Ad

வியாழன், 17 ஜூன், 2021

பா.ஜ.க-வை அலறவிடும் மம்தா ! அவருக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?!

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்களில் தமிழ்நாடும், கேரளாவும் தேறாது என்பது பா.ஜ.க தலைவர்களுக்கு நன்கு தெரியும். ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் அசாமில் மீண்டும் வெற்றி பெறப்போவது நாம்தான் என்பது பா.ஜ.க-வினருக்குத் தெரியும். புதுச்சேரியில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்ததால் ரங்கசாமிக்கு வெற்றிவாய்ப்பு என்கிற சூழலில், புதுச்சேரி மீது பா.ஜ.க-வுக்கு கவனம் இருந்தது. ஆனாலும், அது ஒரு சிறிய யூனியன் பிரதேசம்தான் என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைமைக்கு மேற்குவங்கத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருந்தது.

மோடி

எப்படியாவது வங்கத்தைப் பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தார்கள். வருடம்தோறும் உலக உலா சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் வீசத்தொடங்கியதும் வீடடங்கினார். வீடுதோறும் விளக்கேற்றுங்கள், மணியோசை எழுப்புங்கள் என்ற அறைகூவலை தொலைக்காட்சி வாயிலாக விடுத்தார். சில வாரங்களாக வீடடைந்திருந்த பிரதமர், முதல் முறையாக வெளியே வந்தது அம்பன் புயலால் மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோதுதான்.

பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் மம்தா முதல்வராக இருக்கும் மாநிலம். அங்கு, சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலம் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் பிரதமர் அங்கு செல்லவில்லையென்றால் எப்படி? பிரதமர் மோடி கொல்கத்தா விமானநிலையத்தில் இறங்கினார். ஒன்றாக சென்றார்கள் என்றாலும், மம்தா கிழக்கு திசையிலும் மோடி மேற்கு திசையிலும் பார்வை செலுத்தியவாறு புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர்.

அமித் ஷா

மேற்கு வங்கத்தை கொரோனா பெருந்தொற்று மிக மோசமாக பாதித்தது. அந்த நேரத்தில், மம்தாவுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க கூர்மைப்படுத்தியது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க வெல்வதற்கான வியூகங்களை வகுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் பறந்தபடியே இருந்தார். ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்துக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸிலிருந்து அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் எம்.பி-க்களையும் முக்கிய நிர்வாகிகளையும் விலைபேசி வலைவீசி தினந்தோறும் இழுத்துக்கொண்டே இருந்தார்கள் பா.ஜ.க-வினர்.

மேற்கு வங்கத்தில் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 294. அவற்றில் 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெல்லும் என்று மோடியும் அமித் ஷாவும் அடித்துச்சொன்னார்கள். கடைசியில், தேர்தலில் அடிவாங்கியது என்னவோ பா.ஜ.க-தான். வெண் நிற சேலை கட்டிக்கொண்டு, கட்டுப்போட்ட காலுடன் கால் பந்து மீது காலை தூக்கிவைத்துக்கொண்டு முகத்தில் வெற்றி மிதப்புடன் நிற்கும் மம்தாவின் படம் தேசம் முழுமைக்கும் வைரலானது. பா.ஜ.க-வின் ஆட்டத்தை க்ளோஸ் செய்த மம்தா, வெறித்தனமாக தன் விளையாட்டைத் தொடர்கிறார்.

தேர்தலுக்கு சில மாதங்களுக்குமுன் மேற்கு வங்கம் கண்ட காட்சிகள் எல்லாம், தற்போது தலைகீழ் நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. பா.ஜ.க-வுக்குத் தாவி அதன் தேசிய துணைத் தலைவர் பதவியைப் பெற்ற முகுல் ராய், ஒரு காலத்தில் மம்தாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை மம்தா பெற்றதைத் தொடர்ந்து, 44 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மம்தாவிடம் திரும்பி வந்திருக்கிறார். தற்போது அவர் பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-வும்கூட. அவர் மட்டுமல்ல... யார் யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு ஓடினார்களோ, அவர்கள் இப்போது ரிவர்ஸ் கியரில் திரிணாமுல் காங்கிரஸுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க முகாம் அலறுகிறது.

ஜகதீப் தங்கர்

2020-ல் அம்பன் புயல்... 2021-ல் யாஸ் புயல். அம்பன் புயல் நேரத்தில் பிரதமர் மோடி வந்தபோது முகத்தைத் திருப்பிக்கொண்ட மம்தா பானர்ஜி, யாஸ் புயல் பாதிப்புகள் தொடர்பான ஆலோசிப்பதற்காக வந்தபோது, தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி புறப்பட்டுப் போய்விட்டார். இதுபோல சில சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியைத் தெறிக்கவிட்டவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். கடந்த ஆண்டு ஒருசம்பவம். காணொலியில் பிரதமர் கூட்டம். முதல்வர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமருடன் மாநில அதிகாரிகள்தான் பேச வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஆகவே, ‘அப்படியென்றால், என் தலைமைச்செயலாளர் மட்டும் பங்கேற்பார்’ என்று வெளியே போய்விட்டார் பினராயி விஜயன். மம்தா பானர்ஜியோ, ஒரு படி மேலே போய், யாஸ் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி வந்திருந்தபோது, தன் தலைமைச்செயலாளருக்கும் வேறொரு வேலை இருக்கிறது என்று கூட்டிபோய்விட்டார். இவ்வளவு தூரம் ஒரு பிரதமரை அவமதிக்கலாமா என்ற ஆதங்கக் குரல்கள் எழுந்தன. ஆனால், மூன்றாவது முறையாக முதல்வராக வெற்றிபெற்றிருக்கும் மம்தா பானர்ஜி, அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமைச்செயலாளரை மத்திய அரசுப் பணிக்குத் திரும்புமாறு தேதி குறித்து கெடுவிதித்தது மத்திய பா.ஜ.க அரசு. அந்த மிரட்டலுக்கெல்லாம் மம்தா அசரவில்லை. சில நாள்களில் ஓய்வுபெற்ற அந்த அதிகாரியை தன் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்திக்கொண்டார் மம்தா. அதற்கு மேல் இந்த விவகாரத்தில் மோடி அரசால் எதுவும் செய்ய முடியவில்லை.

இப்போது பா.ஜ.க-வின் அடிமடியில் கைவைத்துவிட்டார் மம்தா பானர்ஜி. இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் 74 பேர் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்றனர். அவர்களில் முகுல் ராயும் ஒருவர். முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸுக்குத் திரும்பிவிட்டார். மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மம்தா ஒரு தேசியத் தலைவர். அவரது தலைமையில் வங்கம் தனது பழைய புகழைப் பெறுகிறது” என்று முகுல் ராய் குறிப்பிட்டார். அப்போது பேசிய மம்தா, “முகுல் நம் குடும்பத்தின் பழைய உறுப்பினர். பா.ஜ.க-வில் யாரும் நிலைத்திருக்க முடியாது. அங்கு யாரையும் மாண்புடனும் அமைதியுடனும் இருக்க விடமாட்டார்கள். விசாரணை அமைப்புகள் மூலம் முகுல் ராயை அச்சுறுத்தினார்கள். அதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இங்கு அவர் மன அமைதியுடன் இருப்பார்” என்றார்.

முகுல் ராய்

இப்போது பா.ஜ.க., முகுல் ராய் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளது. கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் திரண்டு சென்று மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் முறையிட்டனர். அதற்கு தலைமை தாங்கியவர் சுவேந்து அதிகாரி. ஒரு காலத்தில் மம்தாவின் வலதுகரமாகவும் முக்கிய அமைச்சராகவும் விளங்கியவர். பா.ஜ.க-வுக்கு சென்று நந்திகிராமில் மம்தாவைத் தோற்கடித்தவர். அதெல்லாம் இருக்கட்டும். ஆளுநரை அவர்கள் சந்தித்தபோது, 24 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அங்கு மிஸ்ஸிங். எல்லாம் தீதீயின் ஆட்டம்தான்.

Also Read: முதல்வரான பிறகு மோடியுடன் முதல் சந்திப்பு - ஸ்டாலின் வைக்கவுள்ள கோரிக்கைகள் என்னென்ன?

24 எம்.எல்.ஏ-க்களைக் காணோமென்று பா.ஜ.க முகாம் அதிர்ந்துபோயிருக்கிறது. உடனே டெல்லிக்கு பறந்துவிட்டார் ஆளுநர் ஜக்தீப் தங்கர். பிரதமர் மோடியிடமும் உள்துறை அமித் ஷாவிடமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். முகுல் ராய் மட்டும் திரிணாமுலுக்குப் போயிருந்தால், அவர் மீது கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், 24 எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக மம்தா கட்சிக்குப் போனால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜ் பவனில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்

பல மாநிலங்களில் ஆயாராம் காயாராம் ஆட்டம் ஆடிய ஒரு கட்சியை ஒரே ஒரு மனுஷி தன்னந்தனியாக நின்று அலறவிட்டுக்கொண்டிருக்கிறார். துணிச்சலில், ஜெயலலிதாவையும் மம்தாவையும் பலரும் ஒப்பிட்டுப் பேசுவது உண்டு. ‘மோடியா இந்த லேடியா...’ என்று குரலை உரக்க ஒலித்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டிலிருந்த ஒலித்த அதே குரல் தற்போது வங்கத்திலிருந்து ஒலிக்கிறது. ஜெயலலிதாவை பெண் சிங்கம் என்று சிலர் வர்ணிப்பார்கள். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு முறை பங்கேற்ற ஸ்டாலின், ‘வங்கத்துப் புலி’ என்று மம்தாவை வர்ணித்தார். இந்தப் புலியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது பா.ஜ.க?



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-how-mamta-banerjee-conquer-in-west-bengal-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக