Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

ட்ரம்ப்பின் ஆட்சி கலைக்கப்படுமா... அமெரிக்க அரசியல் மாற்றங்கள் உலகுக்கு சொல்வது என்ன?!

டொனால்ட் ட்ரம்ப்பின் பதவி முடிவுற இன்னும் சில நாட்களே உள்ளது. இறுதிக்காலங்களில் அமைதியாகப் பயணத்தை முடித்துக்கொள்ள தான் மற்ற அதிபர்கள் போல் கிடையாது என்று சவால் விடுகிறார் ட்ரம்ப். எதிர்க்கட்சி அவர் மீது இரண்டாம் முறை பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளது. சொந்த கட்சியினரே ஒவ்வொருவராகக் கைவிடத் தொடங்கிவிட்டனர். ட்விட்டர் அவரது கணக்கிற்கு நிரந்தர தடை விதித்துள்ளது. 'ட்ரம்ப் பதவி விலகவே விரும்புகிறேன்' என்று அவரது கட்சி செனட்டர் லிசா மர்கோவஸ்கி கூறுகிறார். மீதமுள்ள நாட்கள் எந்த அணு ஆயுத தாக்குதலுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று ராணுவத் தலைவரிடம் கோரியுள்ளார் பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி. அதிபரின் கடமையைத் தவறியவர் என்ற விதத்தில் 25வது சட்டத் திருத்தத்தின் மூலம் நேரடியாகவும் ட்ரம்ப்பைப் பதவி விலக்கும் வேலைகள் நடைபெறுகிறது. ஜனநாயகத்தைச் சீரழித்தவர் என்ற சித்திரம் வேறு உலகளவில் பரவலாகச் சேர்ந்துகொண்டது. மொத்தத்தில், அரசியலில் முழுவதுமாக தனிமைப்பட்டு நிற்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் நிலைப்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது? நடந்து முடிந்த தேர்தலில் தனது தோல்வியை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து தேர்தல் முடிவுகளை எதிர்த்தார். அமெரிக்காவில் தேர்தலை விமர்சனம் செய்வது சமீபமாக வாடிக்கையாகி வருகிறது. ஏதோ தவறு நடந்துள்ளது, ஒரு சிலரின் ஆதிக்கம் உள்ளது போன்ற அனுமானங்கள்தான் எப்போதும் பேசப்படும். ஆனால் இந்தமுறை வாக்குகளை எண்ணியது யார், தேர்தல் இயந்திரம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, அதைத் தயாரித்தவர் யார் என்பது வரை கேள்வி கேட்கிறார் ட்ரம்ப்.

உச்சநீதிமன்றம் முதல் காங்கிரஸ் அவை வரை ட்ரம்ப்பின் முறையிடலை நிராகரித்துள்ளனர். ஏன், அவரது குடியரசு கட்சியினரே கணிசமாக அவர் வென்றார் என்பதை ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், தான் தோற்கவில்லை என்பதற்குத் தன்னை மட்டுமே ஆதாரமாக நினைக்கிறார் ட்ரம்ப். ஒரு விஷயம் தமக்கு ஏற்புடையது என்றால் அது பொய்யாக இருந்தாலும் ஆதரிப்பதும், ஏற்பில்லையென்றால் அது உண்மையாகவே இருந்தாலும் ஒப்புக்கொள்ள மறுப்பதையும் உண்மைக்கு பிந்தைய மனநிலை (Post Trust) என்பார்கள். இந்த முரண்பாட்டையே இன்று ட்ரம்ப்பின் நிலைப்பாட்டோடு ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அதைக் கொண்டே, சில செனட்டர்களையும், பல பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களையும் கொண்டு பைடனின் வெற்றியை எதிர்த்துப் பேச வைக்க ட்ரம்ப்பால் முடிந்தது.

ட்ரம்ப் தவறிய இடம் தனது துணை அதிபர் மைக் பென்சிடம் பைடனின் பதவியேற்புக்கு முட்டுக்கட்டை போடச் சொல்லியது. பென்ஸ் அதனை மறுத்து அவையை விட்டு வெளியேறினார். செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள் பைடனின் வெற்றிக்கு எதிராகப் பேசியதும், பென்ஸ் ட்ரம்ப்பின் கட்டளையை மறுத்ததும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. தேர்தல் முடிவை எதிர்த்து ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியதும், காங்கிரஸ் விவாதத்தை நடத்தியதும் கூட அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான். இதன் பின் நடந்த நிகழ்வுகளே அமெரிக்க அரசியலில் ட்ரம்ப்பின் நிலை என்ன என்பதற்கான பொருளைத் தருகின்றன.

ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். இதுவும் அமெரிக்க அரசியலில் அரிதான நிகழ்வுதான். தேர்தல் முடிவுகளை முழுமையாக ஒப்புக்கொண்டு, அடுத்த அதிபரிடம் முறையாக அதிகாரத்தை ஒப்படைப்பதுதான் வழக்கம். ட்ரம்ப் என்றும் வழக்கத்தை மீறியவர். இதற்கு முன் ஒரு அதிபர் மட்டுமே இதுபோன்று பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். அவர், ட்ரம்ப்பைப் போலவே விலகல் மனநிலை கொண்ட ஆன்ட்ரிவ் ஜான்சன்.

கறுப்பின மக்கள் இனி அடிமையில்லை என்று லிங்கன் சட்டம் கொண்டுவந்த பிறகு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1861-65 வரை நடைபெற்ற இப்போரின் மூலம் வடக்கு-தெற்கு என்று அமெரிக்கா இரண்டாகப் பிரிந்தது. லிங்கனின் படுகொலைக்குப் பிறகு, அடிமை நிலையை ஆதரித்த தென்னக மக்களின் ஆதரவுடன் அதிபரானார் ஜான்சன். ட்ரப்பைபோல் இவர் மீதும் பதவிநீக்கத் தீர்மானம் எழுந்துள்ளது. பிறகு, 1868-ம் ஆண்டு தேர்தலில் உள்நாட்டுப் போரில் லிங்கனின் யூனியன் படை ஜெனரலாக இருந்த யுலிஸிஸ் கிரான்ட்டிடன் தோற்றார் ஜான்சன். கிரான்டின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள விரும்பாத ஜான்சன், பதவியேற்பு நாளில் தனது ஆதரவாளர்களுடன் தனி பேரணியை நடத்திக் கொண்டார்.

பைடனின் வெற்றிக்கு எதிராக வாக்களித்த குடியரசு கட்சி செனட்டர் ரிக் ஸ்காட் ட்ரம்ப்பின் முடிவை பரிசீலனை செய்யச் சொல்லியிருக்கிறார். ட்ரம்ப் இந்த முடிவு எடுத்திருப்பது நல்ல விஷயம் என்கிறார் பைடன். ஆனால், பதவியேற்பு நாள் வரை ட்ரம்ப்பின் ஆட்சி நீடிக்குமா என்பதே இன்றைய பேசுபொருள். அரசு கட்டடங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அமெரிக்க வரலாற்றில் பலமுறை நடந்துள்ளது. 1873-ம் ஆண்டு லூசியானாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னருடன் 100 விடுதலைப் பெற்ற கறுப்பர்கள் வெள்ளை இனவெறியர்களால் கொல்லப்பட்டனர். 1954-ம் ஆண்டு கேப்பிடால் கட்டடத்திற்குள் நுழைந்த பியூடோரிக்கோவைச் சேர்ந்த ஒருவர் பார்வையாளர் பால்கனியிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்நிகழ்வுக்குப் பிறகுதான் அவைகளில் குண்டு துளைக்காத இருக்கைகள் போடப்பட்டன. 2001-ம் ஆண்டு செப்டம்பர் ட்வின் டவர் நிகழ்வில் அவையிலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால், தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை.

ஆனால், இன்றைய வாஷிங்டன் தாக்குதல் பெரும்பாலும் முதன்முறை நடந்ததுபோல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இது ஒருவிதத்தில் உண்மையும் கூட. இதுவரை நடந்த தாக்குதலுக்கும், இப்போது நடந்த ட்ரம்ப் ஆதரவாளர்களின் கலவரத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதுவரை நடந்தவை எதுவும் அமெரிக்க இறையாண்மையைப் பாதித்ததில்லை. அமெரிக்கத் தேசியவாதம் என்பது அமெரிக்காவின் மதம். அது போதிக்கும், கட்டமைக்கும் எந்த ஒழுங்கிற்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஆள்பவர்களும் அமெரிக்கர்களும் கவனமாக இருப்பார்கள். ஆட்சியிலிருக்கும் அதிபரை எந்த எல்லை வரையிலும் விமர்சனம் செய்யும் கருத்துச் சுதந்திரம் உள்ள அமெரிக்கன், அமெரிக்க ஒழுங்கை எளிதில் விமர்சித்துவிட முடியாது. பல அந்நிய நாடுகளில் தலையிட முடியும் அமெரிக்க அதிபரால், தன் நாட்டின் மாகாண அரசியலில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இதுபோன்ற சில அடையாள செயல்பாடுகள்தான் அமெரிக்க அமைப்பை இறுக்கமாகப் பாதுகாக்கிறது.

Donald Trump

'வாட்டர் கேட்' ஊழலைத் தொடர்ந்து தன் மீது எழுந்த பதவிநீக்கத் தீர்மானம் விவாதத்திற்கு வரும் முன்பே தன் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் நிக்சன். தன் தனிப்பட்ட வாழ்வையொட்டி எழுந்த பதவிநீக்கத் தீர்மானத்தை முறியடித்தாலும் மக்கள் ஆதரவு பில் கிளிண்டனுக்கு இருந்தது. ட்ரம்ப் மீது எழுந்த பதவிநீக்கத் தீர்மானம் வெளியுறவு முறைகேட்டை ஒட்டி எழுந்ததால், அவை முறியடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அமெரிக்கர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, அமெரிக்க அதிபரையே களங்கம் சுமத்தப் பார்க்கிறார்கள் என்று அமெரிக்க ஒழுங்கை பேசினார் ட்ரம்ப். ஆனால், இன்று அவரே அதனைச் சிதைத்துள்ளார்.

முன்னாள் குடியரசு கட்சி அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவு விவகாரங்களைக் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடத்தி, சொந்த கட்சியினரே அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியும் கூட தனது எட்டாண்டுக் காலத்தைச் சீராக முடித்தார் புஷ். இன்று, அவரே ட்ரம்ப்பைக் கண்டிக்கிறார். ''பொதுவாக ட்ரம்ப்பிற்குத் தேர்தலில் விருப்பம் இருந்ததில்லை. தான் என்ன செய்கிறோம், எதற்காகத் தனது ஆதரவாளர்களை கேபிட்டாலுக்கு அழைத்தோம் என்பதை அவர் நன்கு உணர்வார்'' என்று குறிப்பிடுகிறது நியூயார்க் டைம்ஸ்.

Trump

ட்ரம்ப் அதிபரானது இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிர். அதிபரான அவரின் செயல்பாடுகளை அறிவதும் அப்படிதான். காங்கிரஸ் சபையே எதிர்த்தாலும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்று நின்றார். தன் கட்சிக்காரர்களே எதிர்த்தும் சவூதி அரேபியாவுடன் உறவுகொண்டு அதன் தவறுகளுக்காக வாதாடினார். ஐநாவே எதிர்த்தாலும் ஏமன் போரை விடாமல் ஆதரித்து வந்தார். உலகமே எதிர்த்தும் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இவை அனைத்திற்கும் அமெரிக்க நலனைக் காரணமாகக் கூறிய ட்ரம்ப்பிற்குப் பின்னால் தற்போக்கிலான சுயநலம் இருந்தது. அதுவே, இன்று 'அமெரிக்க நலன்' என்ற பொது ஒழுங்கையும் தாக்குகிறது. எதிர் விளைவுகளைப் பற்றி ட்ரம்ப் என்றும் கவலைப்பட்டதில்லை. அவர் தன்முனைப்பு வரையறுக்க முடியாதது. கிட்டத்தட்ட அமெரிக்க ஒழுங்கைப் போல.

ட்ரம்ப் இப்போது ஒருபடி மேலே சென்று உள்நாட்டிலும் தன் தலையீட்டைத் தொடங்கிவிட்டார். ''நீங்கள் பேயைப் போல் சண்டை போடவில்லை எனில், உங்களால் எப்போதும் இந்த நாட்டை பெறமுடியாது'' என்று சில நாட்களுக்கு முன் தன் ஆதரவாளர்களிடம் பேசினார் ட்ரம்ப். வியட்நாம் தொடங்கிப் பல நாடுகளில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாட்டோடு பொருந்துகிறது இந்த வாக்கியம். பல நாடுகளும் இன்றைய அமெரிக்க ஜனநாயகத்தைப் பற்றி பரிதாபமாகக் கருத்து கூறுகின்றன. இந்த நிலைக்குக் காரணமானவரைத்தான் அமெரிக்கா தன் அதிபராக தேர்ந்தெடுத்தது. குழப்பமான, தன்முனைப்பு கொண்ட டொனால்ட் ட்ரம்ப்பை புரிந்துகொள்வது என்பது ஒருவிதத்தில் அமெரிக்காவைப் புரிந்துகொள்வதாகவும் இருக்கலாம்.



source https://www.vikatan.com/news/politics/need-to-understand-trump-before-understanding-america

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக