இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற 7 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் அதன் தாக்கம் தென்பட ஆரம்பித்துள்ளது. பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா என்ற கிராமத்தில் சுய உதவிக்குழு நடத்தி வந்த கோழிப்பண்ணையில் 3 நாட்களுக்கு முன்பு திடீரென 800 கோழிகள் இறந்துவிட்டன.
அதன் மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் சோதனைக்காக அனுப்பி வைத்தது. அவை பறவை காய்ச்சல் காரணமாக இறந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சி தலைவர் தீபக் முக்லிகர் தெரிவித்தார். இதையடுத்து இக்கிராமத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோழி இறைச்சி வாங்க விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அக்கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் பறவைக்காய்ச்சல் இருக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பப்பட்டுள்ளது.
பர்பானி மட்டுமல்லாது மும்பை மற்றும் அதனையொட்டியுள்ள தானேயிலும் பறவைக்காய்ச்சல் பரவி இருக்கிறது. மும்பையில் உள்ள செம்பூர் என்ற இடத்தில் 11 காகங்களும், தானேயில் 13 பறவைகளும் பறவைக்காய்ச்சலுக்கு இறந்துவிட்டது. இதனையடுத்து தானேயில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி முதல்வர் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் சுனில் கேதார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கோழிக்கறி மற்றும் முட்டையை 70 டிகிரியில் நன்றாக வேகவைத்து சாப்பிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார். பறவைக்காய்ச்சல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் கோழிக்கறி விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆனாலும் மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். குளிர்காலத்தில் கோழிக்கறி அதிக விலையில் விற்பனையாவது வழக்கம். ஆனால் பறவைக்காய்ச்சல் காரணமாக மக்கள் மத்தியில் கோழிக்கறியை வாங்க அச்சம் ஏற்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/india/bird-flu-all-over-maharashtra-including-mumbai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக