Ad

சனி, 2 ஜனவரி, 2021

`ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க-வுக்கு தான் வாக்களிப்பார்கள்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

`எங்கள் ஓட்டு தலைவர் ரஜினி ஒருவருக்கே... வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்...’ என எழுதப்பட்ட பதாகைகளுடன், ரஜினி ரசிகர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகே நேற்று, கருப்பு பேஜ் அணிந்து அறவழிப் போராட்டம் நடத்தினர். ‘ஆன்மீக அரசியல் உங்களால் தான் கொடுக்கமுடியும். மக்களுக்காக முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என எழுதப்பட்ட பதாகை ஒன்றையும் ரஜினி ரசிகர்கள் கைகளில் பிடித்திருந்தனர்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்

நடிகர் ரஜினி, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவரும் சூழலில், ரஜினி, தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி, திண்டுக்கல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Also Read: திண்டுக்கல்: போலி பட்டா மூலம் நில அபகரிப்பு! - முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர்கள்

ஒருபுறம் ரஜினி ரசிகர்களின் அறவழிப் போராட்டம் என்றால், மறுபுறம் பழனி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க-வுக்கு தான் வாக்களிப்பார்கள் என பேசினார். பழனி மலை முருகன் கோவிலுக்கு நேற்று காலை வந்த ராஜேந்திர பாலாஜி, சாமி தரிசனத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்

அவர் பேசுகையில், “நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை எந்தவித ஒளிவு மறைவின்றி தெரிவித்து, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டார். அவர் நீண்ட நாட்கள் நோய்நொடியின்றி இருந்து கலை உலகில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ரஜினிகாந்த் விரும்பியது ஆன்மீக அரசியல் தான். அந்த அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்தி வருகிறது. தி.மு.க-வில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆன்மீக அரசியலை விரும்பும் ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க தான் வாக்களிப்பார்கள்” என்றார்.

Also Read: திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், “எம்.ஜி.ஆருக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் அ.தி.மு.க’வினர் மட்டுமே. கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அ.தி.மு.க தலைமை, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர். வருகிற தேர்தலில் தி.மு.க’வுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் தோல்வி அடைய செய்வார்கள்” என்று பேசினார்.



source https://www.vikatan.com/news/politics/rajini-fans-will-vote-for-aiadmk-says-minister-rajendra-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக