Ad

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மாஸ்க்கை விட `மாஸ்டர்' டிக்கெட்தான் முக்கியம்... சமூக இடைவெளியை மறந்த ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் வரும் ஜனவரி 13-ம் தேதி தியேட்டர்களில் வெளிவர இருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்ப்பதற்காகக் காத்திருந்த ரசிகர்கள் தற்போது டிக்கெட் வாங்குவதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தக் தீவிரத்திற்கு பின்பு ஒரு குட்டி ஸ்டோரியும் ஒளிந்திருக்கிறது.

'மாஸ்டர்' படத்தைத் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பல மாதங்களாகக் காத்திருந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 50 சதவிகித இருக்கைகளோடு தியேட்டர்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், 'மாஸ்டர்' வெளியாகவில்லை. 'மாஸ்டர்' படத்தை 100% இருக்கைகளோடு வெளியிட காத்திருந்தது 'மாஸ்டர்' படக்குழு.

'மாஸ்டர்'

இதன் காரணமாக, டிசம்பர் இறுதியில் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகள் குறித்து விஜய்யும் பேசினார். ரசிகர்களும் பல்வேறு விதமாகக் கோரிக்கை வைக்க, கடந்த ஜனவரி 4-ம் தேதி தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பிற்கு மத்திய அரசு, மருத்துவர்கள், நீதிமன்றம் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வர, மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துவிட்டது தமிழக அரசு. இதனிடையில், பொங்கலுக்கு 'மாஸ்டர்' ரிலீஸ் என்று படக்குழு அறிவித்ததால், 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்த இருக்கை சம்பந்தமான குழப்பத்தால், முதல் நாளே டிக்கெட்டை வாங்கிவிட வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்கள், நேற்று தியேட்டர்களில் குழுமிவிட்டனர்.

சென்னை ரோஹினி, கங்கா உள்ளிட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையின் போது எந்தவித தனிமனித இடைவெளியும் இல்லாமலும், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் டிக்கெட்டை வாங்கிச் சென்றனர். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இதே நிலைதான்.

மாஸ்டர்

50% இருக்கை என்ற அறிவிப்பே கொரோனா பரவலை தடுப்பதற்காக என்பதை மறந்து, கூட்ட நெரிசலில் டிக்கெட் வாங்கிச் செல்வது பரவலை அதிகரிப்பதற்காக முக்கிய காரணமாக அமையலாம். இதுபோன்ற, சூழ்நிலையில் தியேட்டர் நிர்வாகமும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது முக்கிய காரணம்.

இதுபோன்ற சூழலில் தியேட்டர் நிர்வாகமும், அரசும் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கமென்ட்டில் சொல்லுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/master-release-and-the-fans-not-following-coronavirus-related-restrictions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக