மும்பையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி மும்பையில் போராட்டம் நடத்தியது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் இப்போது கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது குறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப், நடிகர் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் மற்றும் அனுபம்கெர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் எரிபொருள் விலை உயர்வு வானை முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருந்த போதும் அது குறித்து கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாய்ஜக்தாப் அளித்த பேட்டியில், ``காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த அளவு எரிபொருள் விலை அதிகரித்ததற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டனர். ஆனால் இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. அப்படி இருந்தும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருப்பது ஏன்? 2012ம் ஆண்டு பெட்ரோல் விலை 63 ரூபாயிக்கு சென்ற போது அமிதாப்பச்சன் அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால் இப்போது ஏன் ட்விட்டரில் பதிவிடவில்லை என்று கடிதத்தில் கேள்வி கேட்டுள்ளேன்” என்று தெரிவித்தார். மும்பையில் பெட்ரோல் விலை 100.72 ரூபாயாகவும், டீசல் விலை 92.69 ரூபாயாகவும் இருக்கிறது. ஆனாலும் விலை உயர்வுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எந்த குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வரும் முன்பு மும்பையில் பெட்ரோல் விலை 77 ரூபாயில் இருந்து 78 வரை இருந்தது. ஆனால் பொதுமுடக்க காலத்தில் எரிபொருள் விலையும், பங்குச்சந்தையும் வேகமாக ஏறின. இப்போது பெட்ரோல் மும்பையில் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
source https://www.vikatan.com/news/politics/petrol-diesel-price-hike-why-are-you-silent-mumbai-congress-letter-to-amitabh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக