Ad

வியாழன், 17 ஜூன், 2021

பிரேக்அப் செய்வது என முடிவெடுத்துவிட்டீர்களா? அதை இப்படிச் செய்யுங்கள்! #AllAboutLove - 20

இரண்டு சம்பவங்கள்.

முதல் ஒன்றில், காதலன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். காதலிக்கு அவன் போவதில் பிரச்னை இல்லை. ஆனால், Long distance relationship-ல் அவளுக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. இருவரும் சில ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் திருமணம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே இருப்போம் என்றெல்லாம் பேசியதே இல்லை. அதனால், இருவரும் பிரேக்அப் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அடுத்த சம்பவத்தில், அந்த ரிலேஷன்ஷிப்பே துயரமாக மாறியிருக்கிறது. காதலி தன் பாய் பெஸ்ட்டிக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவர்கள் மீது காதலனுக்கு சந்தேகமில்லை. ஆனால், தனக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என நினைக்கிறார். இவர்களின் அத்தனை விஷயங்களும் பாய் பெஸ்டிக்குத் தெரிந்திருக்கிறது. மூவரும்தான் படம் போகிறார்கள். என்ன படம் என்பதைக்கூட அவன்தான் முடிவு செய்கிறான். இவற்றையெல்லாம் அந்தக் காதலன், தன் காதலியிடம் எடுத்துச் சொல்லியும் எதுவும் மாறவில்லை. மாறாக, பாய் பெஸ்ட்டி பற்றிய தகவல்களை மறைக்கிறாள்; அல்லது பொய் சொல்கிறாள். அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டுதான் பிரேக்அப் என்ற நிலைக்கே வருகிறார் காதலன்.

Breakup

Also Read: ரிலேஷன்ஷிப்பிற்கு நடுவே வரும் பெஸ்ட்டிஸ்... என்ன செய்வது? #AllAboutLove - 11

இப்போது, இரண்டு சம்பவங்களிலும் பிரேக்அப் தேவை. ஆனால், சூழ்நிலை வேறு வேறு. உங்கள் பிரேக்அப் எப்படியானது; அதன் நோக்கமும் தன்மையும் என்ன என்பதை முடிவு செய்துவிட்டு அதற்கான வேலையைத் தொடங்குங்கள்.

பிரேக்அப் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி இருவரும் புரிதலோடு செய்யும் பிரேக்அப். இதில், குற்றம் சொல்லாதீர்கள். Blame game ஆடாதீர்கள். அப்போதுதான் என்றாவது ஒருநாள் மீண்டும் சேரலாம் என நினைத்தால் அது பிரச்னையாக இருக்காது.

முதல் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். காதலன் அமெரிக்கா போவதால்தான் பிரேக்அப் செய்ய வேண்டியதானது. அதைச் சொல்லலாம். ஆனால், அதை அவனுடைய தவறாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. `அமெரிக்கா போறது உனக்கு நல்லதுன்னு தோணி முடிவு பண்ணிருக்க. ஓகேதான். ஆனா, எனக்கு Long distance relationship ஒத்து வராது. அதனால இங்கயே இதை முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன்' எனச் சொல்லுங்கள். அப்போதுதான் ஒருவேளை, அடுத்த ஆண்டே அவன் இந்தியா திரும்பி, அப்போது அந்தப் பெண் சிங்கிளாக இருந்து, மீண்டும் ரிலேஷன்ஷிப்பைப் புதுப்பிக்க நினைத்தால் சாத்தியமாகும்.

அடுத்த வழி, பிரச்னைகளைப் பட்டியிலிடுதல். இரண்டாவது உதாரணத்துக்கான வழி. இதில், காதலன் பாய் பெஸ்ட்டியால் ஏற்பட்ட பிரச்னைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அவையும் விமர்சனமாக இருக்கலாமே தவிர குற்றச்சாட்டாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. `என்னால முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணேன். உனக்கு அவனும் முக்கியம்ன்னு புரியுது. ஆனா, என்னால அதைச் சமாளிக்க முடியல. அதனால நாம பிரியுறதுதான் சரி' எனச் சொல்லலாம்.

எந்த வழியாக இருந்தாலும், பிரேக்அப் என வந்தால் அதற்கான பொறுப்பை யார் பிரேக்அப் தேவை என நினைக்கிறாரோ அவர்தான் ஏற்க வேண்டும். முதல் உதாரணத்தில், ஒத்துவராது என நினைக்கும் பெண்தான் பொறுப்பை ஏற்க வேண்டும். அடுத்த உதாரணத்தில், பிரச்னைக்கானக் காரணமாக அந்தப் பெண் இருந்தாலும் `எனக்கு பிரேக்அப் வேணும்' எனக் கேட்கும் ஆண்தான் பொறுப்பேற்க வேண்டும். அதைத் தவிர்ப்பது அதுவரை இருந்த ரிலேஷன்ஷிப்புக்கு நியாயம் செய்வதாக ஆகாது.

அப்படிப் பொறுப்பேற்கும் ஒருவர், தனக்கு பிரேக்அப் தேவை என நினைத்தால் அதைப் பற்றி பேசிவிடலாம். அப்படியின்றி, தன் பார்ட்னர் ஏதாவது ஒரு தவறு செய்யட்டும் எனக் காத்திருந்து, அதை வைத்து பிரேக்அப் கேட்பதும் சரியல்ல. இரண்டாவது உதாரணத்தில், தன் காதலி தன்னைவிட அவள் பாய் பெஸ்ட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்வும் வரை காத்திருக்கத் தேவையில்லை. பிரேக்அப் எப்போதும் நீண்டகால, தொடர் நிகழ்வுகளின் அடிப்படையில் இருந்தால் நல்லது. ஒரே ஒரு சம்பவத்துக்காக பிரேக்அப் கேட்பது நியாயம் ஆகாது. பிறழ்வது இயல்பு. அதனால் இன்னொரு வாய்ப்பு தரலாம்.

நம் காதலிக்கும் ஒருவருக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய அன்பு என்பது இன்னொரு வாய்ப்பாகத்தான் இருக்க முடியும்.

சில சமயம் அவசரப்பட்டு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் உண்டு. முதல் அத்தியாயத்தில் சொன்னதுபோல எது காதல், எது இன்ஃபாச்சுவேஷன் என்றுகூட தெரியாத நிலையில் அவசரமாக புரொபோசலுக்கு சரியென்பார்கள். ஆனால், சில மாதங்களிலே இருவருக்கும் ஒத்துவராது எனத் தெரிய வரலாம். அப்போது, `நான் அக்செப்ட் பண்ணது தப்பு. சாரி' எனச் செய்த தவறுக்குப் பொறுப்பேற்று பிரேக்அப் கேட்பதுதான் சரி. `அய்யோ ஓகே சொல்லிட்டோமே... அதனால நடக்கிறத ஏத்துப்போம்' என்றிருப்பது இருவருக்கும் செய்யும் துரோகமே.

`தேவதையைக் கண்டேன்' - தனுஷ் நடித்த படம்.

அதில் நாயகி, நாயகன் மீது காதல் கொள்கிறாள். ஆனால், அவளுடைய பெற்றோர் எடுத்துச் சொல்லும்போது தனக்கான பார்ட்னராக நாயகனால் இருக்க முடியாது என முடிவு செய்கிறாள். அவனைக் காதலிப்பதாக அவள் சொன்னது தவறென உணர்கிறாள். அதுவரைக்கும் சரிதான். ஆனால், அந்தக் காதலை முறிப்பதென்றால், தான் செய்த தவற்றை எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்பதுதான் சரி. ஆனால், இங்கே நாயகனின் ஈகோவைத் தொட்டுவிடுவார். அவனைக் குறை சொல்லி பேசுவார். `நீயெல்லாம் எனக்கான ஆளா?' என அசிங்கப்படுத்துவார். இதுதான் தவறு. இங்கே பிரேக்அப்புக்கான பொறுப்பை நாயகி ஏற்றுக் கொண்டு பேசியிருக்க வேண்டும். அதுதான் சரி. பிரேக்அப்பின்போது செய்யக் கூடாத ஒன்று, ஈகோவைக் காயப்படுத்துவது.

தேவதையைக் கண்டேன்

Also Read: எப்போது ஒரு ரிலேஷன்ஷிப் `toxic' ஆக மாறுகிறது #AllAboutLove - 18

பிரேக்அப் செய்வதென முடிவெடுத்தால் அதை நீங்களே நேருக்கு நேர் செய்யுங்கள். மூன்றாம் மனிதருக்கு அதில் இடம் தராதீர்கள். நேரில் சந்தித்து பிரேக்அப் கேளுங்கள். என்ன பிரச்னை, ஏன் பிரேக்அப் என எல்லாவற்றையும் பார்ட்னருக்குத் தெரியப்படுத்துங்கள். கோவையாகப் பேச வராது என்றாலோ, பார்ட்னர் அதைப் பொறுமையாகக் கேட்க மாட்டார் என நினைத்தாலோ ஆடியோ க்ளிப் ஆகவோ, கடிதமாகவோ எழுதிக் கொடுங்கள். ஆனால், அதை நேரில் கொடுங்கள். இருவரில் யாரேனும் ஒருவர் வன்முறையையோ, அழுகையையோ ஆயுதமாக எடுக்கக்கூடுமென நினைத்தால் அந்தச் சந்திப்பைப் பொது இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என நினைத்தால் அப்போது மட்டும் நீங்கள் நம்பும் ஒருவரின் உதவியைக் கேட்டுப் பெறுங்கள்.

பிரேக்அப் பற்றிப் பேசுவதற்கு முன் நன்கு யோசித்துவிட்டுச் செல்லுங்கள். என்ன நடந்தாலும் பிரேக்அப்தான் தேவை என்ற நிலையில் மட்டுமே அதைப் பற்றிப் பேசுங்கள். பிரேக்அப் என முடிவு எடுத்திருந்தாலும் உங்கள் பார்ட்னர் சொல்ல விரும்புவதைக் கேளுங்கள். நீங்கள் வழக்கமாகப் பேசுவது போலின்றி, சொற்களை கவனமாகக் கையாளுங்கள். பிரச்னையை அவர் புரிந்துகொண்டு இனி நிகழாது என சத்தியம்கூட செய்யலாம். அப்படிச் சொன்னால் அதை ஏற்பதும் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், என்ன செய்ய வேண்டுமென்பதையும் முன்பே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இந்தியச் சூழலில் பெரும்பாலான பிரேக்அப் நிகழ்வது பெற்றோர்களால்தான். ஏற்கெனவே பெற்றோர்களை எப்போது ரிலேஷன்ஷிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதைப் பார்த்தோம். ஒருவேளை சாதி, மதம், அந்தஸ்து போன்ற விஷயங்களின்றி நியாயமான காரணங்களால் பெற்றோர்கள் சம்மதிக்க மறுத்தால் அதையும் பரிசீலிக்கலாம் என விரிவாகச் சொல்லியிருந்தோம். அந்தக் காரணத்தால் பிரேக்அப் செய்வதென்றால் அந்தப் பொறுப்பைப் பெற்றோர்கள் மீது போடக் கூடாது. `என் அம்மா இப்படிச் சொன்னாங்க. அது நியாயம்னு தோணுது. அதனால நான் இதைக் கேட்கிறேன்' எனச் சொல்வதுதான் சரி. `என்னால என்ன பண்ண முடியும்? அப்பாவை மீறி ஒண்ணும் பண்ண முடியாது' எனப் பழியைப் பெற்றோர்கள் மட்டும் மீது போட்டால் உங்கள் பார்ட்னர் உங்கள் பெற்றோரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வார். ஆனால், அது தேவையற்றது. காரணம் நீங்களே அந்த உறவை வேண்டாமென முடிவு செய்து அதை மறைத்திருப்பீர்கள். நம் சமூகத்தில் பெரும்பாலானோர் இந்த இடத்தில் சறுக்கி, மாற்றிச் சொல்லித்தான் பிரச்னையைத் திசை திருப்புகிறார்கள்.

சிலர் பிளாக்மெயில் செய்யலாம். `நீ போனா செத்துடுவேன்' எனச் சொல்லலாம். அது உண்மையோ, பொய்யோ. அப்படிச் சொன்னால் அப்போது அந்தப் பேச்சை தள்ளி வைப்பதே சரி. என்ன செய்ய வேண்டுமென்பதைப் பிறகு யோசித்து, தேவையான உதவியைப் பெற்றுக்கொண்டு தொடரலாம்.

பிரேக்அப்

Also Read: `திருக்குறள்' முதல் `தப்பட்' வரை; ரிலேஷன்ஷிப்பில் பிரேக்அப் எப்போது தேவைப்படுகிறது?#AllAboutLove 19

பிரேக்அப் என முடிவானால், அதோடு விடுங்கள். `அய்யோ இப்படிச் சொல்லிட்டோமே... அவன்/அவள் என்ன செய்றாங்களோ?' என கால் செய்தோ மெசேஜ் செய்தோ நினைவுபடுத்தக் கூடாது. அதாவது, உங்கள் குற்றஉணர்வு போதைக்கு அவர்களை ஊறுகாய் ஆக்க வேண்டாம்,

பிரேக்அப் எனச் சொல்லிவிட்டு வந்தால் போதாது. அதைக் குறிப்பிட்டக் காலம் பின்பற்றுவது அவசியம். `மிஸ்' செய்யும் எமோஷனில் சிக்கி, மீண்டும் உறவைப் புதுப்பிக்கும் வாய்ப்பு உண்டு. அது கூடாது எனச் சொல்லவில்லை. ஆனால், பிரேக்அப் என ஒருவர் சொல்லிவிட்டு மீண்டும் அதே ரிலேஷன்ஷிப்பைத் தொடர்வது ரிஸ்க். காரணம், எந்தக் காரணங்களுக்காக பிரேக்அப் என்றீர்களோ, அது எதுவுமே மாறியிருக்காது. எமோஷனலாக எடுக்கப்பட்ட முடிவால் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். அதனால் உங்களைப் பாதித்த அதே பிரச்னைகள் மீண்டும் சீக்கிரமே வரக்கூடும். நீங்களும் உங்கள் பார்ட்னரும் தினமும் பார்த்துக்கொள்பவர்கள் என்றால், குறைந்தது 4 நாள்களாவது பார்க்காமல் இருந்தால்தான் பிரேக்அப்புக்கு மரியாதை. நாங்கள் வெளியூரில் இருக்கிறோம். அதனால் மாதம் ஒரு முறைதான் பார்ப்போம். ஆனால், தினமும் பேசுவோம் என்றால், குறைந்தது 4 நாள்களுக்காவது பேசாமல் இருக்க வேண்டும். இல்லையேல் பிரேக்அப் காலாவதி ஆகி மீண்டும் சுழலில் சிக்கிக் கொள்வீர்கள்.

ஆக, பிரேக்அப்புக்குப் பிறகான காலம்தான் சிக்கலானது. அதை எப்படிக் கையாள்வது? அடுத்து வாரம் பார்ப்போம்.

இன்னொரு விஷயம். யாருடைய பிறந்த நாள் அன்றும் பிரேக்அப் செய்துவிடாதீர்கள். அது பாவம்.



source https://www.vikatan.com/lifestyle/relationship/how-to-do-a-breakup-all-about-love-series-20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக