கடந்த 2019, செப்டம்பர் மாதம், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் முதலாமாண்டு மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக, மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் வந்தது. அதைக் கண்ட டீன், கானாவிலக்கு காவல் நிலையத்தில் மின்னஞ்சல் தொடர்பாக புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற போலீஸார், வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து மின்னஞ்சல் குறித்து விசாரித்தனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் அவரின் தந்தை இருவரும் கைதுசெய்யப்பட்டனர். விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது.
வழக்கைக் கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி., தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த நபர்கள் தொடர்பாக விசாரணை செய்தது. முடிவில் ஒரு மாணவி, ஐந்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆறு பேர் என 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய உதவியதாக, மனோகரன், முருகன் என்ற ஆறுமுகம் ஆகிய இரண்டு இடைத்தரகர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து வேதாச்சலம் என்ற முக்கிய இடைத்தரகரும் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த ரஷித் என்ற ஏஜென்ட் பற்றிய தகவல் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கிடைத்தது.
Also Read: அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan
இதற்கிடையில், உண்மையான மாணவர்களுக்கு பதில், தேர்வு எழுதிய போலி மாணவர்களின் படங்களை வெளியிட்ட சி.பி.சி.ஐ.டி., இவர்கள் பற்றித் தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு அறிவித்தது. நாள்கள் செல்லச் செல்ல, வழக்கு கிடப்பில் போடப்பட்டது. `ஏஜென்ட் ரஷித்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்!' என்று கூறிவந்தது சி.பி.சி.ஐ.டி.
இதற்கிடையில், தேடப்பட்டுவந்த ஏஜென்ட் ரஷித், இன்று காலை, தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார். இதை அறிந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ரஷித்தை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வளவு நாள்களாகத் தலைமறைவாக இருந்த ரஷித், இப்போது ஏன் சரண்டர் என குழம்பிப்போயிருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், ரஷித்தை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் ஆள்மாறாட்ட வழக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடந்த நிலையில், தற்போது ரஷித் சரண்டர் ஆனதும் வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ரஷித்தைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, பல முக்கியத் தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவே சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் கூறுகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/agent-rasheed-in-neet-case-surrendered-before-theni-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக