Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

`ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ - தமிழக அரசைக் குறைகூறும் மத்திய அரசு... காரணம் என்ன?

உணவு பாதுகாப்பு சட்டம், மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சி வாயிலாக மத்திய உணவு மற்றும் பொது விநியோக திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர். பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனப் பேசியுள்ளேர்.

ஸ்டாலின் - மோடி

``தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே இந்த திட்டத்தை நன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். கோதுமை, நெல் கொள்முதல், மாநிலங்களில் மக்களுக்கான ரேஷன் கார்டுகளை மாநில அரசுதான் வழங்க வேண்டும். மாநில அரசு தரும் தரவுகளின் அடிப்படையில்தான் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இந்த தரவுகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றிருக்கிறார் சுதன்ஷு பாண்டே. மத்திய அரசைத் தமிழக அரசும், தமிழக அரசை மத்திய அரசும் தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றின் வழி குற்றம் சுமத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திலும் அது தொடர்ந்துள்ளது.

Also Read: ஒன் நேஷன், ஒன் ரேஷன் திட்டம்... தமிழகத்துக்கு வரமா, சாபமா?

தமிழக அரசின் மீதான மத்திய அரசின் விமர்சனமும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் நோக்கமும் என்ன எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் விளக்கினார். “ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தைக் கொண்டு வந்தே ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள் அதைச் சரியாகச் செயல்படுத்தவில்லை எனச் சொல்கிறார்கள். சரியாகச் செயல்படுத்தாததுதான் நல்லது. செயல்படுத்தவே மாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். கேரளா, ஜார்கண்ட் தவிர மேற்கு வங்கம் உட்பட எந்த மாநில ரேஷன் கடைகளும் நாள் முழுவதும் இருப்பதில்லை. வாரம் ஒரு நாள் ரேஷன் செயல்பட்டும் மாநிலங்களும் இருக்கின்றன. அப்படியானால் தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலம் செல்பவர்களுக்கு என்ன பயன் இருக்கப் போகிறது.

கி.வெங்கட்ராமன்

ஒன்றிய அரசு சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைக் காலில் போட்டு மிதிக்கத்தான் செய்வார்கள். அதில் கட்சி வேறுபாடெல்லாம் இல்லை. ரேஷன் கடைகளை மூட வேண்டும். அதற்கு மாற்றாக மேற்கத்திய நாடுகள் போல உணவுக்கான டோக்கன் வழங்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க அரசின் நோக்கம். அதை ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற பெயரில் இங்குச் செயல்படுத்த தமிழக அரசு தடையாக இருப்பதால் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாடு அரசின் ரேஷன் கடைகளில் குறைகள் இருக்கலாம் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிர ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த கூடாது. செயல்படுத்த மாட்டோம் என தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

திமுக-வின் தமிழ் கா.அமுதரசன், “திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அன்றைக்கே குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, முதல் தவணையாக 2,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை மிகச் சரியாக வழங்குவதில் தமிழ்நாடு அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தில் இந்தியாவிற்கே முன்னோடி தமிழ்நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அல்லது கவனமாக மறைத்து, தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தைக் குறை சொல்கிறது ஒன்றிய அரசு. பொது விநியோகத் திட்டத்தில் ஒருங்கிணைந்த நிர்வாகம் கொண்டு வருகிறோம் என்று உள்நோக்கத்துடன் கூடிய திட்டத்தின் கீழ் கிராமங்களில் அரிசி, பருப்பு வழங்குவதைக்கூட பாஜக அரசு செய்யும் என்பது ஒன்றிய - மாநில உறவைக் கெடுக்கும், கேலிப் பொருளாக்கும் செயலாகும்.

தமிழ் கா.அமுதரசன் - திமுக

வட மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை விநியோகிக்க முடியாத போது, எப்படிப் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. பொது விநியோகத் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய தமிழ்நாட்டை பா.ஜ.க ஒன்றிய அரசு குறை சொல்கிறது என்றால், இந்த திட்டம் இங்கே சிறப்பாகச் செயல்படுவதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது” என தி.மு.க-வின் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன் மத்திய அரசின் விமர்சனத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்.

மத்திய அரசின் விமர்சனம் குறித்து தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் விளக்கம் கேட்டோம், “தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என்பது வந்த பிறகு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதில் பாரதப் பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். யாருக்கெல்லாம் உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறதோ அவர்களையெல்லாம் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். அப்படி முயற்சி செய்ததில் இந்த ஓராண்டில் மாற்றுக்கட்சி ஆட்சி செய்யும் கேரளா, தெலங்கானா மாநிலங்களிலும் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றன.

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்பதுதான். தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தார்கள். கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக பேசிய தி.மு.க அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மத்திய அரசாங்கமே உணவுப் பொருட்களை வழங்க, ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் மீது இருக்கும் காழ்ப்பை இந்தத் திட்டத்திலும் காட்டாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை தி.மு.க அரசு எடுக்க வேண்டும். அத்திட்டத்தின் நோக்கம் நீர்த்துப் போய்விடக் கூடாது” என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/central-government-critics-tn-government-action-against-one-nation-one-ration-what-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக