Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

Morning Motivation : ''ரொம்ப சின்ன விஷயத்தை ஏன் பெருசு படுத்துற!'' - எல்லோரும் இன்புற்றிருக்க

சமீபத்தில் ஒரு நாள், டிவி சேனலை மாற்றிக் கொண்டே வந்தேன். "ரொம்ப சின்ன விஷயத்தை ஏன் பெருசு படுத்தற?" என எதோ ஒரு மெகா சீரியல் வசனத்தைக் கேட்டதும் எங்கள் எதிர் வீட்டு சுரேஷ் மற்றும் வித்யாவின் நினைவு வந்தது.

ஒரு நாள் சுரேஷ், வித்யா மற்றும் அவர்களின் மகன் ரிஷி வெளியே போகக் கிளம்பினார்கள். வாசல் வரை வந்துவிட்ட பின்தான் வித்யா எடுத்து வந்தது அவர்களின் பைக் சாவி அல்ல வேறு ஒரு சாவி என்பது தெரிய வந்தது. அவ்வளவுதான். வாசலில் நிற்கிறோம் என்றும் பாராமல் அவர் அவளை வசை பாடத் தொடங்கினார்.

வித்யாவும் , "சாரி... எதோ நினைப்புல எடுத்துட்டு வந்துட்டேன்" என மன்னிப்பு கேட்டும்கூட அவளின் கணவர் வசைகளை நிறுத்தவில்லை. மீண்டும் வித்யா கதவைத் திறந்து வீட்டினுள் போய் சரியான சாவியை எடுத்து வந்த பின்னும் வசைகள் தொடர்ந்தன.

வீட்டிற்குள் போன பெண் அழுதிருக்கிறாள் என்பது கலைந்திருந்த கண் மையையும், சிவந்திருந்த கண்களையும், விசும்பும் மூக்கையும்பார்த்தபோது தெரிந்தது.

அத்தனை நேரமாக அங்கு நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை ரிஷி சொன்னான்... “அம்மா தான் தெரியாம எடுத்துட்டு வந்தேன்னு சொன்னாங்க இல்லப்பா? போய் சரியான சாவியையும் எடுத்துட்டு வந்தாங்க இல்ல. பிராப்ளம் சால்வுடு... ஆனா நீங்க இன்னும் ஏன் அவங்களைத் திட்டிகிட்டே இருக்கீங்க... ஏன்பா?'' என்றது. அந்தக் கேள்வியை அவர் 8 வயது குழந்தையிடமிருந்து எதிர்பார்க்க வில்லை என்பதை அவரின் முகம் சொன்னது.

husband - wife

சுரேஷும் சளைக்காமல் , முதல்ல எடுத்திட்டு வரும்போதே சரியா கொண்டு வந்திருக்கணும்ல எனச் சொல்ல, நொடியும் தாமதிக்காமல் அக்குழந்தை "அப்போ நெக்ஸ்ட் டைம்ல இருந்து நீங்களே எடுத்திட்டு வாங்க" என்றது. இம்முறை குழந்தை சொன்னதில் இருந்த உண்மை இன்னும் உக்கிரமாயிருக்க குழந்தையை அதிகப்பிரசங்கி என வசை பாடத் தொடங்கினார்.

நம்முள் எத்தனை பேர் சுரேஷ் போல இருக்கிறோம்? ரம்மியமான நாளை அல்ப காரணங்களுக்காக ரணகளமானதாக மாற்றுகிறோம்? வித்யா எடுத்து வந்தது தவறான சாவி என்பது தெரிந்ததும் “பரவாயில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் சுரேஷ் அந்த சில நொடிகளைக் கடந்திருந்தால் தெருவில் வைத்து ஒரு சண்டை உருவாகியிராது. திட்டமிட்டபடி மகிழ்ச்சியாக வெளியே போய் வந்திருப்பார்கள்.

தவறுகள் நேரும் போது அதிலிருக்கும் படிப்பினையை ஏற்றுக் கொண்டு மீண்டும் அத்தவறை செய்யாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனமே தவிர அறியாமல் பிறர் செய்த தவறை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தபடி பொருமிக் கொண்டிருப்பது அல்ல.

சின்ன பலூன் சைஸ் கொண்ட விஷயங்களை பாராசூட் போல பூதாகரமானதாக மாற்றாமல் "சரி! தப்பு நடந்துடுச்சு... அதை சரி பண்ற வழியைப் பார்த்தபடி அதைக் கடந்து போவோம்" எனும் பக்குவம் இருப்பது வரம் தானே ?



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-are-we-reacting-too-much-for-small-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக