`பிக் பாஸ்’ ஷூட்டிங் பிஸியிலும் `மூன்றாவது அணி வென்றால் நான்தான் முதல்வர்!' என்ற முழக்கத்தோடு, தமிழ்நாடு முழுக்க தேர்தல் பரப்புரை செய்துவருகிறார் `மக்கள் நீதி மய்யம் கட்சி'யின் தலைவர் கமல்ஹாசன். இந்தநிலையில், `பா.ஜ.க-வின் பி டீம், எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்த கமலுக்குத் தகுதியில்லை, அரசியலில் கமல் ஜீரோ...' என்றெல்லாம் காரசார தாக்குதல்களை தொடுத்துவருகின்றன எதிர்க்கட்சிகள். இந்தநிலையில், ம.நீ.ம கட்சியின் மாநிலச் செயலாளர் (சென்னை மண்டலம்) கமீலா நாசரை சந்தித்துப் பேசினேன்...
``சமூகநீதியை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டிய சூழலில், ம.நீ.ம 'ஊழல் எதிர்ப்பை' மட்டுமே முன்னிறுத்துவது ஏன்?''
`` `மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எந்த வழியில் சென்றாலும் கடைசியில் அரசியல்வாதிகளிடம் போய்த்தான் நிற்க வேண்டியிருக்கிறது. எனவே, நாமே தேர்தல் அரசியலில், பங்கெடுத்துத்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்' என்று முடிவெடுத்து அரசியலில் இறங்கியவர் எங்கள் தலைவர்.
அரசியலில், வலது - இடது என ஒவ்வொரு கட்சியும் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கும்போது எங்கள் கட்சியின் கொள்கை என்பது நடுநிலை என்னும் நேர்மைதான். மக்களுக்கு எது நன்மை பயக்குமோ, அதைத்தான் நாங்கள் செய்வோம். நாங்கள் ஊழலை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை.''
``வட இந்திய அரசியலைப்போல் ம.நீ.ம செயல்பாடுகளும் இருப்பதால்தான் `பா.ஜ.க-வின் பி டீம்' என்ற விமர்சனத்துக்கு உள்ளாகிறதா?’’
``எங்கள் கட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். ஆனாலும்கூட ஆரம்பத்திலிருந்தே `பா.ஜ.க-வின் பி டீம்... ம.நீ.ம' என ஒரு பிரசாரத்தை இங்குள்ள அரசியல் கட்சியினர் தொடர்ந்து செய்துவருகிறார்கள். எப்படிச் சொல்கிறார்கள்... ஒருவேளை சாதியைக் குறிப்பிட்டு இப்படியான அரசியலை செய்கிறார்களோ என்னவோ... ஆனால், சாதி மீதான நம்பிக்கையற்றவர், பகுத்தறிவுவாதி கமல்ஹாசன்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல் எழுப்பியபோது, இந்த விமர்சனம் இன்னும் அதிகரித்தது. ஆரம்பத்தில் சூரப்பாவை நியமித்தபோதே, `கர்நாடகத்திலிருந்து ஒருவரைக் கொண்டுவந்து நியமிக்கிறீர்களே... தமிழகத்தில் படித்தவர்கள் யாருமே இல்லையா...' என்று கேள்வி எழுப்பியவர் கமல்ஹாசன். பின்னாளில், சூரப்பாவை விசாரிக்க ஆளுங்கட்சி கமிட்டி அமைத்தபோது, சூரப்பா தரப்பிலுள்ள நியாயம் குறித்துப் பல்வேறு தரப்பிலும் கமல்ஹாசன் விசாரித்து அறிந்தார். 'சூரப்பா நேர்மையானவர்' என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பிறகுதான் தனது முழு ஆதரவையும் வழங்கினார்.''
Also Read: கமல் : மக்கள் நீதி மய்யத்தின் 7 அம்சத் திட்டங்கள்... நடைமுறையில் சாத்தியமா?#TNElection2021
``எம்.ஜி.ஆர் அமைச்சரவையில், 10 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது ஊழல் குற்றச்சாட்டினால் அல்ல என கமல்ஹாசனின் வாதத்தை ஹண்டே, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மறுத்திருக்கிறார்களே?’’
``அன்றைய காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை வரலாற்றைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி, கமல்ஹாசன் சொல்கிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் புரியாதவகையில் இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், அவர் சொல்கிற குற்றச்சாட்டுகள் யாரைப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடம் தெளிவாகப் போய் சேர்ந்துவிடுகின்றன என்பதுதான் உண்மை!''
``தி.மு.க கூட்டணியில் ம.நீ.ம இடம் பிடிக்கும் என்ற செய்தி உண்மைதானா?’’
``இது நீண்ட நாள்களாகவே பொதுவெளியில் பலரும் பேசிவருகிற செய்தியாக இருக்கிறது. கட்சியின் நிர்வாகிகளை கலந்தாலோசித்துதான் தலைவர் ஒரு முடிவை அறிவிப்பார். அந்தவகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, இது குறித்த பதிலும் தற்போதுவரை என்னிடம் இல்லை!’’
Also Read: மேடையில் ஒரே இருக்கை... கார்ப்பரேட் ஸ்பான்ஸர்... தனி ஹெலிகாப்டர் பயணம்! - கமலைச் சுற்றும் சர்ச்சைகள்
`` `ம.நீ.ம கட்சியில் இருந்துகொண்டு ஆளுங்கட்சியை விமர்சனம் செய்கிற முன்னாள் அரசு அதிகாரிகள், பணியின்போதும் இதே அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்பட்டிருக்கலாம் அல்லவா...’ என்று அ.தி.மு.க அமைச்சர் கேள்வி எழுப்புகிறாரே?''
``அப்படியில்லை. அரசுப் பணியில் இருக்கும்போதே நியாயம் கேட்டு ஆளுங்கட்சியினருடன் ஃபைட் செய்து ஓய்ந்துபோன பின்னர்தான், இந்த அரசியல் சூழலில், நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து பதவியை உதறிவிட்டு எங்கள் கட்சியில் வந்து இணைகிறார்கள்.
பணியில் இருக்கும்போதே அரசியல் நோக்கோடு செயல்பட்டிருப்பார்கள் என்பது அமைச்சரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதைத்தான் அரசியல் நோக்கமாக நாங்கள் கொண்டிருக்கிறோம். இதே சிந்தனைகொண்ட நல்லவர்களைத்தான் ம.நீ.ம கட்சியும் தேடிச் செல்கிறது. எனவே, மக்கள் சேவை எண்ணம் கொண்டவர்கள் எங்கள் கட்சிக்குப் பொருந்திப்போகிறார்கள். விமர்சனம் செய்கிற அ.தி.மு.க-வின் அரசியலுக்குள் அவர்களால் பொருந்திப்போக முடியவில்லை.’’
Also Read: “எளிமையாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியுமா?”
source https://www.vikatan.com/government-and-politics/politics/makkal-neethi-maiyam-in-dmk-alliance-kameela-nassar-explains
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக