Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்?!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை என்பது இருதேச எல்லைகளோடு மட்டும் முடிந்து விடவில்லை; உறவுகள், தொடர்புகள் என எல்லாமே பிரிவினையாகிப் போனது.

பிரிவினையான இந்த விடுதலைக்குப் பின், அகில இந்திய முஸ்லிம் லீக் பற்றி முடிவு செய்ய அதன் கடைசி கவுன்சில் கூட்டம் 1947 டிசம்பர் 13, 14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் முஹம்மது அலி ஜின்னா (Muhammad Ali Jinnah) தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் (Quaid-E-Millath) தமது குழுவோடு அங்கு சென்றார். எதிர்காலத்தில் முஸ்லிம் லீக் குறித்து முடிவு செய்ய இருநாடுகளிலும் உள்ள அதன் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதன் இந்திய கன்வீனராக காயிதே மில்லத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தச் செய்தி இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் இல்லை. இந்தியா திரும்பியதும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கை வலுவிழந்து போனதற்கு ஒரு தேசப்பற்று நிகழ்வே காரணம்.

Quaid E Millath - Liaquat Ali Khan

கராச்சியில் இருந்து இந்தியா திரும்பும் காயிதே மில்லத் குழுவிற்கு ஆகஸ்ட் 25, 1947 வியாழன் பகல் விருந்தளித்தார் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான். விருந்து முடிந்து விடைபெறும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம், ”மிஸ்டர் இஸ்மாயில் சாகிப், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எங்களுக்கு தகவல் தாருங்கள்; உங்களுக்கு பாகிஸ்தான் பக்க பலமாக வந்து நிற்கும்” என்றார்.

இந்த வார்த்தையை கேட்டதும், காயிதே மில்லத் கோபமானார். “நவாப் ஜாதா சாகிப் (லியாகத் அலி கானை அப்படித்தான் அழைப்பார்கள்), என்ன வார்த்தையை உச்சரிக்கிறீர்கள்? இப்போது, நீங்கள் வேறு நாட்டவர்கள்... நாங்கள் வேறு நாட்டவர்கள். எங்களுக்கு எதுவென்றாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்; அதில், நீங்கள் ஒருபோதும் தலையிட முயற்சிக்கக் கூடாது.

காயிதே மில்லத்தின் இந்தப் பேச்சைக் கேட்டதும், பாகிஸ்தான் பிரதமர் அதிர்ந்து போனார். இந்தியா திரும்பிய காயிதே மில்லத், மார்ச் 10, 1948 அன்று சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கவுன்சில் கூட்டத்தை நடத்தி அகில இந்திய முஸ்லிம் லீக்கை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்தார்.

அதே சமயம் அகில இந்திய முஸ்லிம் லீக் சொத்துக்கள், அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான 'டான்' (இன்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாளிதழ்) ஆகியவற்றின் இந்தியப் பங்காக அறிவித்த தொகையில் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்வதற்கு மறுத்துவிட்டார். "அது உங்கள் பங்கு நாங்கள் பெற்றுத் தருகிறோம்" என்று அரசின் சார்பில் சொன்னபோது கூட, ”அது அந்நிய நாட்டுப் பணம்; எங்களுக்குத் தேவையில்லை” எனக் கூறி தன் தேசப்பற்றை நிரூபித்தார் காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில்.



source https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/quaid-e-millat-mohammad-ismail-126th-birthday-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக