Ad

வியாழன், 3 ஜூன், 2021

`35,000 கோடி ரூபாய் எங்கே?!' - தடுப்பூசி விவகாரத்தில் நடப்பது என்ன?

''மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை நீதிமன்றத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகையில் மத்திய அரசு 18-44 வயது பிரிவினருக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை வாங்க முடியாதா?' என மத்திய பா.ஜ.க அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த நாட்டையும் நிலை குலையச் செய்துவிட்டது. லட்சக்கணக்கான மக்களைப் கொரோனாவுக்குப் பறி கொடுத்து நிற்கிறோம். இந்த நிலையில், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும், தடுப்பூசி விநியோகத்தில் பற்றாக்குறையே நிலவி வருகிறது. கட்டுக்குள் இல்லாத இந்த நிலையைக் கருத்தில்கொண்டு, கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த வழக்கு முன்னதாக, நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம்

அப்போது, ''இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 'கோவின்' என்ற வலைத்தளத்தில் பதிவு செய்வது என்பது கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் உட்பட அனைவருக்கும் சாத்தியமா?'' என்பதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ''மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள "புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கை" குறித்து 2 வாரங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கள நிலவரங்களை முழுமையாக ஆராய்ந்து அறிந்துகொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து கடந்த புதன்கிழமை அந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதிகளின் அமர்வுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேலும் சில உத்தரவுகளைப் அரசுக்குப் பிறப்பித்தனர். தடுப்பூசி விவகாரம் குறித்து, எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மட்டுமே எழுப்பி வந்த குரலை தற்போது உச்சநீதிமன்றம் உரக்க ஒலித்திருக்கிறது. ஆனால், மறுபுறம், ''இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்'' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியிருக்கிறார்.

இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மருத்துவர் சாந்தி (சமூகஆர்வலர்)

''உச்சநீதிமன்றம் பொதுமக்களின் சார்பாகவே இத்தகைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதை, ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே நான் பார்க்கிறேன். நேரம், மருத்துவ வசதிகள், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் வீணாக்காமல் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய காலமிது. அந்தவகையில், தடுப்பூசிதான் தற்போது கொரோனாவை எதிர்கொள்ள இருக்கும் ஒரே பேராயுதம். அதை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கவேண்டியதும் அவசியம். ஆனால், மத்திய அரசுக்கு கொரோனாவைத் தடுப்பதிலும் தடுப்பூசி விஷயத்திலும் அறிவியல் ரீதியான பார்வை இல்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதமே, கொரோனா தொற்று பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது. அப்போதே, தடுப்பூசி உற்பத்திக்கான திட்டமிடலைத் தொடங்கியிருந்தால் நாம் தற்போது இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. பேரிடர் மேலாண்மையில் முதன்மையானது முன்தயாரிப்புதான். அது குறித்த பல வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே இருந்தும், இந்த அரசுக்கு அது குறித்த அக்கறை துளியளவும் இல்லை. கொரோனா முதன்மையான பிரச்னை என்றால், அதை இந்த அரசு எதிர்கொண்ட விதம்தான் மிகப்பெரிய பிரச்னையாக உருமாறிவிட்டது.

மருத்துவர் சாந்தி

உலகத்திலேயே, மிகப்பெரிய அளவில் தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட நாடு இந்தியாதான். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும், குன்னூர், சென்னை கிண்டி, செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முறையாகப் பயன்படுத்தி இருக்கவேண்டும். அதனை நாம் வலியுறுத்தினால், தடுப்பூசி தயாரிப்பு என்பது, சோப்பு டப்பா தயாரிப்பு இல்லை, கடலைமிட்டய் விற்பனை இல்லை என பா.ஜ.கவினர் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட, ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பயோபயோசேப்டி லெவல் 3 லேப் வேண்டுமென்று அரசுக்கு தெரியும். கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்ட ஆரம்பித்திருந்தால் கூட ஆறு மாதங்களில் கட்டி முடித்திருக்கலாம். பட்டேல் சிலை, சென்ட்ரல் விஸ்டா கட்டத் தெரிந்த இந்த அரசுக்கு லேப் கட்டத் தெரியவில்லை. தனியாரிடம்தான் லேப்வசதி இருக்கிறது என கூச்சமே படாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது.

கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் நமக்கு போதிய காலாவகாசம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தை இந்த அரசு முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தடுப்பூசிகளுக்கும் ஆர்டரும் கொடுக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களையும் தயார் படுத்தி வைக்கவில்லை. தற்போது மனித வளத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையை நூறு பேர் செய்துகொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, மாநில அரசுகளை தனியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டதால் ஒவ்வொருவரும் அதற்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள். மத்திய அரசே ஆர்டர் செய்து வாங்கிக் கொடுத்திருந்தால், மாநில அரசு விநியோகம் செய்யும் வேலையை மட்டும் முறையாகச் செய்திருக்கும்.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்

ஜனவரி மாதம், வர்த்தக ரீதியாக மூன்றரைக் கோடி மருந்துகளை எதன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தது மத்திய அரசு? தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடியை ஒதுக்கிய பிறகும், மருந்து நிறுவனங்கள் பலமுறை கேட்டபிறகுதான் 4,500 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். பேரிடர் என்றால் என்ன என்பது குறித்து அடிப்படைப் புரிதலே இல்லாத அரசாங்கமாகத்தான் தற்போதைய பா.ஜ.க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அறிவியல் பார்வையும் நிர்வாகத் திறனும் இல்லாமல் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்த இந்த அரசாங்கம் தற்போது நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்திருக்கிறது. நீதிமன்றம் எழுப்பியிருக்கும் அனைத்து கேள்விகளும் நியாயமானவை. ஆனாலும், நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கான நிலைமையை உருவாக்கியிருக்கக் கூடாது'' என்கிறார் அவர்.

மருத்துவரும் அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமனிடம் பேசினோம்:

''போதுமான அளவு தடுப்பூசியை மத்திய அரசு சென்ற ஆண்டு ஆர்டர் செய்யாததால்தான் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகள் ஜூன், ஜூலை மாதத்திலேயே தடுப்பூசி ஆர்டர் செய்துவிட்டன. நம் நாடு குறைந்தபட்சம் கடந்த செப்டம்பர் மாதமாவது ஆர்டர் செய்திருக்கவேண்டும். சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (கோவிஷீல்ட்) மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்ஸின்) ஆகிய இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்திருக்கக் கூடாது. ஃபைசர் ஆகிய நிறுவனங்களுக்கு முன்பே அனுமதி கொடுத்திருக்கவேண்டும். பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்தான் 45 கோடி ரூபாய் நிதியுதவி செய்தது. அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசி, நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் வைராலஜியில்தான் டெவலப் செய்யப்பட்டது. அதைத் தயாரிக்கும் அனுமதியை பாரத் பயோடெக் என்கிற ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அப்போது கொடுத்தார்கள். சென்ற மாதம்தான், பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதை முன்பே செய்திருக்கலாம். இது போன்ற பத்துக்கும் மேற்பட்ட தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அதனை என் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

சுமந்த் சி ராமன்

அரசியல் தலைவர்கள் மீது எனக்கு ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் கொரோனா ஆய்வுக் குழு விஞ்ஞானிகள் மீதும் எனக்கு வருத்தமிருக்கிறது. அவர்கள்தான் அரசாங்கத்திடம் தடுப்பூசிகளின் தேவைகள் குறித்து முன்பாகவே எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கத்தைக் காப்பாற்றும் வேலையை மட்டுமே அவர்கள் தற்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். பழைய பொய்களையே தற்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கையெழுத்துப் போடமாட்டோம் என விஞ்ஞானி ஷாகித் ஜமீல் போல அனைவரும் போர்க்கொடி உயர்த்தியிருக்கவேண்டும். அப்போதுதான் இவர்களைப் பற்றி வெளியில் தெரிந்திருக்கும். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சொல்வதுபோல இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க முடியாது. அடுத்த ஆண்டு மத்தி அல்லது இறுதிக்குள் போட்டுவிட்டாலே அது மிகப்பெரிய சாதனைதான்.

Also Read: கொரோனா வந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி; அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?

மே மாதம் எட்டரைக் கோடி டோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் கொடுத்துள்ள தகவலின்படி ஆறரை கோடி டோஸ்கள்தான் கணக்கில் வருகின்றன. மீதமுள்ள 2 கோடி எங்கே போனது. ஒரு கோடி கையிருப்பில் இருக்கிறது என வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள ஒரு கோடி எங்கே போனது. இந்தமாதம் 12 கோடி டோஸ் டார்க்கெட் வைத்திருக்கிறார்கள். கடந்த மாதத்துக்கே இன்னும் சரியாக கணக்கு வரவில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இறுதிக்குள் எனச் சொல்வது, டிசம்பர் வரைக்கும் தடுப்பூசி குறித்த கேள்விகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான யுக்தி மட்டும்தான். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மிகவும் துயரமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி

மத்திய பா.ஜ.க அரசின் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

'' ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’

என்கிற குறளைத்தான் நான் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். தடுப்பூசி விஷயத்தில் உலகம் முழுவதும் என்ன மாதிரியான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றனவோ அதுதான் இந்தியாவிலும் பின்பறப்படுகிறது. நீதிமன்றம் தற்போது சில கருத்துக்களைத்தான் சொல்லியிருக்கிறார்களே தவிர, தீர்ப்பு வழங்கிவிடவில்லை. அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் உரிய விளக்கத்தை அளிப்போம். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொள்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியம் என நிர்வாகத்தில் உள்ளவர்கள் சொல்லும்போது, நிர்வாகத்தில் இல்லாதவர்கள் ஏன் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கோவேக்ஸின் எங்களுடைய முழு உரிமையைப் பெற்றது என பாரத் பயோடெக் நிறுவனம் தெளிவாகச் சொல்லிவிட்டது. அது கூட்டுத் தயாரிப்பு இல்லை.'' என அடித்துச் சொல்கிறார் அவர்.

இந்தநிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக தமிழ்நாடு அரசு நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதல்வரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/where-is-the-rs-35000-crore-what-is-happening-in-corona-vaccine-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக