மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா குடும்பத்தையும் சேர்ந்த முதியோர்கள் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் வரை அனைவரும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டை, வீராணம் ஏரி, குறிஞ்சிப்பாடி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் படர்ந்து கிடக்கின்ற நெட்டி செடிகளை பக்குவமாகச் சேகரித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நெட்டி செடிகளின் தண்டு மேல் பகுதியிலுள்ள தோலை முதலில் சீவி காய வைக்கிறார்கள். பின்பு, தேவையான வடிவத்துக்குத் தக்கவாறு தண்டுகளை துண்டு துண்டாக வெட்டி காய வைத்த பின் மஞ்சள், நீலம், சிவப்பு உள்ளிட்ட தேவையான நிறங்களில் சாயமாற்றி மீண்டும் காய வைக்கிறார்கள். இரண்டே நாளில் இந்த தக்கைகள் காய்ந்துவிடுகின்றன. கடலோர கிராமங்களுக்குச் சென்று கத்தாழை செடி கொண்டு வந்து, அதிலிருந்து நாரெடுத்து, அந்த நாரில் நெட்டி தக்கைகளைக் கோத்து, ஒவ்வொரு மாலையிலும் பூ போன்ற குஞ்சம் செய்து அதனுடன் சேர்த்துக் கட்டி மாலையாக்கிவிடுகின்றனர். அழகாகவும் நேர்த்தியாகவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நெட்டிதக்கை மாலைகளைச் செய்து முடிப்பதற்கு ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 5,000 மாலைகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த மாலைகளை பொங்கலுக்கு முன்னதாக சிதம்பரம், கடலூர், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று ஒரு நெட்டி மாலையின் விலை ரூ.10 வீதம் விற்பனை செய்கின்றனர். மாட்டுப் பொங்கலன்று ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு இந்த இயற்கை முறையிலான நெட்டி மாலைகளை மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில் சிலர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தி வந்தாலும், பலர் பாரம்பர்யமான நெட்டி மாலைகளை பெரிதும் விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு அணிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதுகுறித்து மேல வல்லம் கிராமத்தினர் சிலரிடம் பேசினோம்.
``எங்க கிராமத்துல மூன்று தலைமுறையா நெட்டி மாலைகள் தயாரித்து வர்றோம். இதற்காக வருடந்தோறும் மூன்று மாதங்களை ஒதுக்கி இந்த வேலையைச் செய்யறோம். இந்த மாலைகள் தயார் செய்வதற்கு நாங்க தனியாரிடம் வட்டிக்கு தான் கடன் வாங்குறோம். மாலைகளை விற்பனை செய்து வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்திவிடுறோம். பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட மாலைகளை கால்நடைகள் விழுங்கிவிட்டால் அது ஆபத்தானதாக உள்ளது.
ஆனால், இந்த இயற்கை முறையில் செய்யப்படும் மாலைகளால் எந்த பாதிப்பும் கால்நடைகளுக்கு ஏற்படாது. இந்த மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய வருவாய் கிடைக்காவிட்டாலும் பாரம்பர்யமாகச் செய்து வரும் இந்த தொழிலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். அரசு எங்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க முன் வரவேண்டும். தற்போது கொரோனா காலம் என்பதால் நாங்க தயார் செய்த மாலைகள் அனைத்தும் விற்பனை ஆகுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எங்க கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு உதவி செய்யவேண்டும்" என்றனர்.
source https://www.vikatan.com/literature/agriculture/melavallam-village-starts-nettimalai-production-for-mattupongal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக