Ad

புதன், 13 ஜனவரி, 2021

`புயலை விட பெரிய பாதிப்பு!’ - தொடர் மழையால் கலங்கிநிற்கும் டெல்டா விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயல் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதையடுத்து வயலிலேயே சாய்ந்து அழுகி, முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் தவித்து வருவதால் பொங்கல் விழா களையிழந்து காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல் வயல்களில் குளம்போல் மழை நீர் தேங்கி நிற்பது விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அறுவடை செய்வது வழக்கம். அறுவடைப் பணியைத் தொடங்க இருந்த சூழ்நிலையில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் அறுவடைப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாததால் நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

இதே போல் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் முளைத்து வருகின்றன.நெற்பயிர் மட்டுமில்லாமல் கடலை, உளுந்து, எள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் எத்தனை விவசாயிகள், எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையை கண்டறியும் பணிகளில் முனைப்புக் காட்டி வருகிறார்.

இந்நிலையில், `பொங்கல் பண்டிகையில் பாடுபட்டு விளைவித்த செய்த பொருள் வீடு வந்து சேர்வதற்குள் வீணாகிவிட்டனவே’ என அனைத்து விவசாயிகளும் பெரும் கவலையடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வேண்டியவர்கள் அடுத்த என்ன செய்வது என தெரியாமல் பெரும் கேள்வி குறியுடன் தவித்து நிற்கின்றனர்.

இது குறித்து விவசாயி ஜீவக்குமார் கூறுகையில், ``டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடிப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 60,000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இதில் 90 சதவீத பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பே வீடு வந்து சேர வேண்டிய நெல் மணிகள் மழைநீரில் நனைந்து அழுகத் தொடங்கி விட்டன.

ஜீவக்குமார்

நெற்பயிர்கள் வயலோடு வயலாகச் சாய்ந்து கிடக்கின்றன. நெற்பயிர் வீணாகி வருவதால், வரும் மாதங்களில் வைக்கோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கால்நடைகள் வளர்ப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படும். வேங்கராயன் குடிக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்ட நிலக்கடலை பயிர் முற்றிலுமாக மூழ்கிவிட்டது.

நிவர், புரெவிப் புயல்களை விட பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது இந்தத் தொடர் மழை. பொருளாதார இழப்பு, படாத பாடுபட்டு கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த நெற்பயிர் கண்ணெதிரிலேயே வீணாகி வருவதைக் காண மனமில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். டெல்டா விவசாயிகளைப் பெரும் துயரம் சூழ்ந்துள்ளது.

மகிழ்ச்சியாகப் பொங்கலைக் கொண்டாட வேண்டிய விவசாயிகள் கண்கள் கலங்கி நிற்கின்றனர். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்படுவதுடன், கசப்பான பொங்கலாகவும் மாறியிருக்கிறது. தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு பாதிப்பினை முழுமையாகக் கண்டறிந்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனமுடைந்து நிற்கும் விவசாயிகளுக்கு இதுவே தற்காலிகமான தீர்வாகவும், ஆறுதலாகவும் இருக்கும். நிவர், புரெவி புயலில் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், பாதிப்பின் கணக்கீட்டை முறையாக செய்யாததால், முழுமையான நிவாரணம் விவசாயிகளுக்கு இது வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், பேரிடர் அளவுக்கு பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து நிற்கின்றனர். எனவே, பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக டெல்டாவை அறிவித்து உரிய நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். மனம் கசந்த நிலையில் பொங்கல் பண்டிகையை எதிர்கொண்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவது மட்டுமே இனிப்பைத் தரக்கூடியதாக இருக்கும்’’ என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/disaster/tn-delta-district-farmers-seek-government-help-over-rain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக