Ad

வியாழன், 3 ஜூன், 2021

கொரோனாவுக்காக மத்திய, மாநில அரசுகள் செலவு செய்த தொகை எவ்வளவு... தமிழ்நாட்டின் ஒதுக்கீடு எவ்வளவு?

கொரோனா தொற்று இந்த உலகுக்குத் தந்த பிரச்னைகள் ஏராளம். நிறைய உயிரிழப்புகள், அதைவிட அதிகமாய் உடல்நலப் பிரச்னைகள். பலருக்கு வருமான இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, மன ரீதியான பிரச்னைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதைத் தாண்டி இந்த கோவிடுக்காக ஒவ்வொரு நாட்டு அரசும் செலவிட்ட தொகை மிகப்பெரியது. இந்தியாவும் சரி, அதன் மாநில அரசுகளும் சரி… எல்லோருமே போட்ட பட்ஜெட்டைத் தாண்டி இதற்காகச் செலவிடப்பட வேண்டியிருந்தது.

COVID

எடுக்கப்படும் ஒவ்வோரு கொரோனா சோதனை தொடங்கி, தடுப்பூசி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், ஊரடங்குக் கட்டுப்பாடு என எல்லா இடங்களிலும் அரசு நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. கூடவே, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தரப்பட்ட ஊக்கத்தொகை இந்த எண்ணிக்கையை அதிகமாக்கியது. முதல் அலையைவிட இரண்டாம் அலை இந்தியாவுக்குப் பெரிய சோதனை. மற்ற நாடுகளைவிட இரண்டாம் அலையில் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் செலவும் அதிகரித்திருக்கிறது. பேரிடர் காலமென்பதால் இதைச் செலவாகப் பார்க்கக்கூடாது; அத்தியாவசியம்தான் என்றாலும் இதைச் சமாளிக்க ஒவ்வோர் அரசும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கொரோனா காலத்தில் நாம் செலவு செய்த தொகையைப் பற்றிய விவரங்கள் வெளியே வந்திருக்கிறது.

2019-2020 நிதியாண்டில் மத்திய குடும்ப மற்றும் சுகாதார நலத்துறை 64,257 கோடி ரூபாயைச் செலவு செய்திருந்தது. 2020-2021 பட்ஜெட் தாக்கல் செய்தபோது இந்தத் தொகையில் 4.4% அதிகமாக ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், அப்போது கொரோனாவின் வீரியம் நமக்குத் தெரிந்திருக்கவில்லை. 2020-2021 நிதியாண்டின் முடிவில் கிட்டத்தட்ட 83,000 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதவாது, 30% அதிக நிதி தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்த நிதியாண்டில், 2021-2022, சென்ற ஆண்டு செலவானதைவிட குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் அலை கொஞ்சம் ஓய்ந்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்குள்ளாகவே மூன்றாம் அலை பற்றிய கணிப்புகள் வருவதால் மத்திய அரசு அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

கொரோனாவிற்கு அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?

The Centre for Monitoring Indian Economy தரும் தகவல்படி 24 மாநில அரசுகளின் செலவைப் பற்றித்தான் அறிய முடியும். அந்தக் கணக்கின்படி 2019-2020 நிதியாண்டில் 24 மாநிலங்கள் சேர்த்து 1,34,000 கோடி ரூபாய் மருத்துவம் மற்றும் பொதுநலனுக்காகச் செலவு செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையில் 1,69,000 கோடியானது. 2021-2022 கணிப்பின்படி அந்தத் தொகை 1,90,000 கோடியாக உயரலாம் என்கிறார்கள். மத்திய அரசைவிட மாநில அரசுகளின் செலவு அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மருந்துகளுக்காகவும் மற்றவற்றுக்கும் செலவானது மட்டுமின்றி புதிதாக நிறைய மருத்துவமனைகளும் கட்டப்பட்டன. இவற்றை ‘கேபிட்டல் ஸ்பெண்டிங்’ என்பார்கள். செலவாகும்… ஆனால் அவை பேரிடர்காலம் முடிந்தும் பயன் தரும் விஷயங்களாக இருக்கும். இதற்காக 2019-2020ல் 1667 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தது. 2020-2021 பட்ஜெட்டில் இந்தத் தொகை குறைக்கப்பட்டு 1065.7 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் 3,587 கோடி ரூபாய் கேபிட்டல் ஸ்பெண்டிங் ஆனது என்கிறது சி.ஜி.ஏ. அறிக்கை.

மாநில அரசுகள் இதிலும் மத்திய அரசைவிட அதிக செலவு செய்திருக்கின்றன. 14 மாநிலங்களின் மொத்த கேபிட்டல் ஸ்பெண்டிங் தொகை 12,256.7 கோடி.

COVID

அடுத்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்குவதில் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், அனைத்து அரசுகளும் அப்படியே செய்வதாக சொல்ல முடியாது. டெல்லி அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 12.4% மருத்துவத்துக்காக 2021-2022-ல் ஒதுக்கியிருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் அஸ்ஸாம், கிட்டத்தட்ட 7% ஒதுக்கியிருக்கிறது. தமிழ்நாடு 4.7 சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. இந்தக் கணக்கில் மத்திய அரசை எடுத்துக் கொண்டால் மொத்த பட்ஜெட்டில் 2.4% மட்டுமே சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்காக ஒதுக்கியிருக்கிறது. மாநில அரசுகள் பட்டியலில் மிக குறைவாக ஒதுக்கியிருப்பது தெலங்கானாதான். 2.39%. மத்திய அரசும் அதே அளவு என்பதும் கவனிக்கத்தக்கது.

எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம் அது எப்படிச் செலவு செய்யப்படுகிறது என்பது. விரைவில் இந்தியாவும் உலகமும் கோவிட் சிக்கலில் இருந்து மீள வேண்டும். அதுவரை நாம் பாதுகாப்பாய் இருப்பதுதான் அரசுக்கும் நமக்கும் நாம் செய்யக்கூடிய நன்மை!



source https://www.vikatan.com/government-and-politics/news/state-and-central-governments-spending-on-corona-related-services

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக