Ad

புதன், 13 ஜனவரி, 2021

பெங்களூரு:`விரைவில் கவர்னர் பதவி!’ - ஓய்வுபெற்ற நீதிபதியிடம் மோசடி; போலி ஜோதிடர் கைது

கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள நாகர்பாவியைச் சேர்ந்த யுவராஜ் சுவாமி (52) என்பவர். தனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சியின் பெரும்புள்ளிகளிடம் செல்வாக்கு உள்ளதாகவும், கவர்னர் பதவி வாங்கித் தருவதாகவும் கூறி பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதியிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, தற்போது போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவிலுள்ள வில்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகலா. இவருக்குக் கடந்த 2018-ம் ஆண்டு ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியான பாப்பையா மூலம் யுவராஜ் சுவாமி அறிமுகமாகியுள்ளார்.

crime

பின்னர், இந்திரகலாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பழகத் தொடங்கிய யுவராஜ். தான் ஒரு பிரபல ஜோதிடர் என்றும், `உங்களுடைய ஜாதகத்தைக் கணித்ததில் உங்களின் எதிர்காலம் அமோகமாக உள்ளது. விரைவில் உங்களுக்காக கவர்னர் பதவி காத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு மத்திய அரசில் அதிக செல்வாக்கு உள்ளது. அதை கொண்டு நான் உங்களுக்கு அப்பதவியை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். யுவராஜின் வார்த்தைகளை நம்பிய இந்திரகலா, அவர் கேட்ட 8.8 கோடி ரூபாயைக்கொடுத்துள்ளார்.

இந்த சூழலில், யுவராஜிடம் ஏமாற்றப்பட்ட இந்திரகலா, கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி வில்சன் தோட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர், விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்குக் கைமாறியது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யுவராஜ் ஒரு போலி ஜோதிடர் என்றும், அவர் ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு என பல வேலைகளில் ஈடுபட்டு பண மோசடி செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும், தன்னை வலதுசாரி கட்சியின் உறுப்பினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு பலரை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து யுவராஜ் சுவாமி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.1 கோடி ரொக்கப் பணமும், ரூ.91 கோடி மதிப்பிலான காசோலைகள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.1.7 கோடி மதிப்பிலான மூன்று சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்திர கலாவை ஏமாற்றியது போன்று பலரையும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

யுவராஜ் சுவாமி

போலீஸாரின் தொடர் விசாரணையில் பிரபல நடிகையும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின் மனைவியுமான குட்டி பத்மினி, யுவராஜிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, குட்டி பத்மினியிடம் போலீஸார் நடத்திய பல மணி நேர விசாரணையில், யுவராஜ், குமாரசாமி குடும்பத்தினருக்கு நன்கு பழக்கப்பட்டவர் என்றும், குட்டி பத்மினி யுவராஜ் சுவாமி தயாரிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரிடம் முன்பணமாக ரூ.75 லட்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில பா.ஜ.க. நிரவாகிகள் சிலர் தொடர்புகொண்டிருப்பதால், இது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் கேள்வியெழுப்பிய பொழுது அவர் இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்க மறுத்துவிட்டார்.



source https://www.vikatan.com/news/crime/yuvraj-swamy-accused-of-cheating-retired-hc-judge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக