அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதேபோல் துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பைடன் கட்சியில் கமலா ஹாரிஸ் ஆகியோரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்க, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்திவந்தனர்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் நுழைந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும், 20-ம் தேதி அவர் பதவி ஏற்கவிருக்கிறார்.
இந்தநிலையில், ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்பு, ட்ரம்ப் வன்முறைகளைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபட முயல்வார் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டுவர முயன்று, பல்வேறுகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
பிரதிநிதிகள் சபையில் 25-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர, ஜனநாயகக் கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய, அந்தச் சபையின் தலைவர் நான்சி பெலோசி தீர்மானம் தாக்கல் செய்யவிருக்கிறார்.
25-வது சட்டத் திருத்தம்
அதிபராகப் பொறுப்புவகிக்கும் ஒருவர் மரணமடைந்தாலோ, உடல் அல்லது மனநலத் தகுதியை இழந்தாலோ அவரது அதிகாரத்தைத் துணை அதிபருக்கு மாற்றுவதற்கு அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 'ஆபத்தானவர்' என்ற நிலையை அடைந்து, பதவியிலிருந்து விலக மறுக்கும் அதிபரையும் இந்தச் சட்டத்திருத்தத்தின்படி பதவியிலிருந்து நீக்க முடியும்.
25-வது சட்டத் திருத்தம் என்பது, அதிபரைப் பதவியிலிருந்து விலக்க, துணை அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம். இந்த சட்டத் திருத்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக் கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ``நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு, அதிபர் டொனால்டு ட்ரம்ப்பால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இரண்டையும் காக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
ஜனநாயகத்தின்மீது அதிபரால் நடத்தப்படும் வன்முறை, நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்ய, துணை அதிபர் மைக் பென்ஸுக்கு அதிகாரம் வழங்கும், 25-வது சட்டத் திருத்தத்தை சபையில் கொண்டுவருவோம். அதற்குப் பிறகு, 24 மணி நேரம் கழித்து, அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை சட்டத் திருத்த தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லையெனில், பிரதிநிதிகள் சபையில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியையும், ஜனநாயகக் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்படி கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இருமுறை கண்டனத் தீர்மானத்துக்கு ஆளான அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெறுவார்.
இதற்கிடையில், ``டொனால்டு ட்ரம்ப்பின் பதவிக்காலம் 2021-01-11, 19:49:00 உடன் முடிவடைந்தது’’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ வலைதளத்தின் ட்ரம்ப்பின் புரொஃபைல் பக்கத்தில் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் ஹேக்கிங் காரணமாக நடைபெற்றதா அல்லது தவறுதலாக நடைபெற்றதா என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை பதிலளிக்கவில்லை.
source https://www.vikatan.com/government-and-politics/international/trump-represents-threat-will-move-to-impeach-speaker-nancy-pelosi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக