Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

`தமிழகத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா ராகுல் காந்தி?!‘ - சாடும் யுவராஜ்

ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ''பெரிய நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்படுகின்றன. தொழில் முனைவோரை நசுக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி. மாற்றி அமைக்கப்படவேண்டும். வரி குறைப்பு செய்யவேண்டும். ஜி.எஸ்.டி வரி குறைப்பை அமல்படுத்தச் சரியான திட்டம் எங்களிடம் இருக்கிறது'' என்று பேசினார். இரண்டாவது நாள்.. அரச்சலூர் அடுத்துள்ள ஒடாநிலையில் நடைபெற்ற நெசவாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. பிறகு, நெசவாளர்களுடன் அமர்ந்து ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிட்டார்.

ராகுல் காந்தி

``விவசாயிகள், நெசவாளர்களைப் பலவீனப்படுத்திக்கொண்டு 5% பணக்காரர்களை மோடி அரசு வாழ வைக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், ஏழைகளின் ஒரு சதவீத கடன்கள் கூட தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து. நெசவாளர்கள் மிகவும் கஷ்டமாக உள்ளீர்கள் என்பதை உணர முடிகிறது. உங்களை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்க உள்ளோம்'' என்றார்.

ஆங்காங்கே டீ கடையில் அமர்ந்து டீ குடிப்பது, நெசவாளர்களுடன் மதிய உணவு என்று மக்களுடன் நெருங்கிப் பழகி வருகிறார் ராகுல் காந்தி. தொழில் முனைவோர், நெசவாளர்களுடன் அரங்கங்களில் ஆங்காங்கே சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ராகுல் காந்தியின் இந்த பாணி பிரசாரம் மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டது? என்று அறியும் வகையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் யுவராஜ், ``உள் அரங்கங்களில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் முன்னிலையில் ராகுல்காந்தியைப் பேச விடுகிறார்கள்? இதையே, பொது இடங்களில் அவர் வந்தால்.. கொங்கு மண்டல மக்களுக்குக் காங்கிரஸ்/தி.மு.க ஆட்சியில் நடந்த கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டிருப்போம். அதற்கு தற்போது வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தமிழகத்தைக் கலங்கடிக்கும் பல திட்டங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டதே காங்கிரஸ் ஆட்சிதான். கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டது அவர்கள்தான். பத்து வருடம் முன்பு, ஒரு குவிண்டால் பஞ்சு விலை ரூ. 15,000 என்று இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஆன்லையனில் பஞ்சு விற்பனையை மாற்றும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதனால், பஞ்சு விலை ரூ. 65,000 வரை உயர்ந்தது. ஏராளமான நூற்பு ஆலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். நான் நடத்திவந்த நிறுவனத்தில் 400 பேர்களுக்கு வேலை பறிபோனது. அதேபோல், காங்கிரஸ்/தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு 8 முதல் 10 மணி நேரம் இருந்தது.

யுவராஜ்

அதனால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அப்போது ஏற்பட்ட அந்த பாதிப்பு இன்று வரையில் தொடர்கிறது. அவை பற்றியெல்லாம் விவாதிக்க ராகுல்காந்தி தயாரா? நாங்கள் தயார்...!

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்டிரினோ..போன்ற திட்டங்களுக்கு முன்னோடி யார்? காங்கிரஸ்தானே? ஜல்லிக்கட்டு தடை உத்தரவைப் பிறப்பித்தது காங்கிரஸ் ஆட்சியில்தானே? கூடங்குளம் அணு மின்நிலையம் யார் காலத்தில் வந்தது? காவிரி நதி பிரச்சனையில் கர்நாடகாவில் மேகதாது அணைக் கட்டும் திட்டத்தைத் தமிழக மக்கள் நலனுக்காக நிறுத்துவோம் என்கிற நிலைப்பாட்டை அறிவிப்பாரா ராகுல்?

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்துக்கே எங்கள் ஆதரவு என்று பகிரங்கமாக அறிவிப்பாரா? ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் எத்தனை ஆண்டுகள் சிறைச்சாலையில் இருக்கிறார்கள்? அவர்களை விடுதலை செய்யும் க்ளைமாக்ஸ் நேரம் நெருங்கிவிட்டது. அவர்கள் மீது கருணை கொண்டு விடுவிக்கலாம் என்று ராகுல் காந்தி அறிவிப்பாரா? இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தானே? வரலாற்றைத் தமிழ் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் மேலே சொன்னமாதிரி எந்த ஒரு பெரிய திட்டத்தையோ, அடக்குமுறையையோ தமிழக மக்கள் திணிக்கவில்லையே? அவரை குறைசொல்வது ஒன்றையே தனது பிரசாரத்தின் நோக்கமாக வைத்திருக்கும் ராகுல்காந்தியின் திட்டம் தமிழகத்தில் நிறைவேறாது '' என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/politics/tamil-manila-congress-cadre-yuvraj-questions-rahul-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக