கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை பேசும் விஷயங்களை நீங்கள் நம்பும் வாய்ப்பு குறைவுதான். ஆனால், நம்மைச் சுற்றி இது நடந்துகொண்டிருக்கிறது. மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல; மொபைல் டவர் இருக்கும் பல கிராமங்களிலும் நடக்கிறது என்பதுதான் சத்தியமான உண்மை.
வலையுலகத்தை மூன்றாய்ப் பிரிக்கலாம். சர்ஃபேஸ் வெப், டீப் வெப் மற்றும் டார்க் வெப் (surface web, deep web மற்றும் dark web). வலையில் பொதுமக்கள் நாம் காண்பது 4% தான். இதை சர்ஃபேஸ் வெப் என்பார்கள். கூகுள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகள் வலைதளங்களில் ஊர்ந்து, நாம் தேடும் தகவல்களைக் கொணர்ந்து அளிக்கும். பொதுமக்களால் சர்ஃபேஸ் வெப்பை மட்டுமே அணுக முடியும். ஒரு பொதுவான செய்தியையோ தகவலையோ நாம் இணையத்தில் தேடி எடுக்க முடியுமல்லவா, அது சர்ஃபேஸ் வெப்.
இதற்கு அடுத்திருப்பது டீப் வெப். இது அரசாங்க, அறிவியல், மருத்துவ, ராணுவ மற்றும் பல அமைப்புகளின் தனிப்பட்ட தகவல்கள் கொண்ட வலை. இதைப் பொதுமக்களால் (தேடுபொறிகளாலோ) அணுக முடியாது. அதற்கெனப் பிரத்யேக வலை முகவரிகளும் அனுமதியும் தேவை. உதாரணத்துக்கு, ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் மருத்துவத் தகவல்களை நம்மால் கூகுளில் தேடி எடுக்க முடியாது இல்லையா? அதுதான் டீப் வெப்.
இதற்கு அடுத்தது டார்க் வெப். இதன் பெயரைப் போன்றே, இது ஓர் இருள் நிறைந்த நிழலுலகம். இதை அடைய பிரத்யேக மென்பொருள்கள் தேவைப்படும். அவ்வளவு எளிதாக இதை யாராலும் அடையவும் முடியாது. போதைப்பொருள், ஆயுதக்கடத்தல், பாலியல் குற்றங்கள், அரசியல் கொலை, கலவரத் தூண்டல் போன்ற இன்னும் சட்டத்துக்கும் அறத்துக்கும் புறம்பான அத்தனை விஷயங்களும் நிகழும் இடமிது. நிஜவுலகில் மாஃபியாக்கள் என அழைக்கப்படுவோர் புழங்கும் வலை. நாம் எத்தனை கற்பனை செய்தாலும் அது டார்க் வெப்பில் நடப்பவைகளில் ஒரு துளியளவுதான் இருக்கும் என்பதை நம்ப முடிகிறதா?
இந்தக் கட்டுரை டார்க் வெப்பைப் பற்றியதல்ல. சமீபமாக, டார்க் வெப்புக்கும் சர்ஃபேஸ் வெப்புக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைத்துக்கொண்டிருக்கும் ஒரு சில மொபைல் ஆப்களைப் பற்றியதே.
சமீபத்தில் அரசாங்கம் போர்ன் தளங்களுக்கு தடை விதித்தது நாம் அறிந்ததே. போலவே டிக்டாக் முதலிய செயலிகளுக்கும் தடை விதித்தது. இவற்றையெல்லாம் மீறி உடனடித் தடை விதித்தே ஆக வேண்டிய ஆப்கள் இன்று சமூகத்தில் பரவிவிட்டன. உடனடித் தடை என்றால் குழு அமைத்து, கலந்தாலோசித்து, பின் ஓரிரு நாள்களில் செய்வதல்ல. முதலில் தடை செய்துவிட்டு பிறகு, அதன் காரணங்களை அலசிக்கொள்ளலாம். அத்தனை அவசரம். போர்க்கால வேகத்தில் இதைச் செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அந்த ஆப்களில் நடக்கும் விஷயங்களை விளக்கும் இக்கட்டுரை மிகுந்த ஜாக்கிரதையோடு எங்கும் பிசகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வோடு எழுதப்பட்டது. கத்தி மேல் நடக்கும் விஷயமிது.
அந்த ஆப்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை. பொதுவாக, Live streaming / broadcasting வகை ஆப்கள். பல மொபைல் ஆப்கள் வீடியோ காலிங் வசதியைத் தருகின்றன. டிக்டாக் போன்ற ஆப்கள் பாடல், வசனங்களுக்கு ஆடிப்பாடி வாயசைத்து அதைப் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பைத் தருகின்றன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற செயலிகள் லைவாக வீடியோ stream செய்யும் வசதியைத் தருகின்றன. இந்தக் கொரோனா காலத்தில், பல்லாயிரம் கோடிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்ற பிசினஸ் முதல் அகர முதல கற்கும் பள்ளி மாணவர்கள் வரை வீடியோ ஆப் வசதிகளால் பயன் பெற்றுள்ளனர். உலகில் எந்த டெக்னாலஜி முன்னேற்றம் வந்தாலும் அதை முதலில் ஏற்றுக்கொள்ளும் ஆதித்தொழில் ஒன்று உள்ளது. அது பாலியல். இதிலும் அது நிகழ்ந்தேறியது வருத்தத்துக்குரிய செய்தி. ஒரு வீடியோ கால் ஆப்பாகத் தொடங்கிய இது, இன்று அடைந்திருக்கும் நிலையை அந்த நிறுவனர்களே எதிர்நோக்கி இருப்பார்களா என்பது சந்தேகமே.
ஒரு பள்ளி மாணவி; அவளின் அறையின் சுற்றமும் தோற்றமும் அப்பர் மிடில் கிளாஸ் எனக்காட்டுகிறது, சுமார் 12 அல்லது 13 வயது இருக்கலாம். லைவில் வருகிறாள். உடனே `பேபி ஐ லவ்யூ, முத்தங்கள், show boob’ என கமென்ட்கள் குவிகின்றன. `100 காயின், 500 காயின் அனுப்பினால் பிரைவேட் ஷோ போடுகிறேன் அதில் எல்லாவற்றையும் காட்டுகிறேன்’ என்கிறாள். (இந்த காயின்களை வாங்க பயனர்கள் பணம் செலுத்த வேண்டும்.) `நூறுக்கு என்ன காட்டுவாய், ஆயிரத்துகு என்ன காட்டுவாய்’ என அக்குழந்தையிடம் ஒருவன் கேட்கிறான். அதற்கு மேல் அங்கு நிகழ்ந்தவற்றைப் பொதுவில் சொல்லவியலாது.
ஒரு பெண், தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அதற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டடத்திலிருந்து ரகசியமாக அவளின் குளியலை ஒருவன் லைவாக எடுத்து உலகம் முழுக்க ஓடவிடுகிறான். அதைப் பார்ப்பவர்கள் காசை இறைக்கின்றனர். அந்தக் குளியலிடத்தை நோக்கி நிரந்தரமாக கேமரா வைக்கப்படுகிறது. தாங்கள் குளிப்பது உலகம் முழுக்க நேரலையாகிக் கொண்டிருப்பதை அறியாது அவ்வீட்டின் பெண்கள் ஒவ்வொருவரும் இன்னமும் குளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். அவளின் போர்வையை நீக்கி, உடைகளுக்குள் சென்று அவளின் அங்க அவயங்களை லைவாக்கிக் கொண்டிருக்கிறான் கணவன். `இன்னும் இன்னும் காயின் அனுப்புங்கள் மேலும் மேலும் காட்டுகிறேன்’ என மார்க்கெட்டில் கூவிக்கூவி விற்பது போல் மனைவியின் உறுப்புகளை விற்றுக்கொண்டிருக்கிறான்.
டிக்டாக் வந்தபோது, அதுவரை அடக்கப்பட்டுகிடந்த ஏகப்பட்ட திறமைகள் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் உடைந்த அணைக்கட்டுபோல கட்டுக்கடங்காது வழிந்தோடியது. பாட்டு, டான்ஸ், காதல், கல்யாணம், சினிமா சான்ஸ், சாதீயம், மிரட்டல், கொலை, பண ஏமாற்று, போலீஸ் கேஸ் என அதில் சகல விதங்களிலும் எல்லை கடந்த நிகழ்வுகளைக் கண்டோம். என்னதான் காணக்கிடைத்தாலும், வீடியோ போடுபவர் அனுமதித்தாலொழிய கமென்ட் கூடப்போட முடியா நிலை டிக்டாக்கில் இருந்தது.
இன்ஸ்டாவிலும், ட்விட்டரிலும் `லைவ் ஷோ' நடத்திக் கொண்டிருந்த பல பாலியல் தொழில் சார்ந்த ஐடிகளுக்கு இந்த ஆப்பின் வழி நேரடியாகக் காசனுப்பும் வசதி இல்லாதது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. மேலும், பல ஐடிகள், நிர்வாண வீடியோ கால் செய்கிறேனென ஆசை வார்த்தை காட்டி, காசு பறித்து, காட்சியுமளிக்காது ஏமாற்றியதால், பணத்தை இழந்த பலர் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கதறினர்.
இந்த கமென்ட் மற்றும் நேரடி பேமென்ட் பிரச்னைகளைத் தீர்த்து, அந்த இரண்டு வசதியையும் வழங்கிய ஒரு மொபைல் ஆப் தற்போது மில்லியன் கணக்கான பயனர்களோடு, உலகின் அத்தனை மூலை முடுக்குகளிலுமிருந்து 24/7 ஷோ ஓட்டிக்கொண்டிருக்கிறது. டிக்டாக்கையும் போர்ன் சைட்டுகளையும் தடை செய்துவிட்டு, இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திறந்து விட்டிருப்பதை நினைத்து யாரை நொந்துகொள்வது?
காசு பண்ண வாய்ப்பிருந்தால், அதில் ரிஸ்க்கும் குறைவாய் இருந்தால், மனித மனம் தொட்டுவிட நினைக்கும் விபரீதங்கள் ஆச்சர்யமும் அச்சமும் ஊட்டுகின்றன. விர்ச்சுவல் செக்ஸ், போர்ன், பிறர் உடலுறவு கொள்வதை வேடிக்கை பார்க்கும் வாயூரிசத்துக்கு அடிமையான ஒரு தலைமுறைதான் இதன் மூலதனம். அவர்களைக் கொண்டே இது ஒவ்வொரு நாளும் பல்லாயிர டாலர்கள் புழங்கும் ஆன்லைன் செக்ஸ் தளமாகிறது. காபரேவில் காசை அள்ளி வீசுவார்களே, அதுபோல இதிலிருக்கும் எண்ணற்றோர் நிர்வாண ஷோக்களுக்காக காயின்களை வாரியிறைக்கிறார்கள்.
சில நாள்கள் முன்பு வரை தினமும் விவாதப்பொருளாகிய பிக்பாஸும் இந்த வாயூரிசத்தின் ஒரு அங்கமே. அடுத்தவர் வாழ்க்கையை, அவர்களின் அந்தரங்கத்தை, அவர்கள் அறைக்குள் புகுந்து, அவர்களுக்குத் தெரியாது ஓட்டை வழியே ஒளிந்திருந்து ரசித்துப் பார்க்கும் மனநோயின் நீட்சியே இது. இதை மனநோய் எனச் சொல்வதைக் கேட்க அதீதமாகப் படலாம். ஆனால் அதுவே உண்மை. ஒட்டு மொத்த சமூகமும் வாயூரிசத்தில் ஊறிப்போய், இது தவறு என்றுகூடத் தெரியாமல் `நார்மல்’ ஆகிப் போனதே பெரும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இன்று யாரேனும் ஒருவர் நம்மை நோக்கி, பிக்பாஸ் பார்ப்பது தவறு என்று கூறினால் அவரைக் கேலியாகப் பார்த்து சிரிப்போமல்லவா? அதுதான், அந்தச் சிரிப்புதான் நார்மல் ஆகிவிட்டதன் அறிகுறி. இந்தியன் படத்தில் கமல் சொல்வாரே, குற்றமென்றே உணர முடியாத அளவுக்கு குற்றம் இங்கே மலிந்துவிட்டதென்று. அதேபோலத்தான், ஒன்றைத் தவறென்றே உணராத சுரணையற்றதனம்.
இந்த ஆப்பில் லைவ் ஷோ போடுபவர்களைப் பொறுத்தவரை, கொரோனாவை பெரிய வரம் எனலாம். கொரோனா மூலம் வழக்கத்தில் புழங்க ஆரம்பித்த மாஸ்க் போடும் கலாசாரம் இன்னும் பலருக்குத் தைரியத்தை அளிக்க, பலர் மாஸ்க்கணிந்து, மேலும் பலர் மாஸ்க்கை மட்டுமேயணிந்து நிர்வாணச்சேவை புரியத் தொடங்கியுள்ளனர். எல்லா நாட்டிலிருந்தும் பயனர்கள் இருப்பதால், சூரியன் மறையவே மறையாத நிலமாக இது செயல்படுகிறது. எந்நேரமும், அது இரவோ பகலோ நட்ட நடு மதியமோ, ஒருவரோ, குழுவாகவோ ஸ்ட்ரிப்பிங் செய்தவண்ணம் உள்ளனர். அவர்களை மேலும் மேலும் ஊக்குவித்தபடி சில்லறையை இரைத்தபடி பார்வையாளர்களும்.
இந்த ஆப்பின் பிசினஸ் மாடலில் முக்கியமான விஷயம், இதில் இடைத்தரகர்கள் இல்லாதது. அரசியலில், ரியல் எஸ்டேட்டில் தரகர்கள் இருப்பது போல் பாலியல் தொழிலிலும் அது உண்டான காலம்தொட்டு தரகர்கள் இருப்பது உலகம் அறிந்ததே. இந்த ஆப், பயன் வழங்குநரையும் பயனீட்டுநரையும் நேரடியாக இணைக்கிறது. நடுவில் யாருக்கும் கமிஷன் வெட்டாது, பேமென்ட் செல்கிறது.
பாலியல் தொழிலுக்கு நேரடியாகச் சென்றால் அதில் இருக்கும் பயணம் சார்ந்த பிரச்னைகள், உடல்நலக்கேடு, வன்முறை மிரட்டல்கள் போன்ற எந்தத்தொந்தரவும் இதில் இல்லை. `மார்பைக்காட்ட இத்தனை காசு, முழுவதும் காட்ட இத்தனை காசு’ என்று மிகச் சுத்தமாக வேலை முடிந்துவிடுகிறது. இந்த ஆப்பில் சிலர் முகத்தை மூடிக்கொள்வதால், வெளியிடங்களுக்குச் சென்றாலும் அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவும் முடியாது.
எண்ணற்ற சோஷியல் ஸ்டிக்மா நிறைந்திருக்கும் இந்த நாட்டில், இந்த ஆப்பின் வீச்சை நம்பவே முடியவில்லை. துப்பட்டா போடச் சொல்லியும் பிஞ்சுக்குழந்தையிலிருந்து கிழவிகள் வரை முற்றிலுமாக மூடி வலம் வரக் கட்டாயப்படுத்தும் மக்கள் உள்ள இந்நாட்டில், அங்கம் முழுவதையும் திறந்தபடி, அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் முகத்தைக்கூட மறைக்காது மிகமிக வெளிப்படையாக எந்த தைரியத்தில் இவர்கள் இருக்கின்றனர் என்ற ஐயமும் இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, வட இந்தியர்கள் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டிருக்கின்றனர். ஊர்களில் பிரைவேட் பஸ்காரன்கள் இதோ கிளம்புகிறோம் எனச்சொல்லிக் கூவுவர் பார்த்திருக்கிறீர்களா? அதேபோல இவர்களும் (அது மனைவியா or வேறெவருமா தெரியவில்லை), ஷோ தொடங்கப்போவுது, 99 காயின் அனுப்பு, ஒரு நிமிஷம் டைம், 99 காயின் அனுப்பு, ஃபடாஃபட் ஃபடாஃபட் - இதையேதான் திரும்பத்திரும்பச் சொல்லி நிர்வாணத்தை விற்கின்றனர்.
இதில் இன்வெஸ்ட்மென்ட் என எதுவுமில்லை. தேவை ஒரு கேமரா மொபைல், நெட் கனெக்ஷன், ஒரு அக்கவுன்ட். டிரைபாடோ, கோ புரோ கேமராவோ யாருக்கு வேண்டும்? தங்கள் நிர்வாணத்தைப் படம் பிடிக்கும் கேமராவைச் சாய்த்து வைக்க ஒரு சக்கரை டப்பா போதும்.
இதில் பப்ளிக் live stream, group stream, private group, private one to one என பல ஆப்ஷன்கள் உள்ளன. அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் காசனுப்பி தரிசித்துக் கொள்கிறார்கள். ஆண்களின் பாலியல் வேட்கையை மிகத்துல்லியமாகக் கணக்கிட்டு அதைக் காசாக்கிக் கொள்கின்றனர்.
Send nudes என்று இனி எவனும் தோழி / காதலியிடத்தில் தொங்கிக் கொண்டிருக்க மாட்டான், இந்த ஆப்பைத் திறந்தால் அனுதினமும் புத்தம் புதிய லைவ் ஆட்டோ சஜசனில் கொட்டும்.
இதில் நான் பயந்த மூன்று விஷயங்களில் இரண்டு நடந்துவிட்டது.
- அடுத்தவருக்குத் தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுப்பது.
- ஸ்கூல் பிள்ளைகள் மொபைல் மற்றும் ரூமைப் பூட்டிக்கொள்ளும் வசதி & சுதந்திரத்தால் அவர்கள் இந்த சாக்கடைக்குள் விழுந்தது.
இதில் பயனர்களும் வழங்குநர்களும் பெருகப் பெருக, போட்டி அதிகமாகும். ஒரு கட்டத்தில் நிர்வாணக் காட்சிகள் சலித்துப்போய் மேலும் மசாலா கேட்கத் தொடங்குவர் (பிக்பாஸ் வீட்டில் பெரும் சண்டைகள், புதிய பிரச்னைகள் இல்லாவிட்டால் மக்கள் சோஷியல் மீடியாவில் அலுத்துக்கொள்வதையும் மிகவும் போரடிக்கிறது எனப் புலம்புவதையும் இந்த இடத்தில் நினைவிற்கொள்க). அதைப் போலவே இந்த ஆப்பிலும் விரைவில் புதுப்புது த்ரில் தரும் விபரீதமான காரியங்கள் மட்டுமே அதிக கவனத்தையும் வருமானத்தையும் பெறும். அப்போது பாலியல் வன்கொடுமைகளும், கூட்டு பாலியல் வன்கொடுமைகளும் லைவ் ஆகும். அதற்குக் காசு குவியும். சமீபத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் ஒரு பெண் கதறினாளே, அதை லைவாகக் காணும் நாளும், அதற்கு வரவேற்பு குவிந்து காசு இறைக்கப்படும் நாளும் நாம் கற்பனை செய்வதைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது. அந்த ஒன்றும் சீக்கிரமே நடந்துவிடும்.
இந்த ஆப் தற்போது தலைக்கு மேல் வெள்ளம் என்றாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவால். இதைப் பற்றியெல்லாம் ஆள்வோர் அக்கறைப்படுவதாய்த் தெரியவில்லை. நம்மைப் பாதுகாக்க யாரும் தற்போது இல்லை. நமக்கு நாமேதான் பாதுகாவல். விழிப்போடு இருங்கள், முக்கியமாகப் பிள்ளைகளிடத்தில்.
உங்கள் மொபைலில், குறிப்பாக உங்கள் பிள்ளைகளின் மொபைலில் இத்தகைய ஆப்கள் இருந்தால் அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள், அவர்களின் ஆன்லைன் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். ஒருவேளை அவர்கள் இத்தகைய ஆப்களில் சிக்கிக்கொண்டிருந்தால் கவுன்சலிங் கொடுத்து, பேசிப் புரிய வைத்து அவர்களை மீளுங்கள்.
இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இதற்குத் தீர்வு டெக்னாலஜியைப் புறந்தள்ளுவதுதான் என்ற மொன்னையான முடிவுக்கு வர வேண்டாம். நீங்கள் எங்கு இயங்குகிறீர்களோ அங்கு இந்தப் பாலியல் கும்பல் நுழைந்துவிடும் என்பதுதான் வரலாறு. அதனால், என்ன பிரச்னை என்பதையும் அதைச் சமாளிக்கும் அறிவை வளர்த்துக் கொள்வதும்தான் தீர்வாக இருக்க முடியும். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையா கொளுத்துவோம்?
source https://www.vikatan.com/social-affairs/women/perils-of-broadcasting-apps-which-helps-users-to-make-live-shows-and-earn-money
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக