Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

`புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது இழுபறி!’ -அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் அளித்தார் முதல்வர் ரங்கசாமி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றது. அதையடுத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியையும், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால், அவர்களின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் ரங்கசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவை

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக பா.ஜ.க நியமித்ததுடன், மூன்று சுயேச்சைகளையும் வளைத்து தன் எம்.எல்.ஏ-க்கள் பலத்தை 12 ஆக உயர்த்தியது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நீண்ட இழுபறிக்குப் பின் எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். அதனையடுத்து சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர் பதவிகளை கேட்டு அழுத்தம் கொடுத்த பா.ஜ.கவுக்கு சபாநாயகரையும், இரண்டு அமைச்சர் பதவிகளை கொடுத்தார் ரங்கசாமி.

அந்த இரண்டு அமைச்சர் பதவிகள் யாருக்கு என்பதில் பா.ஜ.கவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் அக்கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. அதையடுத்து 14.06.2021 அன்று பா.ஜ.க எம்.எல்.ஏவான செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, 15.06,2021 அன்று சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசின் அமைச்சரவை பட்டியல் கடந்த 21-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: புதுச்சேரி: ’33 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!’ முடிவுக்கு வந்தது மூன்று வார இழுபறி!

ஆனால் அன்றைய தினம் வெளியாகாத நிலையில், இன்று தனது அமைச்சரவை விரிவாக்கத்துக்கான பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து வழங்கியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இதன்மூலம் 51 நாட்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-hand-over-ministers-list-to-governor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக