Ad

வியாழன், 17 ஜூன், 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 22: சந்தோஷி மாதா, சித்திரகுப்தர், அரவான் அருளும் திரௌபதி அம்மன் கோயில்!

மதுரை மண்ணில் எங்கு தொட்டாலும் அது சிலப்பதிகாரக் கதையோடு பிணைக்கப்பட்டிருக்கும். அதிலும் எளியமக்கள் அவைசார்ந்த நம்பிக்கைகளைத் தம் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைத்திருப்பார்கள். அப்படி மதுரை மக்களின் வழிபாட்டில் திரௌபதியும் பஞ்சபாண்டபவர்களும் அரவானும் இணைந்தது குறித்த நாட்டுப்புறக் குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

கோவலன் பாண்டிய மன்னனால் கொலை செய்யப்பட்டபோது கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கினாள். மதுரை முற்றிலும் அழிந்தது. அதன்பின் மதுரை மீண்டு எழுந்தபோது எங்கே மீண்டும் மதுரைக்கு ஏதேனும் கெடுதல் நேருமோ என்று அஞ்சினர் மக்கள். அவ்வாறு தீவினை ஏதும் நிகழாதிருக்க வேண்டும் என்று பார்வதி பரமேஸ்வரனை வேண்டினர். அப்போது அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய பார்வதி தேவி, அசரீரியாகப் பதில் சொன்னாள்.

தர்மராஜன் சந்நிதி

பஞ்சபாண்டவர்களின் தேவியான திரௌபதி ஆதி சக்தியின் அம்சமாகவும் பஞ்சபூதங்ளையும் அடக்கியாளும் சக்தி கொண்டவளாகவும் விளங்குபவள். அப்படிப்பட்ட திரௌபதி அம்மனை மதுரையைல் பிரதிஷ்டை செய்துவழிபாடு செய்தால் தீவினை பயமின்றி வாழலாம் என்று வாக்குரைத்தாள் தேவி. இதைக் கேட்ட மக்கள் பக்தியோடு திரௌபதியினை வழிபாடு செய்யத் தொடங்கினர் என்கிறது அந்த நாட்டுப்புறக் குறிப்பு. அப்படி மதுரை மக்களின் வழிபாட்டில் கலந்த திரௌபதி வழிபாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது மதுரை தெற்கு மாரட் வீதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோயில்.

திரௌபதி வழிபாடு, வட மாவட்டங்களில் மிகுந்திருப்பதைப் போலத் தென்மாவட்டங்களில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் திரௌபதி அம்மன் ஆலயங்களில் மதுரையில் இருக்கும் இந்தக் குறிப்பிட்ட ஆலயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தக் கோயில் கிபி 1884-ம் ஆண்டு வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் என்பவரால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அத்தி மரத்தில் அம்பாளைச் செய்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தவர்கள் பிற்காலத்தில் சிலா விக்ரகமாக மாற்றினர் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. ஒன்று அன்னை திரௌபதிக்கு மற்றொன்று தர்மராஜனுக்கு. இரண்டு அடி உயரத்தில் நின்றகோலத்தில் திரௌபதி அம்பாள் கருணையே வடிவாகக் காட்சிகொடுக்கிறாள். அன்னையின் பெரிய திருவிழிகள் காண்பவரின் குணத்துக்கு ஏற்பக் காட்சி கொடுக்குமாம். கருணை வேண்டுபவர்களுக்குக் கருணையும் வீரம் வேண்டுபவர்களுக்கு வீரமும் அருளுமாம் விழிப்பார்வை. அன்னையின் திருமுன் நின்றாலே கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு அம்பிகைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அரளி மலர்கள் சாத்தி வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. மற்றொரு கருவறையில் தர்மராஜன் நின்றகோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

விநாயகர் - சந்தோஷி மாதா

கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சந்நிதியும் காளியம்மன், கமல கன்னி அம்மன் சந்நிதியும் உள்ளன. இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று சந்தோஷி மாதா சந்நிதி. சந்தோஷி மாதா விநாயகப்பெருமானின் மகளாகக் கருதப்படுபவர். வேண்டும் வரம் தரும் சந்தோஷி மாதா வழிபாடு வட நாட்டில் மிகவும் பிரபலம். தமிழ் நாட்டில் ஒரு சில கோயில்களில் மட்டும் இருக்கும் சந்தோஷி மாதா சந்நிதி இந்த ஆலயத்தில் உள்ளது. விநாயகப்பெருமானோடு சந்தோஷி மாதா இருக்கும் சந்ந்தி இங்கு குடியிருக்கும் வட மாநில பக்தர்களால் போற்றி வணங்கும் சந்நிதியாக இருக்கிறது.

சந்தோஷி மாதாவுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமை உணவில் புளி சேர்க்காமல் இருந்து சந்தோஷி மாதாவுக்கான துதிப்பாடல்களைப் பாடி வழிபாடுகள் செய்கிறார்கள் பக்தர்கள். இவ்வாறு வழிபாடுகள் செய்வதன் மூலம் செல்வ வளமும் இளம் வயதினருக்குத் திருமண வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயிலின் மகா மண்டபத்தின் தூண்கள் எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன் காணப்படுகின்றன. இந்த மகாமண்டபத்தில் உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி, ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர், பஞ்சலோக சித்திரகுப்தர், குரு பகவான், சனி பகவான் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சனிபகவான் சந்நிதியில் சனிப்பெயர்ச்சியை ஒட்டிச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. புதிதாக ஆஞ்சநேயர் சந்நிதியும் இங்கே அமைந்துள்ளது. சித்திர குப்தருக்குச் சந்நிதி இருக்கும் ஒருசில தென் மாவட்டக் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சித்திர குப்தரை வணங்கி வேண்டிக்கொண்டால் உடல் நலனில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமைகளில் குருபகவானையும் வெள்ளிகிழமைகளில் சந்தோஷி மாதாவையும் சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வணங்க இந்தப் பகுதி மக்கள் அதிக அளவில் வருவர்.

திரௌபதி அம்மன் திருக்கோயில் தரிசனம்: ஆல்பம்

திரௌபதி அம்மன்
திரௌபதி அம்மன்
திரௌபதி அம்மன்
கோயில் அர்ச்சகர் தனஞ்செயன்
திரௌபதி அம்மன்
சனிபகவான்
அகோர வீரபத்திரர்
குருபகவான்
உபதேச கிருஷ்ணன்
சித்திர குப்தர்
முருகப்பெருமான்
ஆஞ்சநேயர்
சத்தியநாராயணர்
பத்திரகாளி
கமலக் கன்னி அம்மன்
வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர்
தர்மராஜன்
ஸ்ரீநல்லமுடி அரவான்
சந்தோஷி மாதா விநாயகர்
கோயில் மண்டபம்
திரௌபதி அம்மன் கோயில்
கோயில் மண்டபம்

இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு அரவான் சந்நிதி. இங்கு அரவான் ஸ்ரீநல்லமுடி அரவானாகக் காட்சி கொடுக்கிறார். ஐந்தடி உயரம் கொண்ட முகம் மட்டுமேயான சுதைச் சிற்பமாகத் திகழ்கிறார். சித்திரா பௌர்ணமியை ஒட்டி அரவான் சந்நிதியில்சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்தக் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதருக்கும் இங்கு தனிச் சந்நிதி உள்ளது. கோயிலுக்கு வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் இரண்டுக்கும் தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் 16 நாள் பிரம்மோற்சவ விழாவும் இங்கு கோலாகலமாக நடைபெறும்.

மதுரை அனைத்து மரபுகளையும் பண்பாடுகளையும் வழிபாடுகளையும் கொண்டாடும் ஊர். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த திரௌபதி அம்மன் ஆலயம். வைகை நதிக்கரை ஆலயங்களில் நாம் தரிசிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆலயமாக நூற்றாண்டைக் கடந்த இந்த திரௌபதி அம்மன் ஆலயமும் விளங்குகிறது.


source https://www.vikatan.com/spiritual/temples/madurai-temples-the-glory-and-history-of-draupathi-amman-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக