Ad

சனி, 19 ஜூன், 2021

நாடுகளின் கதை - 12 | இஸ்ரேல்: நிலப்பசியால் ரத்தத்தில் உதித்த நாடு!

இந்த உலகத்தில் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை எதுவென்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?!

தடுப்பூசி போட்டாச்சா?!; மாஸ்க்க போடுங்கப்பா!; வாழ்வாதாரம் போச்சு தம்பி; அந்த மனுஷன் செத்துட்டாராம்... இவையெல்லாம் நாம் காலையில் எழுந்து இரவு தூங்கும் வரை 'கொரோனா' பற்றி கேட்கும் வார்த்தைகள். உலகத்தில் எல்லோரையும் இந்தக் கொரோனா அச்சுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், ஒரு நாட்டை தன் ராணுவ ஆயுதங்களால் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது ஒரு நாடு; மரண ஓலங்களை ரசித்துக் கொண்டிருக்கிறது; தன் நிலப்பசியால் கண்ணைக் கட்டிக் கொண்டு பிஞ்சுகளின் நெஞ்சில் குண்டைத் துளைக்கிறது... ஆம் இது, ரத்தத்தில் உதித்த இஸ்ரேல் நாடு பற்றிய கதை.

இஸ்ரேல்

யூத எதிர்ப்பு என்பது ரஷ்யா, ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் எல்லா காலங்களிலும் இருந்து வந்துள்ளது. ஏன் இப்படி யூதர்களை எதிர்க்க வேண்டும் என நீங்கள் யோசிக்கலாம். காரணம், வரலாற்றின் ஒரு சில காலகட்டங்களில் யூத மேல்தட்டு வர்கத்தினரின் ஆக்கிரமிப்பு எண்ணமும், அதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகளும்தான்.

1875-ம் ஆண்டில் ஜியோனிஸ சித்தாந்தத்தை உருவாக்கிய தியோடர் ஹெஸில் (Theodor Herzl) யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்கான முதலாவது மாநாடு 1897 ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியமர்த்தவும் அதற்காக தனிநாடு அமைக்கவும் முடிவு செய்தார்கள்.

அதன் பின், 1901ல் துருக்கி சென்ற தியோடர் ஹெஸில், உதுமானிய பேரரசின் தலைவராக இருந்த இரண்டாம் அப்துல் ஹமீத் கானிடம், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியமர்த்தவும் அதற்கு சன்மானமாக 150 மில்லியன் பவுண்டுகளை தருவதாகவும் கேட்க, அதை முற்றிலும் மறுத்துவிட்டார் ஹமீத் கான்.

முதலாம் உலகப் போர் முடிவுக்கு வரும் சமயத்தில் உதுமானிய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து பாலஸ்தீனப் பகுதி பிரிட்டனின் ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக இருந்த ஆர்தர் பால்ஃபர், பிரிட்டன் யூதர்களின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த வால்டர் ராத்ஷில்ட் என்பவருக்கு 1917 நவம்பர் 2-ல் ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், "பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தாய்நாட்டை உருவாக்கித் தர வேண்டும் என்கிற ஜியோனிஸ சித்தாந்தத்தின் கோரிக்கைக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளிக்கிறது. இந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்து கொடுக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது இதுவே, பிரிட்டன் அரசின் பாலஸ்தீனத்துக்கான கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரிட்டன் படை பாலஸ்தீனத்தை நோக்கி புறப்பட்டது. 1917 டிசம்பர் 11 அன்று ஜாபா கேட் வழியாக ஜெரூஸலத்தில் நுழைந்த பிரிட்டன் ஜெனரல் எட்மண்ட் ஆலன்பீ இன்றுடன் சிலுவையுத்தம் முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டார். பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு என்ற பிரிட்டனின் திட்டத்துக்கு சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பும் 1922-ல் ஒப்புதல் வழங்க ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூதர்களில் 90 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே குடியமர்த்தப்படுகிறார்கள்.

Jerusalem

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரித்து அரபு நாடு, யூத நாடு, ஜெரூஸலம் தனி என 1947 நவம்பர் 29-ல் அறிவித்தது. இதன்படி பாலஸ்தீனில் 70 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு 43 சதவிகித இடமும், 30 சதவிகிதம் உள்ள யூதர்களுக்கு 56 சதவிகிதம் இடமும் சொந்தம் என நியாயமற்ற வகையில் பிரித்தது.

1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. 1948-ம் ஆண்டு மே 14-ம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக பாலஸ்தீனிலிருந்து வெளியேறியது. இஸ்ரேல் என்கிற தேசம் உருவாகிவிட்டதாக ஜியோனிஸ்ட்கள் அறிவித்துவிட்டார்கள். ஆம், ஒரு தனிநாடாக இஸ்ரேல் உருவாகி விட்டது.

பாலஸ்தீனத்தில் இருந்த 13 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 7.50 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ரத்தத்தில் ஒரு நாடு உருவானது என்று உலக அரசியல் பார்வையாளர்கள் எழுதினர். உலகில் உள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது, உலகின் யூதர்களில் சுமார் 50% பேர் இஸ்ரேலில்தான் வாழ்கின்றனர்.

மொஸாட் எனும் யூத அமைப்பு (Mossad Intelligence Agency)

1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. உலகத்தின் எல்லா கண்களும் ஒலிம்பிக் பக்கம் திரும்பிய சமயம், ப்ளாக் செப்டம்பர் (Black September) என்ற அமைப்பு ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்தது. அதுவும் இஸ்ரேலிய வீரர்கள் தங்கியிருந்த பகுதியில் நுழைந்து சிலரைக் சுட்டுக் கொன்று விட்டு, சிலரை சிறைப்பிடித்து பின்பு அவர்களையும் கொன்றது.

உலகின் எல்லா கண்களும் விளக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜெர்மனியை பார்த்தது. முன்பு இருந்தே ஜெர்மனிக்கும், யூதர்களுக்கும் ஆகாது. ஏற்கெனவே ஹிட்லரின் படை யூதர்களை கொன்று குவித்திருக்கிறது, இப்போது, இப்படி ஒரு சம்பவம். இதை நிகழ்த்திய ப்ளாக் செப்டம்பர் யார் என அலச, பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடும் ஓர் அமைப்பு எனத் தெரிய வந்தது.

Jews in Germany

வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, நீதி வேண்டும் என்று போராடிய யூதர்களுக்கும், இறந்த விளையாட்டு வீரர்களின் குடும்பத்திற்கும், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ர் (Golda Meir) சொன்ன பதில் 'வேட்டை தொடரும்' என்பதே. ஆம், இந்த வேட்டைக்கு மொஸாட் என்ற அமைப்பின் உதவியை நாடியது இஸ்ரேல். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஹோகானா எனும் ரகசிய யூத அமைப்புதான் பின்நாளில் மொஸாட்டாக மாறியது. 1929-ல் துவக்கப்பட்ட மொஸாட் எந்தக் காரியத்தையும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்வதற்கு இஸ்ரேல் அனுமதியளித்தது. இதனால், அப்போது உலகின் மிகப்பெரிய உளவு அமைப்பாக திகழ்ந்தது. இஸ்ரேல் வரலாற்றில் 'மொஸாட்' தனக்கென ஒரு தனி பெயரை பொறித்தது. ஆனால், தற்போது மொஸாட் வலுவிழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

ஹைஃபா (Haifa)

Haifa Battle

1918-ம் ஆண்டு முதலாம் உலகப்போர் முடிவுக்கு வரும் சமயத்தில் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைஃபா நகரை மீட்க பிரிட்டன் போராடியது. அப்போது, இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டன் அங்கு இந்திய காவல்ரி படையை (Cavalry Division) அனுப்பியது. இந்தப்படை வீரர்கள் குதிரையில் சென்று தாக்குவதில் வல்லவர்கள். மேஜர் தல்பத் சிங் (Major Dalpat Singh) தலைமையில் 400 பேர் கொண்ட இந்திய படை 1918-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஹைஃபா நகரைத் தாக்கியது. துருக்கியின் துப்பாக்கிகளை இந்திய குதிரைகள் வீழ்த்தியது. இதில் 44 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அப்போதைய பாலஸ்தீன பகுதிகளிலே அடக்கம் செய்யப்பட்டனர். இந்திய வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக ஹைஃபா நகரில் போர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி ஹைஃபா தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது ஹைஃபா நகரம் இஸ்ரேலின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கிறது.

விவசாய சாதனை

விவசாய சாதனை

விவசாயத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி சாதனை படைக்கும் நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் நிலம் விவசாயம் செய்வதற்கு ஏற்றது இல்லை என்றாலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து வருகிறது. மழை நீரை கொஞ்சம் கூட வீணடிக்கமாட்டார்கள் இங்குள்ள விவசாயிகள். நீரை சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள்.

கழிவு நீரையும் முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். இஸ்ரேல் 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில் 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்தது. ஆனால், தற்போது 5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழங்கள் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கொரோனாவை வென்றது?!

'கட்டிப்பிடி வைத்தியம்' கேள்விப் படாதவர்களே இருக்க முடியாது. வசூல் ராஜா MBBS படத்தில் கமல்ஹாசன் ஒரு தூய்மைப் பணியாளரைக் கட்டிப்பிடிக்கும் காட்சி மனதை நெகிழ வைக்கும். இஸ்ரேலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

பல நாடுகளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் கலாசாரம் இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் ஒருவரை கட்டியணைப்பது பாதுகாப்பானது இல்லை. இந்தக் கலாசாரத்தை பின்பற்றும் இஸ்ரேல் மக்களை அந்நாட்டு அரசு, "தனியாக இருக்கும் ஒரு மரத்தை கட்டியணையுங்கள்" என்று கூறியது. இதுவும் ஒருமாதிரி நல்லாத் தானே இருக்கிறது.

தீவிரமாக தடுப்பூசி செலுத்தியதன் மூலமாக, கோவிட் நோயிலிருந்து மீண்ட முதல்நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இஸ்ரேல். "இனிமேல் வெளியே வரும்போது மக்கள் முகக்கவசங்கள் அணியத்தேவையில்லை” என்றும் சொல்லியிருக்கிறது இஸ்ரேலிய அரசு.

இந்தியா - இஸ்ரேல் உறவு

Benjamin Netanyahu - Narendra Modi

2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம், இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்னும் பெருமையை மோடி பெற்றார். இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்திய பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என்று பேசினார். அதுமட்டுமில்லை, இஸ்ரேலில் வேகமாக வளரக்கூடிய ரகத்தைச் சேர்ந்த ’க்ரைசாந்துமன்’ என்ற மலருக்கு ‘மோடி’ என்றும் பெயரையும் வைத்தார். (சீக்கிரம் வளர்ந்த தலைவர் எனச் சொல்ல வருகிறார் போல) பதிலுக்கு மோடியும், கேரளாவில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தியாவுடன் யூத வர்த்தக சரித்திரத்தைப் பற்றிய மிகப் பழைமையான செப்புத் தகடுகளிலான ஆவணங்களைப் பரிசாக வழங்கினார்.

பல காலமாக பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா நடுநிலையைத்தான் பின்பற்றியது. ஆனால், முதன் முதலாக 2019-ம் ஆண்டு `ஷாஹீத்' அமைப்பு தொடர்பாக ஐ.நா. அமைப்பில் நடந்த வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான அரசு வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள்

கல் கடோட்

Wonder Woman, Justice League போன்ற படங்களில் நடித்த கல் கடோட் (Gal Gadot) இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். கற்காலத்தில் இருந்து டிஜிட்டல் காலம் வரை மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய 'சேப்பியன்ஸ்' (Sapiens) புத்தகத்தை எழுதிய யுவல் நோவா ஹராரி இந்நாட்டவர்தான்.

தற்போதைய நிலை:

இஸ்ரேலில் 1 கோடிக்கும் குறைவான மக்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள். இதில் 70% யூதர்கள், 20% முஸ்லிம்கள், 2% கிறிஸ்தவர்கள். பாலஸ்தீன் நாட்டை முழுமையாக தன் வசம் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கில் தொடர் போரில் இஸ்ரேல் தற்போது ஈடுபட்டு வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன பிஞ்சுக் குழந்தைகள் சத்தம் உலக அரங்கில் ஒலித்தது. விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் எனக் களத்தில் இறங்கி இஸ்ரேலுக்கெதிராக போராட ஆரம்பித்தனர். இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளும் இதற்குமேல் அமைதி காக்க முடியாது என்று கருதி பாலஸ்தீனத்திற்கு பெயரளவில் ஆதரவை அளித்தனர். ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இஸ்ரேல் - பாலஸ்தீன்
ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே சண்டை நடக்கும். யாராவது தலையிட்டு போரை நிறுத்துவார்கள். மீண்டும், சிறிது காலத்தில் இஸ்ரேலின் ராக்கெட் ஏவுகணைகள் பாலஸ்தீன் மீது பொழியும். மரண ஓலங்கள் உலக மக்களை உலுக்கும். இதுதான் இத்தனை கால வரலாறு...

சமீபத்திய போர் நிறுத்த அமைதி நிலவிய காலத்தில் இஸ்ரேலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. நீண்ட காலமாக இஸ்ரேலிய பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாஹு (Benjamin Netanyahu) தோல்வியுற்றார். இதனால், ஜூன் 14-ம் தேதி புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் (Naftali Bennett) தேர்ந்தெடுக்கப்பட்டார். 49 வயதாகும் பென்னெட் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர். யூதக் குடும்பத்தில் பிறந்த பென்னெட் தான் யூதர்களின் கிப்பாவை தலையில் அணிந்து பதவியேற்ற முதல் இஸ்ரேலிய பிரதமர்.

Naftali Bennett

புதிய இஸ்ரேல் அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் பாலஸ்தீன் உடனான பதற்றைக் குறைப்பது தான். ஆனால், இவர் தலைமையேற்ற உடனே மீண்டும் பாலஸ்தீன் மீது தாக்குதலை தொடங்கி விட்டார்.

அமைதி எனும் ரோஜா பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் மலரட்டும்!

(பயணிப்போம்)


source https://www.vikatan.com/social-affairs/international/tale-of-countries-12-israel-history-and-political-backstory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக