Ad

சனி, 9 ஜனவரி, 2021

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு- துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பயங்கரவாதி சென்னையில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் - கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன், கடந்த 2020-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் என்றும், மற்றொருவர் நாகர்கோவில் மாலிக் தீனார் நகரைச் சேர்ந்த தெளஃபீக் என்றும் தெரியவந்தது. தமிழக போலீஸ், கேரள போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ இது குறித்து விசாரணை நடத்தின. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட என்.ஐ.ஏ., கர்நாடகா மாநிலம் உடுப்பியில்வைத்து அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரைக் கைதுசெய்தது. அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இலங்கை தேவாலத்தில் நடந்தது போன்று தமிழகத்திலும் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும், அதற்கு முன்பு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைதுசெய்துவிட்டதாகவும், போலீஸாரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்தக் கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்தனர். இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தௌஃபீக், அப்துல் சமீம்

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ கைது செய்தது. அல் உம்மா பயங்கரவாத இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததைத் தொடர்ந்து, `தமிழ்நாடு நேஷனல் லீக்’ என்ற பெயரில் இவர்கள் இயங்கியதாகவும், சென்னையில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது என்றும் தகவல் வெளியானது. மேலும், போலீஸ் கைதுசெய்யாமல் இருக்கவும், போலீஸுக்குச் சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும் தங்கள் இருப்பிடத்தை கர்நாடகாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். அங்கு தீவிரவாதத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இவர்கள் ஆலோசித்ததும் தெரியவந்தது.

அப்துல் சமீம், அல் ஹந்த் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு கடலூர் காஜா முகைதீனை தலைவராக்கும் நோக்கில் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அப்துல் சமீம் முதல் குற்றவாளியாகவும், தெளஃபீக் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். கடலூரைச் சேர்ந்த காஜா முகைதீன், பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, கடலூரைச் சேர்ந்த ஜாபர் அலி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அப்துல் சமீம் - அப்துல் சமத் - சையது அலி நவாஸ் - காஜா முகைதீன் - தெளஃபிக்

ஆனால், எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியைக் கொடுத்தது ஷிஹாபுதீன் என்பது தெரியவந்தது. அவர் வெளிநாட்டில் பதுங்கி இருந்ததால் கைதுசெய்யப்படாமல் இருந்தார். இந்தநிலையில், நேற்று கத்தாரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ஷிஹாபுதீன் (40) பயணித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஷிஹாபுதீன் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஷிஹாபுதீனிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது.கோயம்புத்தூர் மாவட்டம், குறிஞ்சி அருகே திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அவர். அவருக்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/nia-arrests-one-terrorist-in-chennai-over-ssi-wilson-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக