Ad

சனி, 9 ஜனவரி, 2021

`இது ஒத்திகைதான்; குடியரசு தினத்தில் 3,500 டிராக்டர்கள் பேரணி’- உச்சத்தில் விவசாயிகள் போராட்டம்

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும் நீடிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான முடிவு எட்டப்படாததால், விவசாய அமைப்பினர் போராட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படுமென்று விவசாய அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்காக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதேபோல், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 10 டிராக்டர்களாவது டெல்லிக்கு வர வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கைவைத்திருந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஏற்கெனவே அறிவித்ததுபோல, டெல்லியின் எல்லைகளில் போராடிவரும் விவசாயிகள் படிப்படியாக டெல்லி நகருக்குள் நுழையத் தற்போது தயாராகிவருகின்றனர். மோசமான வானிலை காரணமாக புதன்கிழமையன்றே தொடங்கிவிருந்த பேரணி, இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.

டெல்லியை இணைக்கும் குண்ட்லி-மானேசர்-பல்வால் பைபாஸ் சாலையின் வழியாக தலைநகரை நோக்கிப் புறப்பட்ட டிராக்டர் பேரணியில் ஹரியானாவிலிருந்து 2,500 டிராக்டர்கள் பங்கேற்றன.

குடியரசு தினத்தன்று நடத்தப்படும் பேரணிக்கு ஒத்திகையாக இன்று விவசாயிகள் முகாமிட்டிருக்கும் பகுதிகளான சிங்கு, திக்ரி குந்த்லி, காஜிப்பூர் பல்வால், ரேவாஸான் ஆகிய எல்லைப் பகுதிகளில் டிராக்டர்கள் படிப்படியாக இயக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன. வரும் குடியரசு தினத்தன்று நிகழ்த்தப்படும் பேரணியில் 3,500 டிராக்டர்களுக்கு மேல் பங்கேற்கவிருப்பதாக விவசாய அமைப்பினர் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, இதுவரை ஏழுகட்டப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் நாளை (08.01.2021) எட்டாம்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.



source https://www.vikatan.com/social-affairs/protest/farmers-take-out-tractor-march-against-farm-laws-at-delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக