பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைய இருந்த நிலையில் சசிகலா உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா.
அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை எனவும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சிறையில் இருந்து புறப்பட்ட சிறை அதிகாரிகள், சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெற்றனர். இந்த கோப்புகள் மீண்டும் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான கோப்புகளை மருத்துவமனையிலும் ஒப்படைத்தனர் அதிகாரிகள். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலை ஆவதை ஒட்டி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், அ.ம.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துவருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். விடுதலைக்குப் பின்னரும் சசிகலாவுக்கு விக்டோரியாவிலேயே சிகிச்சை தொடர்கிறது. அவர் விருப்பப்பட்டால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சை முடிந்து பிப்ரவரி மாதம்முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-released-after-four-years-from-prison
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக