சுதா, 24 வயதான இளம்பெண். முதல் தலைமுறை பட்டதாரி. தந்தையில்லாத குடும்பத்தின் மூத்த மகள். `மனதில் உறுதி வேண்டும்' சுகாசினிபோல குடும்பத்தின் முதுகெலும்பு அவளே. படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை 3 வருடங்களாகப் பார்த்தாள். பின்னர் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், வளர்ந்துவரும் மற்றொரு ஸ்டார்ட் அப் கம்பெனியில் டீம் லீடராகப் பதவி உயர்வுடன் வேலை மாறினாள். சென்னையில் அலுவலகம். உடனே தம்பி, அம்மா எனக் குடும்பத்தையும் தன் சொந்த ஊரான நாகர்கோவிலிலிருந்து கூட்டி வந்து சென்னையில் ஓரளவு வசதிகள் நிறைந்த பிளாட் ஒன்றில் குடியமர்த்தினாள்.
அடுத்த இரண்டே மாதங்களில் கொரோனாவும், அதன் பின்னாடியே லாக்டௌனுமாகப் பலரது வாழ்வும் தொழிலும் ஆட்டங்காணத் தொடங்கின. அதுவும் சுதா வேலை பார்த்தது டூரிஸம் தொடர்புடைய ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றில். முதல் இரண்டு மாதங்கள் எப்படியோ தாக்குப் பிடித்த நிறுவனம், மூன்றாம் மாதம் முதல் Deferment என 20% வருமானத்தை அனைவரின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கத் தொடங்கியது.
20% என்பது சுதாவின் சூழலுக்குப் பெரும் பணம். கேம்பஸ் செலக்ஷனில் தம்பிக்கு வேலை கொடுத்த கம்பெனியும் கொடுத்த ஆஃபரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, சுதாவை சுற்றியடித்தன கவலைகள்.
மாதத்தின் முதல் தேதியில் கொடுக்க வேண்டிய வாடகை , வீட்டுக்கு வாங்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள், தன் படிப்புக்காக தான் வாங்கிய லோனின் இ.எம்.ஐ, அம்மாவின் மருத்துவச் செலவு, தன் தம்பியின் படிப்புக்கு உதவிய குடும்ப உறவினருக்கு மாதம்தோறும் தவணை முறையில் கொடுக்க வேண்டிய பணம், எதிர்காலம் என எல்லாமே அவள் கவலையைக் கூட்டுவதாக இருந்தன. சுதாவால் ஜூலை மாதத்துக்குப் பிறகு, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போனது. வருவது கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கும் என்ற பழமொழி பொருந்தும்படி ஆனது அவளின் நிலை.
தன் வருவாய் கணிசமாக உயர்ந்திருக்கிறது, கூடவே இரண்டு மாதங்களில் தம்பியும் வேலைக்குச் சேர்ந்துவிடுவான் என்று சுதா போட்டிருந்த கணக்கு பொய்த்துப்போனது. 3 வருடங்களாகச் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியைத்தான் புதுவீடு மாறுவதற்கும், குடும்பத்தை ஊரிலிருந்து சென்னைக்கு மாற்றுவதற்கும் செலவிட்டிருந்தாள். அதுபோக அவள் சேர்த்திருந்த சில ஆயிரங்கள் நகைச் சீட்டுகளில் கிடந்தன. நிலைமையைச் சமாளிக்க பர்சனல் லோன் எடுக்க முயன்றபோது, ஏற்கெனவே இருக்கும் இ.எம்.ஐ-களையும், புதிதாக மாறி இருக்கும் வேலையையும் காரணம் காட்டி அவளுக்கு லோன் மறுக்கப்பட்டது.
`சுதா செய்தது தவறா? அப்படியெனில் வாழ்வில் முன்னேறி வரும் பட்டதாரிகள் குடும்பத்துடன் இடம்பெயர்வது தவறு என்கிறீர்களா?' என்றால்... இல்லை. இன்றைக்கு இருக்கும் சமூக, பொருளாதார மற்றும் பரிணாம வளர்ச்சிகள் இடம் பெயர்வதால்தான் சாத்தியமாயின. எல்லோரின் கனவாகவும் இருக்கும் `என் குடும்பம் முன்னேற வேண்டும்' என்ற எண்ணம்தானே சுதாவிடமும் இருந்தது..? அதில் தவறு இல்லைதான்.
ஆனால், தன் திட்டத்தை செயல்படுத்திய விதம்தான் சுதா சறுக்கிய இடம்!
வரவுக்கு மீறி செலவு செய்யாமல் இருப்பது மாத்திரம் சாமர்த்தியம் அல்ல. எதிர்பாரா செலவுகள் வரும்பட்சத்தில், அதிகமான வருமானம் தரும் வேலை இது என நம்பும் வேலை திடீரென போகும்பட்சத்தில், அதனால் வரும் விளைவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணமும் திட்டமிடுதலும் அவசியமான சாமர்த்தியம்!
தன்னை நம்பியிருக்கும் அம்மாவையும் தம்பியையும் தன்னுடனேயே தான் பணி செய்யும் ஊருக்கு அழைத்து வருவதை திட்டமிட்ட சுதா சறுக்கியதன் முக்கியக் காரணங்கள்...
-
எதிர்பாரா அவசர செலவுகள் வரும் பட்சத்தில் என்ன செய்வோம் என்ற திட்டமிடலும், தெளிவும் இல்லாமல் இருந்தது.
-
2 - 3 மாதங்களுக்குப் பின் தம்பிக்குக் கிடைக்கப் போகும் வேலையையும், அதில் வரும் வருவாயையும் மனதில் வைத்து சிறு நகரிலிருந்து பெரு நகரமொன்றுக்கு மாறியதும், கையிருப்பின் பெரும் பகுதியை இடப் பெயர்வுக்கு செலவு செய்தது.
-
நகைச் சீட்டைத் தவிர, வேறெந்த முதலீடோ சேமிப்போ இல்லாமலிருந்தது.
-
தம்பியின் வேலைக்கும் தனது வேலைக்கும் பிரச்னை வரும் பட்சத்தில் குடும்பத்தை எப்படி சமாளிப்போம் என்பதையும், அதைச் சமாளிக்கத் தன்னிடம் போதுமான சேமிப்பு இருக்கிறதா என்பதையும் யோசிக்காமல் இருந்தது.
பல பொருளாதார வல்லுநர்களும் கூறும் முக்கிய அறிவுரை, உங்கள் வருமானம் என்னவாக இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆகும் மாதாந்தர செலவுகளை மூன்றால் பெருக்கி அதை ஒரு தனி சேமிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அது அவசர காலத்துக்கானதுதானே தவிர வேறு எதற்குமல்ல. ஏனெனில், உங்களின் வேலையின் மூலம் கிடைக்கும் மாதாந்தர வருமானத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பு ஏற்படுமெனில், மற்றொரு வேலையைத் தேடும் வரையிலும் உங்களின் அத்தியாவசிய செலவுகள் குறித்த கவலைகள், பதற்றம் இல்லாமல் உங்களின் கவனத்தை அடுத்த வேலை தேடுவதில் குவிப்பதற்கு இது முக்கியம்!
குறிப்பு: மேலே சொன்ன பரிந்துரைகள் எல்லாம் இந்தக் கொரோனா பேரிடர் காலத்துக்கானது மட்டுமல்ல. நியூ நார்மல் வாழ்க்கை முறையிலும் இதுபோன்ற வேலை இழப்புகளும், சம்பளக் குறைப்புகளும் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. So, வாழ்வின் முன்னேற்றத்துக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனா, வடிவேலு சொல்வதைப்போல... எது செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணுங்க!
source https://www.vikatan.com/lifestyle/women/how-can-we-prepared-to-handle-financial-emergencies-her-money
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக