தை காட்டவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக தங்களது காதலை தெரிவிக்காமல் ஜோடியாக வலம் வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சல்மான்கானின் ராதே படத்தில் இருவரும் நடித்துள்ளனர். மும்பை முழுக்க கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஆட்களை நியமித்து இருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/bollywood/mumbai-police-file-case-against-bollywood-couple-for-not-obeying-restrictions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக