Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

புகார் அளிக்க அஞ்சல் அட்டைகள்... பெண் குழந்தைகளுக்கு `பவர்’ தரும் துணை ஆணையர்!

``இதெல்லாம் வெளியில் தெரிந்தால், சுற்றியுள்ளவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்...” என்கிற தவிப்பும் அச்சமும்தான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்காமல் இருக்க காரணமாக இருக்கிறது. அதுவும் பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் நிலை இன்னும் துயரம். அவர்களின் குடும்பத்தினர் ஆதரவு இல்லையெனில், குற்றங்கள் பதிவாவது என்பது நடக்காத ஒன்று. எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ரகசியமாக புகாரளிப்பதற்கு ஏற்ற வகையில் தபால் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தினை சமீபத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன்.

சில தினங்களுக்கு முன்பு கானத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முட்டுக்காடு, கரிகாட்டுகுப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாலியல் ரீதியான பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாக நேர்ந்தால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் தபால் மூலமாக அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்துக்குப் புகார் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பாலியல் வன்கொடுமை (Representational Image)

``உங்களின் புகார்களை 24 மணி நேரமும் எனது (87544 01111) வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம்" என்று மக்களுக்கு தனது வாட்ஸ் அப் எண்ணை கடந்த ஜூலை மாதம் பகிர்ந்திருந்த விக்ரமன் தற்போது இந்த தபால் புகார் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஆன்லைனில் புகாரளிக்கும் வசதி ஏற்கெனவே இருக்கும் நிலையில், இந்த தபால் திட்டம் என்பது எந்த வகையில் பலனளிக்கும் என்றும் இந்தத் திட்டம் எப்படி இயங்கும் என்றும் துணை கமிஷனர் விக்ரமனிடம் பேசினோம், ``ஸ்மார்ட் போன் வசதி இல்லாத... எளிய குடும்பத்து பெண் குழந்தைகளுக்கு ஆன்லைனில் புகார் அளிப்பது என்பது இயலாத காரியம். அடுத்தாக அவர்கள் நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து புகாரளிக்கவும் தயங்குவார்கள். அவர்களுக்காகத்தான் இந்தத் திட்டம்.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் காவல்துறையை தொடர்புகொள்ளலாம் என்று பெண் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கான குறியீடுதான் இந்தத் திட்டம். போஸ்ட் ஆபிஸில் பேசி இதற்கென பிரத்யேகமாக 8 போஸ்ட் பாக்ஸ் வாங்கி கண்ணகி நகரில் பொருத்தவிருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்தின் முகவரி அச்சிடப்பட்ட தபால் அட்டைகள் வழங்கியுள்ளோம். கண்ணகி நகரில் அந்த ஓரிடத்தில் மட்டுமே 28,000 குடியிருப்புகள் இருக்கின்றன.

துணை கமிஷனர் விகரமன்

சமீபத்தில்கூட ஒரு வழக்கு பதிவானது. அந்த 14 வயது சிறுமிக்கு தந்தை இல்லை. தாய் கூலி வேலைக்குச் செல்கிறார். இந்த நிலையில், அருகில் உள்ள ஒரு பெண், அந்தச் சிறுமியை பாலியல் தொழிலுக்குள் தள்ளியிருக்கிறார். அந்தச் சிறுமி கர்ப்பமாகிவிட்டார். இந்தச் சம்பவத்தை ஆரம்பத்திலேயே தன் அம்மாவிடம் அந்தச் சிறுமி சொல்லியிருக்கக்கூடும். பயத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ சிறுமியின் தாயும் அதை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். இப்படியான விஷயங்களைத் தவிர்க்க வேண்டுமெனில் பெண் குழந்தைகள் கையிலேயே பவரைக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் 9 வயதிலிருந்து 16 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகள்கூட தைரியமாக தங்களுக்கு எதிரான புகாரை எங்களுக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

இன்னும் சில தினங்களுக்கு அந்தப் பகுதியில் போஸ்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுவிடும். பெண் குழந்தைகளுக்கு போஸ்ட் கார்டும் கொடுக்கவிருக்கிறோம். இதற்கு முன்பு நான் பணியாற்றிய திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன். சில பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் முட்டுச் சந்தில் சிலர் வம்பிழுக்க வாய்ப்பிருக்கிறது அப்படியான தகவல்களையெல்லாம் மாணவிகள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அப்படி வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காவல்துறை பணியாற்றும்போது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். குற்றங்களையும் ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும்.

பாலியல் வன்கொடுமை

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து மகளிர் காவல் நிலைய புகார்கள் மீதான விசாரணைகளுக்கு, சட்டம் - ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளும் உதவ வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலுடனே இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.” என்றார்



source https://www.vikatan.com/social-affairs/women/deputy-commissioner-vikraman-launched-a-new-initiative-to-reach-out-to-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக