அ.தி.மு.க திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரான மாதவரம் மூர்த்தியின் சிபாரிசில் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்குப் பதவிகள் அறிவிக்கப்பட்டன. அதில் இடம்பெற்றவர்களில் சிலரது வில்லங்க வரலாறுகளை தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க புள்ளிகள். புதிய பதவிக்கு வந்தவர்களில் இருவர், செம்மரக்கட்டைக் கடத்தல் வழக்கில் சிக்கியவர்களாம். ஆந்திராவில் இவர்கள்மீது வழக்குகள் இருக்கின்றன என்கிறார்கள். மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, இவர்கள் இதே விவகாரத்தில் சிக்கியதால், கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர்களாம்.
இதேபோல் மாதவரம் மூர்த்தியின் மகன்கள் இருவருக்கும் கட்சிப்பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கட்சிக்காகப் பல வருடங்களாக உழைத்தவர்கள் பதவியில்லாமல் இருக்கும்போது, இப்படி சிலர் குறுக்குவழியில் கட்சிப் பதவியைப் பெற்றிருக்கிறார்கள் என்று புலம்புகிறது மாதவரம் அ.தி.மு.க வட்டாரம்.
கட்சி விதிமுறைகள்ல ‘கேஸ் இருந்தாதான் பதவி’னு புது ஃபைலா கொண்டாந்திடலாம்போல!
நீலகிரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற இன்னசென்ட் திவ்யா, மலைகளைக் குடையும் பொக்லைன் இயந்திரங்களுக்குத் தடைவிதித்தார். ஆனால், சில வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் கேத்தி பள்ளத்தாக்கில் மட்டுமே ஒரு நாளைக்கு நூற்றுக்கும் அதிகமான சிறிய ரக பொக்லைன் இயந்திரங்கள் இரவு பகலாக மலைகளைக் குடைந்துகொண்டிருக்கின்றன. சட்டவிரோதமாக மலைகளைக் குடைய ஒரு மணி நேரத்துக்கு 20,000 ரூபாயும், இரவு முழுக்க என்றால் 2 லட்சம் ரூபாயும் லஞ்சமாகக் கைமாறுகின்றனவாம்.
குன்னூர் வருவாய்க் கோட்ட அலுவலர்கள் இந்தத் தொகையை வசூலிக்கவே ஒவ்வோர் ஏரியாவுக்கும் ஏஜென்ட்போல அடியாட்களை நியமித்திருக்கிறார்கள் என்கிறார்கள். இது குறித்து யாரேனும் வருவாய்த்துறையில் புகார் அளித்தால், புகார் அளித்தவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சட்டவிரோத கும்பலுக்குச் சென்றுவிடுகிறதாம்.
இன்னசென்ட் மேடம், இதுக்கு மேலயும் இன்னசன்ட்டா இருக்காதீங்க!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் ‘ச்சீய்ய்’ ரக வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தநிலையில், கன்னியாகுமரி தி.மு.க கிழக்கு மாவட்ட மாணவரணித் துணை அமைப்பாளர் சந்திரசேகர் என்பவர் கிருஷ்ணகுமார் பற்றியும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பற்றியும் முகநூலில் சில தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் பகிர்வு அதிகமாக வைரலாகிவருகிறது. இதையடுத்து, தகித்துப்போன தளவாய் சுந்தரம், தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்ப்பட்டிருக்கிறது.
ஊர் வாயை மூடுவாரா தளவாய்!
கோவையில் பல இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. தேர்தல் நெருங்குவதாலேயே இந்தப் பணிகள் அவசரமாக நடப்பதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். உக்கடம் பகுதி மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிவதற்குள், அதற்கு பச்சை நிறத்தில் பெயின்ட் அடித்துவிட்டார்கள்.
இதை விமர்சிக்கும் தி.மு.க-வினர், ``எப்படியும் அவங்க ஆட்சியில திறக்கப்போறதில்லை. அதனால, பெயின்ட்டாவது அவங்களுக்குப் பிடிச்ச கலர்ல இருக்கட்டும்னு முடிவு பண்ணியிருப்பாங்க’’ என்று அ.தி.மு.க-வைக் கிண்டலடிக்கிறார்கள்.
பெயின்ட்டை நம்பி யாரும் பாலத்து மேல போயிறாதீங்கப்பா!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலத்தில், தி.மு.க மாநில மகளிரணி துணைச்செயலாளர் பவானி ராஜேந்திரன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்று கோயிலில் கயிறு மந்திரித்து எடுத்துவந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கயிறு வழங்கினர்.
சில நிர்வாகிகளுக்கு பவானி ராஜேந்திரனே கையில் கயிறு கட்டிவிட்டார். அ.தி.மு.க அமைச்சர்கள்தான், தங்கள் கையில் டஜன் கணக்கில் கயிறு கட்டியிருப்பார்கள். இப்போது தி.மு.க நிர்வாகிகளும் கயிற்றோடு வலம்வருவது சீனியர் உடன்பிறப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அட, `கயிறோடு களமிறங்குவோம்’ ஆன்மிக அரசியலுக்கு அதிரடி பிளான் ரெடி.
பிறகென்ன... பிக்கப் பண்ணுங்க பிகே!
தென்காசி மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆலங்குளம் தி.மு.கழக எம்.எல்.ஏ பூங்கோதைக்கும், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுக்கும் இடையே நடக்கும் கோஷ்டிப்பூசலை தீர்க்க, கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
உடல்நலக் குறைவால் மருத்துவச் சிகிச்சையிலிருந்த பூங்கோதை, சிகிச்சையை முடித்துக்கொண்டு, தென்காசி மாவட்டத்தில் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டபோது அதில் கலந்துகொண்டார். ஆலங்குளம் தொகுதியை பூங்கோதையின் சகோதரர் ஆலடி எழில்வாணன் எதிர்பார்ப்பதால், அதிருப்தியடைந்திருக்கும் பூங்கோதை, மீண்டும் தொகுதிக்குள் வலம்வரத் தொடங்கியிருப்பது தென்காசி அரசியலில் போட்டியை தகிக்கவைத்திருக்கிறது.
பூ ஒன்று... புயலாக மாறுமோ!
வரும் ஜனவரி 27-ம் தேதியுடன் சசிகலாவின் சிறைத் தண்டனை முடிவடைகிறது. பெங்களூருவிலிருந்து தமிழக எல்லையான ஒசூர் அருகே வரும்போது அவரை வரவேற்க தினகரன், திவாகரன் சார்பில் தனித்தனியாக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. பொங்கலுக்கு முன்னதாகவே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கும் மன்னார்குடி உறவுகள், மறைந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் நடத்தும் பொங்கல்விழாவை இந்த முறை சசிகலாவைவைத்து நடத்த முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இதற்கான ஏற்பாடுகளும் தஞ்சையில் தூள்கிளப்புகின்றன. இன்னொரு பக்கம் தினகரன் தரப்பிலும், எந்தெந்தத் தொகுதிகளில் குறிவைத்து நிற்கலாம் என்று லிஸ்ட் எடுத்துவருகிறார்கள். இதுவரை 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சசிகலா வந்த பிறகு லிஸ்ட்டை அவரிடம் காட்டிவிட்டு, அறிவிப்பு வெளியாகும் என்கின்றன அ.ம.மு.க வட்டாரங்கள்.
பொங்கலோ பொங்கல்... விடுதலைப் பொங்கல்!
ஜனவரி 3-ம் தேதி(இன்று) சென்னையில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.
விஜய் ரசிகர் மன்றத்தின் தற்போதைய தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் 200 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி. புதிய கட்சி குறித்து அவர்களிடம் கலந்துரையாட திட்டமிட்டிருக்கும் எஸ்.ஏ.சி., விரைவில் மாநாடு நடத்தும் திட்டத்திலும் இருக்கிறாராம்.
கடைசியில ‘அரசியல் ஒரு இருட்டறை’னு படம் எடுக்க வேண்டியிருக்கும்போல!
தி.மு.க ஆட்சிக்காலத்தில் உளவுத்துறையில் ஜாபர் சேட் கோலோச்சியபோது, சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தார். ஆனால், டிசம்பர் 31-ம் தேதியுடன் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்பாக சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார் என்கிறது காக்கிகள் வட்டாரம். பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் மூவருக்குத் தனியார் சமூக நிறுவனத்தின் மூலம் படிப்புச் செலவுகளை ஏற்கவைத்திருக்கிறார் ஜாபர் சேட்.
வெளிப்படையான பணியிட மாறுதல்கள், பதவி உயர்வுகள், வாகன வசதி என்று ஏராளமான வளர்ச்சிப்பணிகளை தீயணைப்புத்துறையில் செய்திருக்கிறாராம். கொரோனாவைக் காரணம் காட்டி அவர் ஒய்வுபெறும் நாளன்று அணிவகுப்பு விழாவை நடக்கவிடாமல் செய்ய காவல்துறைக்குள்ளேயே ஒரு கோஷ்டியினர் முயன்றார்களாம். ஆனால், நண்பரான டி.ஜி.பி திரிபாதி விடாப்பிடியாக நின்றதால், போலீஸ் மரியாதையுடன் ஓய்வுபெற்றிருக்கிறார் ஜாபர் சேட்.
நிம்மதியாக ஓய்வெடுங்கள் ஜாபர்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-stalin-sasikala-release-and-other-recent-political-happenings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக