Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

`அரசியல் பேச வரவில்லை; பக்தர்களின் பீதியை போக்கணும்!' - மண்டைக்காடு கோயிலில் அமைச்சர் சேகர் பாபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கோவில் கருவறை மீதுள்ள பழமையான ஓட்டுக்கூரை முழுவதும் தீப் பிடித்து சேதமடைந்தது. இதுகுறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை நேற்று மாலை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "400 ஆண்டுக்கு முன்பே எழுப்பப்பட்ட சுயம்பு வடிவிலான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மரத்தால் ஆன மேற்கூரை எரிந்து பெரிய பாதிப்பை உண்டாக்கியது. ஆனாலும், அம்பாளின் சன்னிதானம் எந்த விதத்திலும் சேதம் அடையவில்லை. கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக தலமாக விளங்குகின்ற இந்த பகுதியில், கோயிலில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை சரிசெய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினருக்கும் இருப்பதை அறிந்து முதலமைச்சர், எங்களை அனுப்பி இங்கு கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மேலும், இங்கு செய்ய இருக்கின்ற பணிகள் பற்றியும் பக்தர்களிடன் தெரிவித்துவிட்டு வருமாறு எங்களை அனுப்பியிருக்கின்றார். இந்த திருக்கோவிலில் ஏற்கனவே பரிகார பூஜையும், சாயரட்ச பூஜையும் நடந்து முடிந்திருக்கின்றன. ஆகம விதிப்படி தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதுபற்றி முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அதேபோல் கோயில் ஆகம விதிகளின் படி முன்பு எப்படி இருந்ததோ, அதே பொலிவு மாறாமல் கோயில் மேற்கூரை அனைத்தும் புனரமைத்து தரப்படும். இந்த திருக்கோயில் பராமரிப்பு பணிக்கான முழு செலவையும் இந்துசமய அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ளும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிப்பதற்காக சார் ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், வன அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்லது. இதுவரை மேல் சாந்தி, கீழ் சாந்தி, கோயில் பாதுகாவலர் போன்ற எட்டுபேரிடம் விசாரணை நடந்துள்ளது. முழுமையாக விசாரணை முடிந்த பிறகு, மாவட்ட கலெக்டர் அந்த அறிக்கையை பெற்று முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு கோயிலில் ஆய்வு

இங்கு அரசியல் பேச வரவில்லை. கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை சரி செய்யணும். பக்தர்களிடம் இருக்கும் பீதியை போக்கணும். ஊரங்கு முடிந்த பிறகு தொடர்ந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த ஆட்சியினுடைய நோக்கம். அரசியல் லாவாணி பாடுவதற்காக இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ளக்கூடாது. முழுமையாக கோயிலை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும், தமிழக முதலமைச்சரை பொறுத்தவரையில் தவறு எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/news/temples/minister-sekar-babu-inspects-mandaikadu-temple-after-fire-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக