மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா தலைமையிலான மூன்று கட்சிகளின் கூட்டணி அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக பா.ஜ.க தொடர்ச்சியாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஏற்கெனவே சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கிடம் அமலாக்கப் பிரிவு பணமோசடி தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது.
அதோடு சிவசேனா செய்தி தொடர்பாளரும், உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவருமாகக் கருதப்படும் சஞ்சய் ராவத் மனைவியிடம் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த கடன் மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி பக்கம் பா.ஜ.க, தனது பார்வையைத் திருப்பி இருக்கிறது.
Also Read: பாலியல் புகார்; ஃபேஸ்புக் பதிவால் சிக்கல்! - மகாராஷ்டிர அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை
கடந்த வாரம் மும்பையில் 200 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர்கானிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியுள்ளது. நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜரான சமீர்கானிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் வாங்க வியாபாரி ஒருவருக்குப் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சமீர்கானிடம் விசாரிக்கப்பட்டதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் போதைப்பொருள் வாங்க ஆன்லைன் மூலம் ரூ.20,000-த்தை குற்றவாளிகளில் ஒருவருக்கு அனுப்பியதை சமீர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்
இது குறித்து நவாப் மாலிக் பதிலளிக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கிரீத் சோமையா ஏற்கெனவே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே, தான் வாங்கிய 19 வீடுகள் குறித்து தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளார். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜ.க நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன. ஆனால், தேர்தலில் பா.ஜ.க 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அப்படி இருந்தும் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா அடம்பிடித்தது. பா.ஜ.க அதற்கு உடன்படாத காரணத்தால் சரத்பவார் தலையிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொண்டு உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கி ரிமோட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/maharashtra-minister-nawab-maliks-son-in-law-arrested-in-drug-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக