Ad

வியாழன், 17 ஜூன், 2021

புத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன?!

"சுகர் வந்துடும்... அரிசியைக் கம்மி பண்ணுங்க. ப்ரஷர் கூடிடும்... உப்பைக் குறைங்க!" என்று சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், ''அரிசியை உப்பில் போட்டு சாப்பிட்டதால்தான், நூறு வயதைத் தாண்டியும் நான் ஆரோக்கியமாக வாழ்கிறேன்!" என்று சொல்பவர்களைப் பார்த்திருப்போமா?


சூப்பர் சென்டினேரியன்ஸ் (Super Centenarians) என அழைக்கப்படும் மிக அதிக வயது வாழ்ந்தவர்களின் நீடித்த வாழ்நாள் ரகசியங்களை 'மாஸ்டர்ஸ் ஆஃப் லாங்கிவிட்டி' என்ற தலைப்பில் தொகுத்துள்ள இகிகாய் புத்தகத்தில், முதலாம் இடத்தைப் பெற்றுள்ளவர் ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த மிசோவ் ஒகாவா என்ற பெண்மணி. 117 வருடங்கள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவரை சந்தித்தபோது, "சுவையான சுஷி மற்றும் சூப்பர் தூக்கம் ஆகிய இரண்டும்தான் எனது நீண்ட வாழ்வின் ரகசியம்!" என்று சொன்னதுடன், "இந்த வயதிலும் மாதத்தில் ஒருமுறையாவது சுஷி என்ற அரிசிச் சாதத்தை விரும்பி உட்கொண்டுவிடுவேன்" என்றும் கூறியிருக்கிறார்.

அது என்ன சுஷி... உண்மையில் சாகாவரத்தைத் தருமா இந்த சாதம்?!
ஜப்பான் என்றதும் நம் நினைவிற்கு வருவது அவர்களது உழைப்பு, பணிவு, பாரம்பரிய கிமோனோ உடை, க்ரீன் டீ மற்றும் சுஷி உணவு தான். சுஷி என்றவுடன் வேக வைக்காத மீன் நம் அனைவரின் நினைவிற்கு வருகிறது என்றாலும், உண்மையில் இந்த ஜப்பானிய சொல்லுக்கு, புளிப்பான என்பதுதான் பொருள். ஆனால், சுஷி என்பதை உணவாகக் குறிப்பிடும்போது வினிகர் ஏற்றிச் சுருட்டப்பட்ட அரிசி சாதத்தில் விதவிதமான கலவைகளும் ஃப்ரெஷ் மீனும் நிரப்பப்பட்டிருப்பதையே குறிக்கிறது.

சுஷி

ஆரம்ப காலத்தில், நெல் அறுவடைக்கு முன்பாக உணவு பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, நெல் வயல்களில் கிடைத்த மீன்களை பதப்படுத்தி பத்திரப்படுத்திய முறைதான் சுஷி. வயல்களில் கிடைத்த சிறுமீன்களை சுத்தப்படுத்தி, அவற்றை உப்பில் ஊற வைத்து, பின்பு சமைத்த அரிசி உணவில் அவற்றை நொதிக்க வைத்து, நன்கு ஊறிய இந்த மீன்களை சேமித்து வைத்து, தேவைப்படும்போது விளைந்த முள்ளங்கி, இஞ்சி, கிழங்குகள் உள்ளிட்ட காய்கறிகளைச் சேர்த்து, நாரேசுஷி (narezushi) என்ற உணவாக மக்கள் உட்கொண்டு வந்தனர் என்கிறது ஜப்பானிய உணவு வரலாறு.

பிற்காலத்தில் மீன்கள் கெடாமல் இருக்கவும், உணவில் சுவையைக் கூட்டவும் வினிகர் சேர்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் சுஷி சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிடையே ஓடும் பெரிய நதியான மெக்காஃங் நதிக்கரையோரம் வாழ்ந்தவர்களால் உட்கொள்ளப்பட்டு, பிற்காலத்தில் சீனா மற்றும் ஜப்பானுக்குப் அதிகம் பரவியதுடன், ஜப்பானின் மிக முக்கிய உணவாகவும் மாறியது என்கிறது வரலாறு.

அதேபோல ஆரம்பநாட்களில் நன்கு ஊறிய வயல் மீன்கள்தான் சுஷி உணவின் முக்கிய அங்கமாக இருந்தபோதிலும், தற்போது ஃப்ரெஷ் டூனா, சால்மன், ஹெர்ரிங் மீன்கள் மற்றும் மற்ற கடல் உயிரினங்களுடன் வினிகர் சேர்த்த அரிசி சாதம், கடற்பாசி, முட்டை, காய்கறிகள், சோயா சாஸ் ஆகியவற்றுடன் அழகாக கார்னிஷ் செய்து சுஷி உட்கொள்ளப்படுகிறது.

சுஷி என்பது பொதுவான பெயர்தான். அதனுடன் சேர்க்கப்படும் இணைப்பொருட்களைப் பொறுத்து சுஷி உணவு ஏராளமான பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. இவற்றுள் 'மக்கி-சுஷி' என்பது உருளை வடிவில் அடுக்கப்பட்ட உணவு அதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது.

சுஷி

'ஈநோமகி' என்பது ஈல் மீன்கள் மற்றும் காளான் சேர்த்த உணவு என வகைப்படுகிறது. இவற்றுள் நோரி என்ற கடற்பாசியும், வாசபி என்ற ஹார்ஸ் ரேடிஷ் இலைகளும் சுஷி உணவிற்கு சுவையைக் கூட்டுவதுடன் அதன் விலையையும் நிர்ணயிக்கின்றன. ஆம்... சுஷி என்பது பணக்காரர்களுக்கான உணவாகவே பார்க்கப்படுகிறது.


1800 வரை ஜப்பானின் பாரம்பரிய உணவாக மட்டுமே இருந்த சுஷி, பின்பு மெதுவாக இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பரவி விரும்பி உட்கொள்ளப்படும் உணவாக மாறிவிட்டது. இன்று உலகம் முழுவதிலும் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம், சுஷி உணவகங்களும், சுவையான சுஷிகளும் காணப்படுவதுடன், சைவப் பிரியர்களுக்கு வெறும் முள்ளங்கி சேர்த்த சுஷி, கலிஃபோர்னியா ரோல்ஸ், ஓரியோ சுஷி என தன்னை நித்தமும் புத்தம் புதிதாக உருமாற்றிக் கொண்டே இருக்கிறது.

லட்சக்கணக்கான மக்களின் பிரியமான உணவாக உள்ள இந்த சுஷியைத் தயாரிக்க உண்மையில் சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கென பிரத்யேக கத்தி, மூங்கில் கூடை, காய்கறிகள், கடற்பாசி, வாசபி, சோயா சாஸ், பதமாக சமைக்கப்பட்ட மட்சூரி வகை அரிசி, இவையனைத்திற்கும் மேலாக புத்தம் புதிய டூனா, ஹெர்ரிங் அல்லது சால்மன் வகை மீன்கள், இவையனைத்தையும் முறையாக நிரப்பும் திறன் கொண்ட செஃப்கள் என சுவைமிக்க சுஷியைத் தயாரிக்க அதிக நேரமும், கூடுதல் பொறுமையும் தேவை என்பதால்தான் சுஷியின் விலையும் சற்று கூடுதல் என்கிறார்கள்.

சுஷி

என்றாலும் அதிகளவு உப்பும், கலோரிகளும் நிறைந்த பாரம்பரிய சுஷி உணவில், அதிகப் புரதச்சத்து, குறைந்த கொழுப்பு, நிறைந்த வைட்டமின்கள் மற்றும் மினரல்கள், முக்கியமாக கூடுதல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியன உள்ளன. இதுதான் சுவையான உணவில் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ரகசியம். அதனால்தான், மிசோவ் ஒகாவா உட்பட்ட நூறுவயதைத் தாண்டிய சூப்பர் சென்டினேரியன்ஸின் ஆரோக்கியத்தை சுஷி பாதுகாத்துள்ளது என்பது புரிகிறது.


எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சாப்பிட்ட சுஷியின் சுவை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைத் தயாரித்த செஃப்பிற்கு டிப்ஸ் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று சொல்லும் ஜப்பானியர்கள், உங்கள் வீட்டில் அம்மாவோ, மனைவியோ சுவையாக சமைத்தால், நீங்கள் எப்படிப் பாராட்டுவீர்களோ, அப்படியே எங்களையும் பாராட்டுங்கள் என்கிறார்கள்.


ஆக... சுவையான சுஷியை சமைத்தவருக்கு வார்த்தைகளால் நீங்கள் நன்றி தெரிவிக்கலாம். இல்லையென்றால் ஜப்பானிய பானமான 'Sake' வாங்கித் தந்தோ, அல்லது அவருடன் சேர்ந்து அதைப் பருகியோ உங்களது நன்றியைத் தெரிவிக்கலாம் என்கிறார்கள் ஜப்பானியர்கள்.


ஆம்... உணவு சமைப்பதில் அதிக அக்கறையும், சிறிது கலைநயமும் இருக்க வேண்டும். அதைப் பரிமாறுவதிலும் ஓர் ஆத்மார்த்தமான அன்பு இருக்கவேண்டும். உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமல்லாமல், அவ்வளவு அருமையாக சமைத்தவரை மனதார மதித்துப் பாராட்டவும் வேண்டும் என்கிற மனநிலைதான், ஜப்பானியர்களை நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழவைக்கிறது என்பது புரிகிறது.


இந்த உலக சுஷி தினத்தன்று ஜப்பானியர்களின் சில்லென்ற சுஷியை நாம் சாப்பிட முடியாவிட்டால் என்ன... அவர்களது இந்த அழகிய பண்பாட்டை நாம் கற்றுக்கொள்ளலாம்தானே?!

#SushiDay



source https://www.vikatan.com/food/healthy/what-is-the-food-secret-behind-super-centenarians

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக